குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்
மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி - அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது.
குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது!
பத்திரிகை செய்தி
குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளித்ததாகக் கூறி சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்டை பழிவாங்கும் நோக்கில் குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீஸ்தா, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி – அமித்ஷா கும்பலின் இந்த பாசிச நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தால் இஸ்லாமியர்கள் 2000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை குறித்து விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு அப்போதைய முதல்வரும் குஜராத் கலவரத்தை தலைமையேற்று நடத்திய மோடி உள்பட 64 பேரை விடுவித்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி ஜாப்ரி மனைவி, ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட்-ம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம் 2002 குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 64 பேருக்கு சிறப்பு விசாரணை குழு க்ளீன்சீட் வழங்கி உள்ளதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து அவர்களைப் புனிதர்கள் ஆக்கிவிட்டது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, தீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்.ஐ.டி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே, மும்பையிலிருந்த தீஸ்தா செதல்வாட்-ஐ குஜராத் மாநில போலீசு கைதுசெய்து அவரை குஜராத் அழைத்துச் சென்றுள்ளது.
மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி – அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே, பீமாகோரேகன் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களின் கணினிகளை முன்னரே ஹேக் செய்து; அதில் பொய்யான கடிதங்களை வைத்து, அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில், ஒருவரான நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமிக்கு உறிஞ்சி குடிக்க ஸ்ட்ரா கூட தடைவிதிக்கப்பட்டு அரசு பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்டார்.
ஏறத்தாழ 90 சதவீதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றோர் பேராசிரியர் சாய்பாபா, கொரோனா தொற்றுநோயால் இரண்டுமுறை பாதிக்கப்பட்டார். எனினும் அவர் இப்போதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆனந்த் டெல்டும்டே பலவேறு நோய்களால் பாதிக்கப்பட்டபோதும் அவரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஆந்திராவின் புரட்சிக்கவிஞர் வரவரராவ் தன்னுடைய மருத்துவ பரோல் முடிந்து மீண்டும் சிறை செய்வதற்காக காத்திருக்கிறார்.
அந்த வரிசையில் தீஸ்தா செதல்வாட் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.
இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக, சிறுபான்மை மக்களுக்காக, பழங்குடியின – தலித் மக்களுக்காக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் பயங்கரவாதிகளாக்கப்பட்டு சட்டத்தின்முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறார்கள். இதையெல்லாம் இந்த நாட்டின் நீதிமன்றங்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றன அல்லது அரச பயங்கரவாதத்தின் ஒரு பிரிவாகவே மாறிப் போயிருக்கின்றன.
இந்த நாட்டின் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக, அவர்கள் படுகொலை செய்யும்பொழுது அதற்கு எதிராக போராடிய -குரல் கொடுத்த- அறிவுஜீவிகள், தலைவர்கள் ஒவ்வொருவராக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நாடு மீளமுடியாத காவி பாசிச இருளில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு எதிராக சிந்திக்கும் அனைவருக்குமான இடம் என்ன என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை கருத்திலும் களத்திலும் மோதி முறியடிக்கும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியதே உடனடிப்பணியாக இருக்க வேண்டும் என்றும் இதற்காக மக்கள் அணிதிரண்டு முன்வர வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன், தோழர் வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர், மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை. 9962366321.
காவி கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை கருத்திலும், களத்திலும் மோதி முறியடிக வேண்டியதே உடனடிப்பணி