ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு

இந்தியாவின் தகவல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு , ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட "69A" என்ற  பெயரில் ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று தற்போது அம்பலமாகியுள்ளது.

2002-ஆம் ஆண்டு குஜராத் படுகொலைக்கு சில நாட்களுக்குப் பின் BBC நிறுவனம் மோடியிடம் நேர்காணல் எடுத்தபோது கேள்வி ஒன்றைக் கேட்டது. ”இப்போது நீங்கள் (குஜராத் கலவரத்தை) திரும்பிப் பார்க்கும் போது இது குறித்து ஏதாவது ஒரு விஷயத்தை வேறுவிதமாக செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?” என்பதுதான் அந்தக் கேள்வி.

அதற்கு மோடியின் பதில்: ”ஆம். ஊடகங்களை எப்படிக் கையாள்வது என்ற விஷயத்தில் நான் அப்போது பலவீனமானவனாக இருந்தேன்”

இந்த கேள்வியும் அதற்கான மோடியின் பதிலும் சமீபத்தில் BBC வெளியிட்ட 2002 குஜராத் படுகொலை பற்றிய ஆவணப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

ஆனால் இங்கே நாம் ஒரு கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் கால் பரப்பியுள்ள மிகப்பெரிய நிறுவனமான BBC-யின் மீது, குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அதன் அலுவலகங்களில் சோதனையை ஏவிவிட்டது மோடி அரசு. அப்படியானால், இந்தியாவில் எளிய மக்களின் குரல்களாக இருக்கும் சிறிய ஊடகங்களின் நிலை என்ன?

2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் தனக்கு தெரியாத கலையான ”ஊடகங்களை கையாள்வதை” தற்போது மோடி கற்றுக்கொண்டுவிட்டார். ஊடகங்களை தவிர்ப்பதற்கு மட்டுமல்ல, கடந்த 10 வருடம் பிரதமராக இருந்து ஊடகங்களின் குரல்வளையை எப்படி நெரிப்பது என்பதையும் மோடி கற்றுக்கொண்டுவிட்டார்.


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!


2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஊபா சட்டம் உட்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சமகால இந்தியாவில் அரசாங்கத்தை கேள்வி கேட்கும், அரசின் கொள்கைகளை விமர்சனம் செய்யும் பத்திரிக்கையாளராக இருப்பதன் ஆபத்துகளைக் காட்டுகிறது.

அரசு மக்களுக்கு இளைத்த கொடுமைகளைக் கேள்வி கேட்ட, செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். சமீபத்தில் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதல் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஊடகங்களுக்கு இரட்டை அளவுகோல்களை வைத்திருக்கிறது மோடி கும்பல். தங்களுக்கு  சாதகமாக செய்திகளை வெளியிடும் அர்னாப் கோசுவாமி போன்றவர்களின் ஊடகங்களுக்கு விளம்பரங்களும் சலுகைகளும் கொடுக்கிறது. மோடி அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தும் ஊடகங்கள் மீது அமலாக்கத்துறையை ஏவிவிடுவது, மிரட்டுவது, முடக்குவது என ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது; அல்லது ஊடகங்களின் பங்குகளை கைபற்றி அவற்றை விலைக்கும் வாங்குகிறது.

சமீபத்தில் அதானியின் நிறுவனம் NDTV-யின் பெரும்பான்மை பங்குகளை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து ரவீஷ் குமார் என்ற மூத்த பத்திரிகையாளர் NDTV-யில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த ரவீஷ் குமார் தான் மோடி கும்பலுக்கு ஜால்ரா அடிக்கும் ஊடகங்களுக்கு “கோடி மீடியா” என்ற பொருத்தமான பெயரைக் கொடுத்தவர்.

இப்படி சமகாலத்தில் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் அவரசநிலை காலத்தைவிட மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள்.

இந்திரா காந்தி கொண்டு வந்த அவரசநிலை காலத்தில் பத்திரிகைகள் அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வெளியிடப்பட்டன. ஆனால் மோடி ஆட்சியில் பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் தங்களது கருத்துகளை வெளியிட்ட பின்பு அரசு நிறுவனங்களால் வேட்டையாடப்படுகின்றனர். கருத்து சுதந்திரம் என்பது தற்போது பெயரளவிற்கு இருந்தாலும், கருத்து சொல்லிய பிறகு இங்கு நிம்மதியாக வேலை செய்யமுடியாது  என்ற வகையில் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு ஊடகங்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பது அல்லது ஊடகங்களை  விலைக்கு வாங்கி பத்திரிகைகளை தனது பாசிச நோக்கங்களுக்காக பயன்படுத்துவது போன்ற அனைத்து உத்திகளையும் கையாள்கிறது பாஜக கும்பல்.


படிக்க: “நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!


சமீப காலங்களில் மோடி அரசின் கொள்கைகளால் நிகழ்ந்த அவலங்களையும், மக்கள் மீதான அடக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த டிஜிட்டல் ஊடகங்களும் இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பவில்லை. டிஜிட்டல் மீடியா பரந்த அளவிலான பார்வையாளர்கள்/வாசகர்களிடம் வேகமாகக் கொண்டு சேர்ப்பது; ஒரு செய்தியை வைரலாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது. மேலும் அச்சுப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை விட டிஜிட்டல் ஊடகம் மலிவானது, மக்களிடம் அதிகம் சென்றடையக் கூடியது என்பதால்  மோடி கும்பல்  டிஜிட்டல் ஊடகங்களை  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான சட்டத்தை (2021) இயற்றி, அதன்மூலம் அதனையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் துடிக்கிறது.

மோடி ஆதரவு தொலைக்காட்சி ஊடகங்கள் செய்யும் இந்துத்துவ பரப்புரைகளையும் மோடியின் போலிப் பிம்பத்தையும் உடைப்பதில் டிஜிட்டல் ஊடகங்களுக்கு முக்கிய பங்கிருந்தது என்பதால் அதையும் விழுங்கப் பார்க்கிறது காவி கும்பல்.

டிஜிட்டல் ஊடகத்தளங்களின் எண்ணிக்கையானது அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை விட அதிகமாக உள்ளது. நூறாயிரக்கணக்கான செய்தி வலைத்தளங்கள் இருக்கின்றன. இவற்றில் வெளியிடப்படும் செய்திகள் பாஜக கும்பலுக்கு உவப்பானதாக இருந்தால் அதனை போலிச் செய்தி என்று முத்திரை குத்தி நீக்கும் அதிகாரத்தை இந்த புதிய சட்டம் அரசிற்கு வழங்கியுள்ளது. அந்த செய்தியை குறிப்பிட்ட நேரத்திற்குள் நீக்கவில்லை என்றால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன்மூலம் இனிமேல் அரசை விமர்சிக்கும் எல்லா செய்திகளும் போலிச் செய்திகளாக மாற்றப்பட்டு நீக்கப்பட்டுவிடும் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது பாசிச பாஜக கும்பல்.

இந்த சட்டம் இணைய செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களையும் கட்டுப்படுத்தும். இந்த சட்டத்தைக் கொண்டு ட்விட்டர் நிறுவனத்தை மோடி கும்பல் எப்படி வேட்டையாடியது என்பதை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தகவல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு , ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட “69A” என்ற  பெயரில் ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று தற்போது அம்பலமாகியுள்ளது. அந்த கூட்டங்களில் மோடி அரசை விமர்சித்து பதிவிடப்படும் பதிவுகளை ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவை” என்று கூறி அவற்றை நீக்கச் சொல்லும் ஆணைகளை இந்திய அதிகாரிகள் வழங்கியதாகவும், மேலும்  இந்த சமூக வலைத்தளங்கள் எந்த மாதிரியான பதிவுகளை அனுமதிக்கலாம், எவற்றை அனுமதிக்கக்கூடாது என்பதைப் பற்றிய பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் ஒரு சில ட்வீட்களை மட்டும் அகற்றுமாறு கேட்டுக்கொண்டிருந்த  அதிகாரிகள்,  ஒருகட்டத்தில் முழு கணக்குகளையும் அகற்ற வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கிவிட்டனர். நூற்றுக்கணக்கில் சமூக வலைத்தள கணக்குகளை  நீக்கச் சொல்லி அரசாங்க அதிகாரிகளிடமிருந்து  உத்தரவுகள் வந்ததாகவும், இதை மறுக்கும் பட்சத்தில் சமூக வலைத்தள‌ நிறுவனங்களின்  நிர்வாகிகள்  சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அவர்களின் நிறுவனங்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று மிரட்டப்பட்டனர்.

இதற்கு ட்விட்டர் நிறுவனம் மட்டுமே ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் ட்விட்டரின் புது டெல்லி அலுவலகத்திற்கு பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரை  மோடி கும்பல் ஏவிவிட்ட பிறகு, ட்விட்டர் அதன் உயர்மட்ட இந்திய நிர்வாகியை நாட்டை விட்டு வெளியேற்றியது. இந்த வகையில் மோடி கும்பல் புதிய விதிமுறைகள்,  தணிக்கை செயல்முறை மற்றும் சட்ட  முகமைகள் ஆகியவற்றின் கொடுங்கரத்தைக் கொண்டு ட்விட்டரின் எதிர்ப்பை முறியடித்தது.

அரசின் மீதான விமர்சனங்களை  பொதுமக்கள் பதிவு செய்யும் தளமாக செயல்படும் சமூக ஊடகங்களை கொடுங்கரத்தை பயன்படுத்தி எப்படி ஒடுக்குவது என்ற இழிந்த படிப்பினைகளை உலக நாடுகளுக்கு மோடி கும்பல்  கற்றுக் கொடுத்துள்ளது. இதை முன்மாதிரியாக வைத்து, பிற நாட்டின் அரசுகளும் மக்களின் சுதந்திர சித்தத்தை ஒடுக்க பயன்படுத்தும்.

பொதுவாக எந்த அரசாங்கமாக இருந்தாலும் எதிர்க்கருத்துகளை விரும்பாது. ஆனால் பாசிச மோடி அரசாங்கமோ அரசு நிறுவனங்களைக் கொண்டு சட்டப்பூர்வமாக ஒழுங்கமைந்த முறையில் எதிர் கருத்துக்களை கடுமையாக ஒடுக்க புதிய  வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.

ட்விட்டர் போன்ற நிறுவனங்களின்‌ எதிர்ப்புகள் முறியடிக்கப்பட்டன என்றால் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இயல்பாகவே பாசிச பாஜகவுடன் கூட்டமைத்து செயல்பட்டு வருகின்றன.

“முஸ்லீம் குடியேறிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று பேசிய பாஜக அரசியல்வாதியான டி. ராஜா சிங் என்பவனின் பேஸ்புக் கணக்கை “ஆபத்தான தனிநபர்” என்று வகைபடுத்தவேண்டும் என்ற பேஸ்புக் ஊழியர்கள் கருத்து தெரிவித்தனர். ”அந்த அரசியல்வாதியை  தண்டிப்பது, இந்தியாவில் பேஸ்புக்கின் வணிக வாய்ப்புகளை பாதிக்கும்” என்று பேஸ்புக் அதிகாரியான அங்கி தாஸ் அப்போது பாஜகவிற்கு ஆதரவாக  வாதிட்டதாக வல் ஸ்ட்ரீட் ஜர்னல் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஊடகங்களின் தற்போதைய நிலைமை இதுதான். ஒருபுறம் விலைபோன ஊடகங்கள் பாஜக கும்பலுக்கு ஒத்து வாசிக்கின்றன. இவை மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளை மறைக்கின்றன, நியாயப்படுத்துகின்றன. மற்றொருபுறம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இணைய வானரப்படையால் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதை அம்பலப்படுத்தும் நியாயமான ஊடகங்களின் குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றன.

நோயின் தாக்கம் அதிகமாகும் போது அதற்கெதிரான போராட்டமும் அதிகமாக வேண்டும். இல்லையென்றால் நம்மால் வாழ முடியாது. கட்டமைக்கப்பட்ட போலிச் செய்திகளும், உண்மையின் மீதான அடுக்குமுறைகளும் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் தான், ஒரு செய்தியை அதன் உண்மையான அரசியல் அர்த்தத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தேவை அதிகமாகிறது. செய்திகளை அதன் சமூக அரசியல் பின்புலத்துடனும் வரலாற்று தொடர்ச்சியுடனும் வழங்கும் பத்திரிகைகளின் தேவை அதிகமாகிறது. இந்த வகையில் மக்களை அரசியல் படுத்தும் பணியின் தொடர்ச்சியாக நமது புதிய ஜனநாயகம் பத்திரிகை 38 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது; வினவு தளம் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அவற்றிக்கு சந்தா செலுத்தியும் நன்கொடை வழங்கியும் ஆதரவளித்து, மக்களை அரசியல்படுத்தும் புரட்சிகரப் பணியில் எங்களுடன் சேர்ந்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


சீனிச்சாமி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க