பிபிசி “இந்தியா: மோடி மீதான கேள்வி” (India: The Modi Question) என்ற 2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பகுதியை ஜனவரி 17, 2023 அன்று வெளியிட்டது.
குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து பல தகவல்களை இந்த ஆவணப்படம் தொகுத்துக் கூறுகிறது. குஜராத் கலவரம் குறித்து இரகசியமாக விசாரிக்க ஒரு குழுவை பிரிட்டிஷ் அரசாங்கம் குஜராத்திற்கு அனுப்பியுள்ளது. தண்டனை பயமின்றி இஸ்லாமியர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டதற்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தான் காரணம் என்று அக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை கூறுவதாக இந்த ஆவணப்படம் பதிவு செய்துள்ளது.
பிரிட்டிஷ் அரசு அமைத்த அந்தக் குழுவின் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை என்று இந்த ஆவணப்படம் மேலும் கூறுகிறது. வெளியான அடுத்த நாளே இந்த ஆவணப்படம் யூடியூப்-இல் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.
படிக்க : 2002 குஜராத் படுகொலை வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதி(காவி)மன்றம்!
அந்த ஆவணப்படத்தில் அறிக்கையின் பல பகுதிகள் புகைப்படங்களாக வருகின்றன. அதில் “குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி நேரடிக் காரணம்” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது காட்சியாகிறது. குஜராத் கலவரமானது திட்டமிட்ட வன்முறை என்றும் அப்பட்டமான இனப்படுகொலை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் கணக்குகளின் படியே, குஜராத் கலவரத்தில் 790 இஸ்லாமியர்களும் 254 ‘இந்து’க்களும் உயிரிழந்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தாக்குதல்களை தடுக்க வேண்டாம் என்று குஜராத் போலீசுக்கு மோடி உத்தரவிட்டிருந்ததாக இந்த ஆவணப்படம் கூறுகிறது. ஆனால், உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி மற்றும் 63 பேர் மீது வழக்கு நடத்த போதிய ஆதாரமில்லை என்று 2012 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையை 2013 ஆம் ஆண்டில் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி எஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு கடந்த ஆண்டு ஜூன் 24 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இக்கலவரமானது, ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்-ஆல் திட்டமிடப்பட்டு குஜராத் மாநில அரசின் துணையுடன் நடைபெற்றது என பிரிட்டிஷ் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த அதிகாரி ஒருவர் இந்த ஆவணப்படத்தில் பேசி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, அன்றைய முதல்வர் நரேந்திர மோடி மூத்த போலீசு அதிகாரிகளை சந்தித்து, என்ன நடந்தாலும் போலீசு குறுக்கிட வேண்டாம் என்று கூறியதாக ஆவணப்படம் கூறுகிறது.
பதிவானதைவிட அதிக அளவிலான வன்முறை நடைபெற்றதாகவும், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட வன்முறை இது என்றும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளிலிருந்து இஸ்லாமியர்களை முற்றிலுமாக வெளியேற்றுவதற்கான முயற்சி இது என்றும் பிரிட்டிஷ் அரசின் விசாரணைக் குழு அறிக்கை கூறுகிறது.
படிக்க : 2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!
குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து மோடியை பிரிட்டிஷ் அரசாங்கம் அக்டோபர் 2012 வரை இராஜதந்திர புறக்கணிப்பு (diplomatic boycot) செய்திருந்தது. அந்த சமயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்திருந்த விசாரணைக் குழுவும் குஜராத் அமைச்சர்களே நேரடியாக வன்முறையில் பங்கேற்றத்தையும் போலீசு அதற்கு உடந்தையாக இருந்ததையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல், 2005 முதல் 2014 வரை மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசாங்கம் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மோடி இந்திய பிரதமராக பதவியேற்ற பின்பு, தங்கள் சொந்த நலன் கருதி பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மோடி மீது விதித்திருந்த தடையை நீக்கிக் கொண்டன. அப்போது வரை இனப்படுகொலை குற்றவாளியாக தெரிந்த மோடி திடீரென புனிதராக மாறிவிட்டார். தனது விசாரணை அறிக்கையைக்கூட பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிடவில்லை என்பதிலிருந்து நாம் இதைப்புரிந்து கொள்ளலாம்.
பாசிச பாஜக அரசும் மோடியும் குஜராத்தில் நடத்தப்பட்ட இஸ்லாமியர் மீதான படுகொலையில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று எவ்வளவு தான் மறுத்தாலும், அவர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் பல ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
பொம்மி