2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!

2002 குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். இந்தப் படுகொலையில் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி அமெரிக்கா உட்பட பல நாடுகள் முன்னதாகவே அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டன

0

குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகையில், “2002-ல் வன்முறையில் ஈடுபடவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

கேடா மாவட்டத்தின் மஹுதா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில், ஷாவின் பிரச்சார உரையில், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் வகுப்புவாத மற்றும் சாதி கலவரங்களை காங்கிரஸ் தூண்டிவிட்டதாக ஷா குற்றம் சாட்டினார்.

“குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது, ​​வகுப்புவாத கலவரங்கள் தலைதூக்கியது. பல்வேறு சமூகங்கள் மற்றும் சாதிகளைச் சேர்ந்தவர்களை ஒருவருக்கொருவர் எதிர்த்த வன்முறையை காங்கிரஸ் தூண்டிவிட்டது. இதுபோன்ற கலவரங்கள் மூலம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டதுடன், சமூகத்தின் பெரும் பகுதியினருக்கு அநீதி இழைத்துள்ளது” என்றார்.

படிக்க : 2002 குஜராத் படுகொலை வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதி(காவி)மன்றம்!

“2002-இல் அவர்களுக்கு ஒரு பாடம் கற்பித்த பிறகு, அவர்கள் 2002 முதல் 2022 வரை வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்த்தனர். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து குஜராத்தில் பாஜக நிரந்தர அமைதியை நிலைநாட்டியுள்ளது” என்று மத்திய அமைச்சர் கூறினார்.

000

யாருக்கு “பாடம் கற்பிக்கப்பட்டது” என்பதை அமித் ஷா விவரிக்கவில்லை. முன்னரே குறிப்பிட்டதுபோல, குஜராத் கலவரத்தில் 2000-க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.

2002 குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார். இந்தப் படுகொலையில் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி அமெரிக்கா உட்பட பல நாடுகள் முன்னதாகவே அவருக்கு விசா வழங்க மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடிக்கு எதிராகவும், கலவரத்தில் ஈடுபட்ட காவி பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழங்கு விசாரணையில் தற்போது 2022 ஆம் ஆண்டும் ஜூன் மாதம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜாஃப்ரியால் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டனர். குஜராத் கலவரத்தின் போது முதலமைச்சராக இருந்த மோடியை சிறப்பு புலனாய்வு முகமை இந்த வழக்கில் இருந்து விடுவித்துவிட்டது.

அதேபோல், 2002 ஆம் ஆண்டு கலவரத்தின்போது காவி பயங்கரவாதிகளால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் பில்கிஸ் பானோ, அவரது குடும்பத்தினர் 14 பேரை கொலை செய்தார்கள் காவிகள். இது தொடர்பாக பில்கிஸ் பானோ தொடுத்த வழக்கில் 11 காவி குண்டர்கள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை தற்போது 2022 அக்டோபரில் உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

படிக்க : குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்

குஜராத்தில் காவி பயங்கரவாதிகள் கலவரங்களை அரங்கேற்றினார்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள், நேரில் கண்ட சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள், கொலைசெய்யப்பட்ட முஸ்லிம் சிறுபான்மை மக்களின் பிணங்களே ரத்த சாட்சியங்களாக இருந்தது என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

யாருக்கு பாடம் கற்பிக்கப்பட்டதாக அமித்ஷா பிதற்றுகிறாரோ, அவர்களுடன் இணைந்து இந்திய உழைக்கும் மக்கள் காவிக் கும்பலுக்கு பாடம் கற்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க