ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது பதவியிலிருந்து நவம்பர் 17-ம் தேதி ஓய்வுபெற உள்ளதால், அதற்கு முன்பாகவே அயோத்தி தீர்ப்பு எந்தநேரத்திலும் வழங்கப்படலாம்.

40 நாட்கள் நீண்ட விசாரணையில் ஆத்திரமூட்டும் பல விசயங்கள் நடந்தன, ‘உச்சநீதிமன்றமே எங்களுடையது’ என இந்துத்துவ தரப்பினர் பொறுப்பில்லாத பேச்சுக்களைப் பேசினர்.

டெல்லி மற்றும் லக்னோவில் தங்களை ஏற்றுக்கொள்ளும் ஆட்சிகள் நடப்பதால், ‘தீர்க்கதரிசிகள்’ தங்களுடைய அடுத்த இலக்கு, காசியிலும் மதுராவிலும் உள்ள மசூதிகள் என அறிவிக்கிறார்கள். வெளிப்படையாக ஆத்திரமூட்டும் அறிக்கைகள் விடுவதன் மூலம் தங்களுடைய அடுத்த நிகழ்ச்சி நிரல் காசியையும் மதுராவையும் விடுவிப்பதே என அறிவிக்கிறார்கள். அவர்களின் அச்சுறுத்தல் என்னவெனில், கியான் வாபி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா ஆகியவற்றை இடிப்பதாகும்.

ராமர் கோயில் கட்டப்பட்டவுடன், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் மதுரா ஸ்ரீகிருஷ்ணா ஜென்மபூமி ஆகிய கோயில்களை ஒட்டியுள்ள மசூதியை கைப்பற்ற (இடிக்க எனப் படிக்கவும்) தீவிர வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., அதன் தீவிரவாத துணை அமைப்பான விசுவ இந்து பரிசத், நாட்டின் அரசியலாக்கப்பட்ட சாமியார்களைக் கொண்டு முதன்மை அமைப்பான அனைத்திந்திய அகாரா பரிசத் ஆகியவை இயக்கத்தை ஆரம்பிக்க உள்ளதாக கடந்த வாரம் அறிவித்துள்ளன.

சமீபத்திய உச்சநீதிமன்ற சட்ட விவகாரத்தில் என்னமாதிரியான தீர்ப்பு வரும் என அவர்கள் அறிந்ததால் மட்டுமல்ல, பெங்களூருவிலிருந்து வெளியாகும் டெக்கான் ஹெரால்டில் இந்த செய்தி பதிவாக்கப்பட்டிருப்பதிலிருந்து வகுப்புவாத சண்டையும் சிறுபான்மையின மத நிறுவனங்கள் மற்றும் நபர்களை இலக்காக்குவதும் இன்னும் அதிக நிகழும் எனத் தெரிகிறது.

“பாபர் மசூதியைப் போலவே, மசூதிகள் கட்ட காசி மற்றும் மதுராவில் கோயில்கள் இடிக்கப்பட்டன… இந்த மசூதிகள் இடிக்கப்பட வேண்டும்” என அனைத்திந்திய அகாரா பரிசத் தலைவர் நரேந்திர கிரி தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமல்ல, இந்தியாவின் சக்திவாய்ந்த பின்புலம் தங்களுக்குள்ளதை தெளிவாக சொன்ன கிரி, இந்துக்களுக்கு ஆதரவான அரசாங்கம் உத்தரபிரதேசத்திலும் மத்தியிலும் இருப்பதால், இரட்டை நோக்கங்களை அடைவதில் எந்த சிக்கலும் இருக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

நிர்வாணி அகாரா அமைப்பைச் சேர்ந்த சாமியார் மகந்த் தரம் தாஸ்.

“ராமர் கோயிலைப் போலவே, காசி மற்றும் மதுராவும் உலகெங்கும் உள்ள இந்துக்களால் போற்றப்படுகிறார்கள். அவர்கள் எங்களுடையவர்கள், அவர்களையும் நாங்கள் எடுத்துக்கொள்வோம்” என கிரி சொல்லியிருக்கிறார். மத நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக காசி மற்றும் மதுரா மீதான தங்களுடைய உரிமையை விட்டுத்தர வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.

இதில் சுவாரசியமானது, அயோத்தி நில விவகார வழக்கில் முசுலீம் தரப்பின் முக்கியமான வாதியான சன்னி வக்ஃப் வாரியம், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் குழு முன் ‘சமரச’ திட்டத்தை முன்வைத்ததாகவும் பேச்சுவார்த்தைகளின் மூலம் சர்ச்சைக்குரிய பிரச்சினையை தீர்ப்பதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக இந்துக்கள் காசி மற்றும் மதுரா மசூதிகளை விட்டுத்தர வேண்டும் எனக் கோரியுள்ளது.

கிரியை போன்றவர்களுக்கும் உத்தர பிரதேச சட்டசபை மற்றும் இந்திய பாராளுமன்றத்தில் இருக்கும் அவருடைய கூட்டாளிகளுக்கும் சமரசம் என்ற ஒன்று இல்லை. எனவே, அவர் இந்துக்கள் எந்த சூழ்நிலையிலும் காசி மற்றும் மதுரா மீதான தங்களுடைய உரிமையை விட்டுத்தரக்கூடாது என தெள்ளத்தெளிவாக மீண்டும் ஒருமுறை கூறிவிட்டார்.

இந்து மதவெறி கும்பலால் குறிவைக்கப்பட்டிருக்கும் மதுராவிலுள்ள மசூதி.

வி.எச்.பி. மற்றும் பாஜகவின் ஒரு பயங்கரவாத தலைவரான வினய் காட்டியாரும் காசியும் மதுராவும் இந்துக்களுடையது எனச் சொன்னார்.

1980 – 1990-களில் ‘அயோத்தி மற்றும் பாபர் வெறும் முன்னோட்டம்தான். காசியும் மதுராவும் பாக்கி உள்ளது’ இரத்தவெறி முழக்கத்தை, காவி கும்பல் இந்தியாவின் பொதுவெளி எங்கும் முழங்கியது.

எவ்வாறாயினும், அரசாங்கத்திலும் அதன் நிறுவனங்களிலும் அரசியல் ரீதியான ஊடுருவல் முழுமையானதாக இல்லை. இன்று டெல்லியில் உள்ள மத்திய அரசாங்கமும் லக்னோவில் உள்ள மாநில அரசாங்கமும்  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வால் மட்டுமல்ல, 27-30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தீவிரத் தன்மையுடன் உள்ளன. எனவே, இந்த அச்சுறுத்தல்கள் இன்னும் அதிகமான தீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை காட்டுகின்றன.

இந்தியா தனது சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை இன்னும் அதிகமாகக் காணும் என கணிக்க முடிகிறது. அதோடு, சிறுபான்மையினரின் உயிர்கள் மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அச்சுறுத்தல்களும் அதிகமாகும்.

படிக்க:
அயோத்தி பாபர் மசூதி வழக்கு :  நடுவர் குழுவின் தந்திரங்கள் | ராஜீவ் தவான்
இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !

1993-ம் ஆண்டு இந்தியா டுடே இப்படி எழுதியிருந்தது:

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது எழுந்த தூசு இன்னும் அடங்கவில்லை. ஆனால், அயோத்தி பேரழிவு நிகழ்ந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாஹி இத்கா அடுத்த இலக்காக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

காசியும் மதுராவும் தங்களது ‘உடனடி நிகழ்ச்சி நிரலில்’ இல்லை என பாஜக சொல்லிக்கொள்கிறது. ஆனால், வி.எச்.பி.யின் பொது செயலாளர் அசோக் சிங்காலும் ஆர்.எஸ்.எஸ். இணை பொது செயலாளர் ராஜேந்திர சிங்கும் மதுரா தங்களுடைய திட்டத்தில் நிச்சயமாக உள்ளது எனக் கூறுகிறார்கள். சிங் சொன்னார்: ‘அத்வானி இது எங்களுடைய உடனடி திட்டமில்லை என்றுதான் சொன்னாரே தவிர, ஒருபோதும் இல்லை எனச் சொல்லவில்லை’. இந்துத்துவ படைகளுக்கு அது எந்த நேரம் என்பது மட்டும்தான் இப்போது உள்ள கேள்வி.

வாரணாசியிலுள்ள க்யான்வாபி மசூதி.

அயோத்தி உதாரணம் போதுமென்றால், எதுவும் நன்றாகவே நடக்கும். வி.எச்.பி, ‘அயோத்தி, மதுரா மற்றும் காசி ஆகிய இடங்களில் கொள்ளையர்களால் கட்டப்பட்ட மசூதிகளை அகற்ற வேண்டும்’ என அறைகூவல் விடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டது.

1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.எச்.பி. முதல் அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1989 ஜூன் மாதம் பாஜக தனது தேசிய செயலாளர்கள் கூட்டத்தில் இதை முறையான தீர்மானமாக நிறைவேற்றியது.

இப்போது, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மபூமி அறக்கட்டளை, மசூதிக்கு அடுத்துள்ள நான்கரை ஏக்கர் நிலத்தை மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தும் இடத்துக்காக வேண்டும் என உரிமை கோருகிறது. பாபர் மசூதி வழியில் மதுராவில் உள்ள இத்கா போவதற்கு அதிக காலம் எடுக்காது.

டிசம்பர் 1992- ஜனவரி 1993 வரை அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி சீர்குலைப்புக்கு எதிர்வினையாக எங்களுடைய இதழான ‘கம்யூனலிசம் காம்பாட்’ 1993-ம் ஆண்டு துவக்கப்பட்டது. www.sabrang.com என்ற இணையதளத்தில் இந்த இதழின் பிரதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்துமதவெறியர்களின் சதிகளை அம்பலப்படுத்தி வரும் சப்ரங் இணையதளம்.

இந்திய அரசியலின் வன்முறை திருப்பத்தை நாங்கள் பின் தொடர்ந்தது மே, 2003-ல். அதாவது, குஜராத்தின் 2002 படுகொலைக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு. தாக்குதலுக்கு சாத்தியமாகக்கூடிய தெற்காசியாவின் முக்கியமான சூஃபி தளங்கள் அல்லது இசுலாமிய அடிப்படையிலான வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் பட்டியலை நாங்கள் வெளியிட்டோம்.

இந்து ராஷ்டிரத்தின் இரத்தவெறி பிடித்த படைகள் வன்முறை அழிவு மற்றும் திணிப்பு மட்டுமே தங்களுடைய வழிமுறையாக நம்புகின்றன.

மேற்கண்ட பட்டியல் ஒரு மின்னஞ்சலிலிருந்து பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை நெருக்கமாக ஆய்வு செய்யும்போது, இந்தப் பட்டியல் விநியோகிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் அரசியல், ‘தேசியவாதம்’ என குறுகியுள்ளது. தூண்டப்பட்ட வன்முறை, மத மோதல்கள் இன்னும் அவர்களின் திட்டத்தில் உள்ளதையே இது காட்டுகிறது.

இந்தப் பட்டியல் விரிவானது ; எந்தவொரு யூனியன் பிரதேசத்தையோ மாநிலத்தையோ அதன் முன் தேர்வில் அது விட்டுவைக்கவில்லை. நமது தலைநகரமான டெல்லியில் இந்துத்துவ படைகளின் 72 இலக்குகள் உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகள், டெல்லி நிஜாமுதீனில் அழகாக பராமரிக்கப்பட்டுள்ள தர்கா உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

படிக்க:
அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்
அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !

தெலுங்கானாவில் உள்ளது. யூனியன் பிரதேசமான டையூ-விலும்கூட. சொல்லத்தேவையில்லை குஜராத்தில் பெரிய பட்டியலே உள்ளது. மேற்கு வங்க (கவனம் அங்கு ஒரு பாஜக அரசாங்கம் உள்ளது) த்தில் 120-க்கும் மேற்பட்ட ‘இலக்கு வழிபாட்டிடங்கள்’ உள்ளன. அசாமிலும். ‘கம்யூனலிசம் காம்பாட்’ சுருக்கப்பட்ட பட்டியலை மட்டுமே வெளியிட்டது; தெளிவாக இந்தப் பட்டியலில் இன்னும் நிறைய இடங்கள் உள்ளன.

இந்து மதவெறியர்களின் ”ஹிட் லிஸ்ட்”.

இந்து ராஷ்டிரத்தை முன்னிறுத்தி, புது டெல்லியில் உள்ள அரசாங்கம், 2019-ல் பல மாநிலங்களில் அரசியல் அதிகாரம் செலுத்தும் நிலையில், இந்தியாவின் முகலாய ஆட்சிகாலத்தின் புகழ்பெற்ற மசூதிகள் மற்றும் நினைவுச்சின்னங்களை மிருகத்தனமான வன்முறை மூலம் சிதைத்து வரலாற்றை மாற்ற நினைக்கிறது. இதன் மூலம் உயர்சாதி, பார்ப்பன, இந்துத்துவ தேசத்தை உருவாக்கலாம் எனத் திட்டமிடுகிறது.

இந்த அரசியல் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக, இந்தியர்களின் பரந்த பிரிவினர் – மேலாதிக்க வரையறைக்குள் வராத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்டவர்கள் – இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படுவார்கள். பவுத்தர்கள், கிறித்துவர்கள், பகுத்தறிவாளர்கள், மதச்சார்பற்றவர்கள், இடதுசாரிகள் ‘கற்பனையான இந்து தேசத்தின் எதிரிகள்’. இதில், முசுலீம்கள் மிகவும் விசம் நிறைந்த இலக்காக சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளனர்.

இத்தாலியின் முசோலினி, ஜெர்மனி இட்லரிடமிருந்து உத்வேகம் பெற்ற அவர், காந்தியின் வாழ்க்கை மீது நடத்தப்பட்ட முதல் மிருகத்தனமான தாக்குதலுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின், எம்.எஸ். கோல்வாக்கர்  We and Our Nationhood Defined (1939)  என்ற நூலை எழுதுகிறார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலக்கட்டத்தில் ‘முசுலீம் இசுலாம் தேசம்’ என கொடி ஏந்தியவர்கள் ஒருங்கிணைந்த இந்திய தேசத்தை வெற்றிகரமாக கிழித்து எறிந்தார்கள். புரையோடிய காயத்துடன், இந்தியா வன்முறையாகப் பிரிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் கோல்வால்கர்.

1925-ம் ஆண்டு முதல், ஆர்.எஸ்.எஸ். இந்திய சமூகத்தை அரசு குறித்த கருத்தை மாற்றி வடிவமைக்கும் தனது திட்டத்தை தொடங்கியதிலிருந்து, அது நீண்ட பாதையை கடந்து வந்திருக்கிறது. இப்போது, அது நூற்றாண்டை கொண்டாட ஆறு ஆண்டுகள் உள்ள நிலையில், நாம் எச்சரிக்கைக்கு உள்ளாகியிருக்கிறோம்.  இந்தத் திட்டம், இந்தியாவின் குடியரசு மற்றும் அரசியலமைப்பின் அடித்தளத்தை குறைமதிப்பு செய்து, அதை பெரும்பான்மை, மதவாத அரசாக மாற்றுவதில் வெற்றி காணுமா?

இந்தியாவை தாங்கள் விரும்பிய இந்துத்துவ அரசாக கற்பனை செய்த ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆரம்ப கால நூல்களைப் பார்ப்போம். இதில் மற்ற அனைத்து துணை அமைப்புகளும், வி.எச்.பி. மற்றும் சாமியார்களின் அமைப்பும் இந்த தாய் அமைப்பின் அரசியல் குறிகோளுடன் இணைந்தே உள்ளன.

Bunch of Thoughts என்ற நூல் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இ-புத்தகமாக உள்ளது. இந்த தளம் கண்காணிக்கப்பட்டு வந்தாலும் ஆர்.எஸ்.எஸ். நூல்கள் இணையதளத்தில் பரவலாகக் கிடைக்கின்றன. புத்தகக் கடைகளிலும் சமூக அரசியல் சமூகங்களின் விற்பனையகங்களிலும் இவை கிடைக்கின்றன.

1939-ம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்த எம்.எஸ். கோல்வாக்கர் வரையறுத்த We or Our Nationhood இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. சில ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.கவினர் இந்த நூலை சொந்தம் கொண்டாட மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ இணையத்திலும் இந்த நூல் இல்லை.

எம்.எஸ். கோல்வாக்கர் வரையறுத்த We or Our Nationhood நூல்.

‘கம்யூனலிசம் காம்பாட்’டில் நாங்கள், இதன் 1947 பதிப்பின் நகலை எடுத்து வைத்திருக்கிறோம்.

2015-ம் ஆண்டு டிசம்பரி எழுதிய ஒரு பெரிய கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ எழுத்துக்களில் கூறப்பட்ட இந்து ராஷ்டிர கனவு குறித்து முழுமையாக ஆராய்ந்து எழுதினேன்.

அதிலிருந்து நினைவில் கொள்ள வேண்டிய சிலவை:

ஆர்.எஸ். எஸ். மற்றும் பாஜக அரசியலமைப்புக்கு எதிரானவை

ஆர்.எஸ்.எஸ். – உடன் கருத்தியல் ரீதியாக தொடர்புள்ள, தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக, இந்திய அரசியலமைப்பு வரையறை செய்த இந்திய தேசிய வாதம் மற்றும் இந்திய குடியுரிமை குறித்த கருத்தாக்கத்துக்கு எதிரானது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படை கொள்கைகளைக் கொண்ட Bunch of Thoughts நூலின் 119-ஆம் பக்கத்தில், நூலின் ஆசிரியர் ‘பிராந்திய தேசியவாதம் என்ற கருத்து அபத்ததை முற்றிலுமாக தவறு என்கிறார்.

கோல்வாக்கர் கூறுகிறார்: அவர்கள் (அரசியலமைப்பு சபையின் தலைவர்களை சுட்டுகிறார்) இங்கே ஏற்கனவே ஒரு முழுமையான பழங்கால இந்துக்களுக்கான தேசம் இருந்ததது என்பதை மறந்துவிட்டார்கள். நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்கள் இங்கு விருந்தினர்களாகவோ, யூதர்கள் மற்றும் பார்சிகள் அல்லது படையெடுப்பாளர்களாகவோ, முசுலீம் மற்றும் கிறித்தவர்கள்  வந்தவர்கள்அவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள் என எப்படி அழைக்கப்பட முடியும் என்கிற கேள்வி எழவில்லை. ஏனெனில் தற்செயலாக அவர்கள் ஒரு பொதுவான எதிரியின் ஆட்சியின் கீழ் ஒரு பொதுவான பிரதேசத்தில் வசித்தார்கள்”.

அரசியலமைப்பை ரத்து செய்வதற்கான அதன் நோக்கம் குறித்து ஆர்.எஸ்.எஸ். வெட்கம் கொள்ளவில்லை!

“…’இந்து தேசியவாதம்குறித்து பேசுவது நம்மை குறுக்கிவிடும்அவை மதவாத’, பிற்போக்குத்தனமான கருத்துக்கள் என மனித சகோதரத்துவம் குறித்த உயர்ந்த தத்துவம் கொண்டவர்கள், பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் உள்ளிட்ட பலவற்றின் பெயரால் நாம் இதுவரை முட்டாளாக்கப்பட்டோம்.

இதை ஒரு பந்தயமாக நாம் பார்க்க வேண்டும். மேலும் நமது தேசியவாதம் ஒரு பண்டைய உண்மை. பாரதத்தின் தேசிய சமூகம் இந்துக்கள் என்பதை நாம் மீண்டும் ஏற்படுத்த வேண்டும். எனவே, நமது நிறுவனர், நமது அமைப்புக்கு ராஷ்டிரியஎன்ற வார்த்தையை அதை நினைவுபடுத்தும் விதமாகவே சேர்த்தார்.

நாம் மீண்டும் ஒருமுறை முழுமையான நிலையில் எழுந்து நின்று, பாரதத்தின் இந்து தேசிய வாழ்வை பெருமையுடனும் புகழுடனும் தைரியமாக வலியுறுத்த வேண்டும். இது நமது பிறப்புரிமை (எம்.எஸ். கோல்வாக்கரின் Bunch of Thoughts பக்கம் 127)

படிக்க:
‘முசுலீம்களை முழுவதுமாக புறக்கணியுங்கள்’ : வெறுப்பு பிரச்சாரத்தில் காவிகள்
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிராமனாள் வருவாளா ?

மசூதிகளும் நமது ஒத்திசைவான கலாச்சாரமும் இந்த அரசியல் திட்டத்தின் மிக வெளிப்படையான இலக்குகளாக மாறியிருக்கின்றன. கலாச்சார மறு வடிவமைப்பு மிருகத்தனமானது; நவீன இன அழிப்பு. மேலும் இந்தியாவின் பரந்துபட்ட சமூகங்களின் சம உரிமை, குறிப்பாக இப்போதும்கூட அன்றாடம் பயத்தில் வாழும் முசுலீம்களின் இருப்பையே கேள்விக்குறி ஆக்குவதாகும்.

இந்து மதவெறியர்களின் கொலை மிரட்டல்களையும் மீறி இன்றுவரை தீரத்துடன் களமாடும் தீஸ்தா சேடல்வாட்.

பயம் மற்றும் அச்சுறுத்தலின் மூலம் மதக் கலவரத்தைத் தூண்டி, பின் இனப்படுகொலை திட்டங்களை செயல்படுத்துவது அரசால் அனுமதிக்கப்பட்ட தன்மையை பெற்றுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் குடியுரிமை உரிமைகள் தொடர்பான திட்டங்கள் இதுபோன்ற அரசியல் திட்டங்களாக மாறியுள்ளன.

மசூதிகள் மற்றும் தர்காக்களை இடிப்பது என்கிற அச்சுறுத்தல்  எப்போதும் அவை தொடர்பான மக்கள், அவர்கள் நம்பிக்கை மீதான வன்முறையையும் சேர்த்தவையே. தேசிய குடிமக்கள் பதிவேடு (‘கரையான்கள்’ ‘துரோக ஊடுருவல்காரர்கள்’ என்ற பதங்களை ஒருபோதும் மறக்கக்கூடாது) என்ற அச்சுறுத்தலுடன் வரும் இந்த வெட்கக்கேடான முயற்சிகள், அவர்களை அடிமைகளாக்கவே செய்யப்படுகின்றன. இந்த மக்கள், ஏற்கனவே கோட்பாட்டளவில் இரண்டாம் தர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


கட்டுரையாளர் :  தீஸ்தா செடல்வாட்
தமிழாக்கம் : கலைமதி
நன்றி : தி வயர்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க