அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த உச்சநீதிமன்ற வழக்கில் முசுலீம் தரப்பின் வழக்கறிஞர் ராஜீவ் தவான். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஷரத் அர்விந்த் பாப்டே, அஷோக் பூஷன், சந்திரசூட் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. அண்மையில் இந்த வழக்கின் இறுதி வாதம் உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது. விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இறுதி வாதத்தின் போது, ராமர் பிறந்த இடம் என உரிமை கோரும் இந்துத்துவ அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், நூல் ஒன்றையும் அதனுடன் ஒரு வரைபடத்தையும் சமர்பித்தார். அதை வாதத்தின் போது கிழித்தெறிந்ததாக வைரல் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. காவி டிரோல்களின் தாக்குதலுக்கு உள்ளானார் ராஜீவ் தவான்.
இதுகுறித்து தனது தரப்பை விளக்கி அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. கூடவே, அயோத்தி வழக்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் அவர் விளக்கியுள்ளார் இந்தக் கட்டுரையில்….
♦ ♦ ♦
நான் வாதிட்ட ஒரு வழக்கின் இறுதி முடிவு வரும்வரை அந்த வழக்கு குறித்து பொது வெளியில் பேசுவதில்லை என்பது என் கொள்கை முடிவு. குறுக்கு விசாரணைக்கு உட்படுத்த முடியாதபட்சத்தில் இதை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என வாதிட்டு ஒரு வரைபடத்தை கிழித்தது ஊடக சர்ச்சையானபோதும் அந்தக் கொள்கையை உடைக்க விரும்பவில்லை. ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்த நிலையில் அதை வெட்டி விட்டு, என்னுடைய கிழித்தெறியும் செயல் சமூக ஊடகங்களில் வைரலானது. அவரிடம் நான் அனுமதி கேட்டதும், அவர் அளித்ததும் அதைக் கிழித்தெறிந்ததும் அதன்பின் அவருடைய கருத்தும் வைரலாகி இருக்க வேண்டும். அது இந்த சர்ச்சையை நிறுத்தியிருக்கும்.
இந்தச் செய்திக்குப் பின்னால், எனக்கு நிறைய சாபங்கள், உயிருக்கு ஆபத்தான குறுஞ்செய்திகளும் வந்தன. ராமரின் பெயரால் வந்த சாபங்களையும் மிரட்டல்களையும் நான் பாராட்டுக்களாக எடுத்துக்கொண்டேன்.
நடுவர்குழு சர்ச்சையின் பின்னணி
திட்டமிடப்பட்டு இறுதி நாளின் வாதத்தில் வெளியான ‘வெற்றிகரமான’ நடுவர் குழு குறித்து எழுத விரும்புகிறேன். அதற்கு முன்னதாக பின்னணியை நினைவுகூர்வோம்.
பாபர் மசூதி இடிப்புக்கு முன்பும் பின்பும் அயோத்தி வழக்கில் நடுவர் குழு வழியாக தீர்வு காணும் பல முயற்சிகள் நடந்தன. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு முன் இந்த வழக்கு இருந்தபோதும் அது நடந்தது.
படிக்க:
♦ அயோத்தி தீர்ப்பை முன்னதாகவே எழுதிய பாஜக ஆதரவு ஊடகங்கள் !
♦ அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு !
இந்த முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தன. ஏனெனில் இந்துத்துவ முகாம் ‘கோயில் அந்த இடத்தில்தான் கட்ட வேண்டும்’ என்பதில் பிடிவாதமாக இருந்தன. இந்துத்துவ தரப்பினர் அந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதற்கோ, அதுதான் ‘ராமர் பிறந்த இடம்’ என்பதற்கோ ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. அத்வானி – ஜோஷியின் யாத்திரையால் ஒரு கூட்டு நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த முடிந்ததைத் தவிர, வேறெந்த விளக்கத்தையும் அவர்களால் வழங்க முடியவில்லை.
1985-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பல சாமியார்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் இணைந்து ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார்கள். இந்த அறக்கட்டளை 1989-ம் ஆண்டு ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. விரைவில், அயோத்தி பணத்தாலும் அதிகார பலத்தாலும் நிரப்பப்பட்டது. பல கோயில்கள் உருவாக்கப்பட்டன, அவை செல்வத்தை குவித்தன. அங்கு வன்முறையைப் பரப்ப பல குண்டர்களும் தோன்றினார்கள்.
அயோத்தில் உள்ள ஒரு பெரிய கோயிலின் தலைமை குருவாக இருந்த லால் தாஸ், 1993-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவர் ராம் ஜென்ம பூமி இயக்கத்தை எதிர்த்தவர்; மத நல்லுறவை வலியுறுத்தியர்.
நடுவர் குழுவுக்கு இங்கே இடமிருக்கிறதா?
அனைத்து தரப்பின் ஆதரவோடு எந்தவொரு பிரச்சினையையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு போற்றத்தக்க வழியாக நடுவர் குழு இருக்கும். நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண உச்சநீதிமன்றம் ஒரு நல்ல முயற்சியை பிப்ரவரி 26, 2019-ம் ஆண்டு முயற்சித்தது. அந்த நிலையில், முசுலீம் தரப்பினர் மேற்கொண்டு நடுவர் குழு தீர்வுக்கு ஒப்புக்கொண்டனர். இந்து தரப்பினரும்கூட (முதலில் நிர்மோகி அகாரா ஒப்புக்கொள்ளவில்லை, பின்பு தனது நிலையை மாற்றிக்கொண்டது) ஒப்புக்கொண்டனர்.
2019, மார்ச் 8-ம் தேதி உச்சநீதிமன்றம் நடுவர் குழுவை நியமித்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா (தலைவர்), ஆர்ட் ஆஃப் லிவிங் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
மார்ச் 10-ம் தேதி நடுவர் குழு முதல் கூட்டத்தை நடத்திய பின்னர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்ப்பு எழுந்தது. அவர் இந்த இடம் இந்துக்களுக்கு போக வேண்டும் என ஏற்கனவே ஒரு கருத்தைக் கொண்டிருந்தார். ஒரு பக்கச் சார்புள்ள நடுவர் மத்தியஸ்தம் செய்யமுடியாது என்றபோதிலும் தன்னை மறுபரிசீலனை செய்துகொள்ளவில்லை.
நடுவர் குழுவின் கலந்துரையாடலின்போது, நாங்கள் சேர்ந்திருந்தோம், இந்து தரப்பினர் தங்கள் தரப்பில் பிடிவாதமாக இருந்தன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த உலேமா இ இந்த் மற்றும் சில முசுலீம் தரப்பினர் சில முன்மொழிவுகளை வைத்தனர். ஊடகங்களில் வெளியாகும் வரை எங்களுக்கு அந்த விவரங்கள் தெரியவரவில்லை.
படிக்க:
♦ இந்துத்துவ சதி சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !
♦ ஒற்றுமையின் சின்னம் அயோத்தி !
இரு தரப்பினரிடையே நடக்கும் பேரத்தில், இந்த விசாரணையில் ஒரு வழக்கறிஞராக கலந்துகொள்ள முடியாது எனத் தெளிவாக சொல்லிவிட்டேன். சிவில் வழக்கில் தொடர்புடைய தரப்பினரிடம் விசாரிப்பதற்கு பதிலாக, அந்தக் குழு அனைவரிடமும் கருத்து கேட்டது. ஒரு எம்.பி.யின் தலையீடு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது என்றாலும், அவர் ”500 மசூதிகள் கோயில்களை இடித்து கட்டப்பட்டவை, அவற்றை மீட்க உடனடியாக நடவடிக்கை வேண்டும்” என்றார்.
ஆயினும், 2019 மே 7-ம் தேதி நீதிபதி கலிஃபுல்லா விசாரணையை நீடிக்கக் கோரினார். உச்சநீதிமன்றமும் ஆகஸ்டு 15-ம் தேதி வரை நீடித்தது. ஆனால், காலக்கெடுவுக்கு முன்னதாக ஜூலை 11-ம் தேதி உச்சநீதிமன்றம் அவரிடம் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தெரிவிக்கக் கேட்டது. இந்தக் கோரிக்கை ஜூலை 18-ம் தேதி மீண்டும் எழுப்பப்பட்டது. இதற்கு ஆகஸ்டு 2-ம் தேதி பதிலளித்த நடுவர் குழு, நடவடிக்கைகள் தோல்வியுற்றதென்றும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் கூறியது.
இதன் அடிப்படையில், நடுவர் குழு முடிவுக்கு வந்தது. அதனால் எந்தவொரு முறையான உத்தரவையும் பிறப்பிக்க முடியவில்லை.
எவ்வாறாயினும், நீதிமன்றத்தில் செப்டம்பர்- 18 பிறப்பித்த ஒரு உத்தரவின் மூலம் நடுவர் குழு புதுப்பிக்கப்பட்டது:
“மிகவும் முன்னேறிய கட்டத்தில் இருக்கும் மேல்முறையீட்டின் விசாரணை, தடையின்றி தொடரும். அதே சமயம், இந்த விவகாரங்களை தீர்ப்பதற்கு தொடர்புடைய தரப்பினர் முன்பு அமைக்கப்பட்ட நடுவர் குழு முன் தீர்த்துக்கொள்ள விரும்பினால், அவர்கள் அதை செய்யலாம். அந்த முடிவை அவர்கள் நீதிமன்றத்தின் முன் வைக்கலாம்.
தீர்வுக்கான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள், நடுவர் குழு தொடர்பாக இரகசியத்தன்மை காக்கப்படும் என மார்ச் 8, 2019-ம் ஆண்டு மார்ச்-8 வெளியிட்ட உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்” என்றது அந்த உத்தரவு.
உ.பி. சன்னி வஃக்பு வாரிய தலைவர் ஸூஃபர் ஃபரூக்கி, பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என சொன்னதாக பொதுவெளியில் வந்த தகவலின் அடிப்படையில் இந்த உத்தரவு வந்திருப்பதாகத் தெரிகிறது. நாங்கள் முன்னதாகவே ஃபரூக்கி மீது வழக்கு உள்ள நிலையில், ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசாங்கத்தின் அழுத்தம் உள்ளதாக தெரிவித்திருந்தோம்.
மத்தியஸ்தம் செய்யவோ, தீர்த்துக்கொள்ளவோ தனக்குத் தரப்பட்ட அதிகாரம் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காக, இந்த வழக்கோடு தொடர்புடைய விவகாரத்தில் எந்த முடிவெடுக்கவும் முழு அதிகாரத்தையும் வாரியம் தனக்கு தந்துள்ளதாகச் சொன்னார் அவர்.
ஆனால், ஃபரூக்கி ஒரு கட்டத்திற்கு மேலே சென்று, வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவரான ஷகில் அகமது சையதிடம், வழக்கை கைவிட்டு, வாரியத்தின் சார்பில் இருந்த மற்றொரு வழக்கறிஞரான ஷாகித் ரிஸ்வியிடம் வழக்கை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
வழக்கறிஞரை மாற்றும் இந்தக் கோரிக்கையின் தாக்கம், வழக்கில் வாதாடிக் கொண்டிருக்கும்போதே நானும் ஜாபர்யாப் ஜிலானியும் நீக்கப்படலாம் என்பதாகும். ஆனால், இந்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. பின்னர் வாரியத்தின் தலைவரே என்னுடைய வாதங்களுக்காக என்னைப் பாராட்டினார்.
நடுவர் குழுவின் முயற்சிகள் எப்படிப்பட்டவை?
உச்சநீதிமன்ற நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த ஸ்ரீராம் பஞ்சு, நாகலாந்து உள்ளிட்ட பல நடுவர் குழுக்களில் இடம்பெற்றிருந்தவர். மத்தியஸ்தம் தொடர்பாக அவர் நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். இதில் அவர் நிபுணரும்கூட. நடுவர் குழு விவாதத்தின்போது பங்கேற்ற சிலருடன் அவர் தொடர்பில் இருந்தார். குழுவின் முறையான நடவடிக்கைகளின்போது இது முறையாக செய்யப்பட்டதா அல்லது முறைசாரா முறையில் செய்யப்பட்டதா என அறியமுடியவில்லை. ஆகஸ்டு 2-ம் தேதிக்கு முன்னர் நடுவர் குழு சந்திப்பில் கலந்துகொண்ட முக்கிய வாதிகளுக்கு அதன்பின் அழைப்பு விடுக்கப்படவேயில்லை.
அக்டோபர் 2-ம் தேதி ‘மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நடுவர் குழு’வின் அங்கீகரிப்பட்ட அதிகாரி சார்பில், சில தரப்பினரின் வழக்கறிஞர்களுக்கு அக்டோபர் 9, 10 தேதிகளில் நடுவர் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள நோட்டீசு அனுப்பப்பட்டது.
படிக்க:
♦ அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !
♦ அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !
இந்தக் கூட்டங்களில் யார் கலந்துகொண்டனர் என்ற விவரம் எங்களிடம் இல்லை, ஏனெனில் இதுவரை அனைவருக்கும் அழைக்கப்பட்ட அழைப்பு இந்த முறை அனுப்பப்படவில்லை. இந்த நடுவர் குழு, வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், கேமராவிடமிருந்து மட்டுமல்ல அனைத்து தரப்பினரிடமிருந்தும் மறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளில் நாங்கள் சேர மாட்டோம் என இந்து தரப்பு ஏற்கெனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதில் கலந்துகொண்டவர்கள் என, சன்னி வக்ஃப் வாரியத்தின் ஃபருக்கி, நிர்வானி அகாராவின் தரம் தாஸ்தாஸ் (இவர் வெளிப்படையாக நீதிமன்றத்துக்கு வெளியே மற்ற இந்து தரப்பினரை குற்றம்சாட்டினார்; நீதிமன்றத்தில் தலைமை பொறுப்புள்ளவர் என்றும் சொல்லிக்கொண்டார்), இந்து மகாசபையை சேர்ந்த சக்ரபாணி ஆகிய மூவர் மட்டுமே கலந்துகொண்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. என் பார்வையில் இந்த நடுவர் குழு அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறினாலும் அதைச் செய்யாத தரப்பினரைக் கொண்டு மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
2019, அக்டோபர் 14-ம் தேதி, நடுவர்கள், உச்சநீதிமன்றத்துக்கு ஒரு செய்தி அனுப்பினார்கள். அச்சுறுத்தல் காரணமாக ஃபரூக்கிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. அந்த நாளில், இந்தியாவின் தலைமை நீதிபதி, உ.பி.யின் கூடுதல் வழக்கறிஞர் முன்னிலையில், சன்னி வக்ஃப் வாரிய தலைவருக்கு பாதுகாப்பு அளிக்க அமர்வின் சார்பாக ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
விசாரணையின் இறுதி நாளுக்கு முன்பு, நடுவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு மேலும் ஒரு தகவலை அளித்தனர். அதில் என்ன அளிக்கப்பட்டது என்பது குறித்து தலைமை நீதிபதி வெளிப்படுத்தவில்லை. இது மேற்கூறப்பட்ட ஒப்பந்தம் அல்லது என்ன நடந்தது என்பதாக இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.
ரகசிய விவரங்கள் கசிந்தது எப்படி?
இந்த இரகசிய விவரங்கள் ஏன் கசிந்தன? இதன் பின்னால் உள்ள சக்திகள் யார்? இரகசியத்தன்மை குறித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் முகத்தில் அறைந்துள்ளது இந்த கசிவு. இந்த நேரத்தில்தான் இதை வெளியிட வேண்டும் என முடிவு செய்தது யார்?
வருந்தத்தக்க விதமாக, பல ஊடக நிறுவனங்கள், குறிப்பாக இந்த விவரங்களை வைத்திருக்கும் இந்தி டி.வி. சானல்கள் இந்த உண்மையை கூறவில்லை. இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான கட்சிகளுடனான ஒரு வரையறுக்கப்பட்ட பேச்சுவார்த்தை மட்டுமே; அனைத்து இந்து மற்றும் முசுலீம் தரப்பினரால் இது ஆதரிக்கப்படவில்லை என்ற விளக்கத்தை அவை கூறவில்லை.
நடுவர் குழு தொடர்புடையவர்களாலும் அரசியல் தொடர்புடையவர்களாலும் இந்த கசிவு நடந்திருக்கலாம். ஆனபோதும், இந்த பேச்சுவார்த்தை சில தரப்பினருக்கிடையே மட்டுமே நடந்தது என்கிற விளக்கத்தை நடுவர் குழு பதிவு செய்திருக்க வேண்டும்.
சட்டத்தின் எந்த அடிப்படையும் பின்பற்றப்படவில்லை!
எனது கருத்துப்படி, மத்தியஸ்தம் தொடர்பான முதல் விதியே இந்தக் குழுவால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மத்தியஸ்தம் நடந்துகொண்டிருக்கும் போது, ‘சட்டத்தின் நிழலில் பேரம் பேசுவது’ நடந்தது. அதாவது, இந்தக் கசிவின் விளைவு உண்மையான சட்ட நடவடிக்கையில் ஒரு நிழலை ஏற்படுத்தியது.
இந்த கசிவு வெளியான பின், அனைத்து முசுலீம் மனுதாரர்களும் வெளிப்படையாகத் தீர்வு என சொல்லப்பட்ட இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதிலிருந்து தாங்கள் விலகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது சரியான பேச்சுவார்த்தை (இல்லை என்றபோதும்) என்று கருதினால் இந்த கசிந்த ஒப்பந்தத்தை எப்படி சட்ட முடிவாக மாற்ற முடியும்? சிவில் நடைமுறை விதி, ஆணை 23-ன் படி, “ஒரு வழக்கு நிறுவப்பட்ட பின்னர் எந்த நேரத்திலும் வாதி (இந்த வழக்கில் சன்னி வக்ஃப் வாரியம்) அனைத்து பிரதிவாதிகளும் தனது வழக்கை கைவிடலாம் அல்லது நீதிமன்றத்தின் விடுப்புடன் தனது கோரிக்கையின் ஒரு பகுதியை கைவிடலாம்”.
பின்னர், இதில் நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும். மேலும், இது பொருத்தமானது என கருதும் விதிமுறைகளின் அடிப்படையில், வழக்கு மற்றும் உரிமை கோரலின் ஒரு பகுதியை திரும்பப் பெறுதல் அல்லது செலவுகளை செலுத்துவதற்கான உரிமை கோரலை சரி செய்தல் ஆகியவற்றுடன் திரும்பப் பெறுங்கள் எனக் கூறலாம்.
ஆனால், இது திரும்பப் பெறல் அல்ல சமரசம் என்றால், நீதிமன்றம் முடிவு செய்ய அனைத்து தரப்பினரும் கையெழுத்திட வேண்டும். ஆனால் இது மட்டுமில்லை. வேறொரு வகையான வழக்கு உள்ளது, அங்கு ஒரு சிறப்பு நடைமுறை அனைவரையும் பிணைக்கிறது (உத்தரவு 1 விதி 8). இதில் முசுலீம் வழக்கு 4, முசுலீம்களின் பிரதிநிதியாக அனைத்து இந்து தரப்பினருக்கும் எதிரான பிரதிநிதியாக இருந்தது. நீதிமன்றம் அனுமதித்தால் தவிர, அத்தகைய வழக்குகளில் சமரசம் செய்ய முடியாது. ஆணை 23 விதி 3 B இப்படி கூறுகிறது.
“பிரதிநிதிகள் சார்பான வழக்கு நீதிமன்றத்தை தவிர்த்துவிட்டு உடன்படிக்கையோ அல்லது சமரசமோ செய்ய முடியாது. அத்தகைய ஒப்பந்தம் அல்லது சமரசம் நீதிமன்றத்தை தவிர்த்துவிட்டுச் செய்தால் அது செல்லுபடியாகாது”
இந்த சமரசம் தவறானது, மதிப்பில்லாதது என சட்டமே சொல்லியிருந்தாலும் ஊடகங்களும் பொதுமக்களும் பொய்களால் நிரப்பப்படுகின்றனர்.
நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கக்கூடிய வழக்கில் நான் எதுவும் சொல்ல முடியாது. நீதிமன்ற ஆணையை அவமதிக்கும் மற்றும் சட்டவிரோதமான ‘சமரசம்’ என்பதற்கு தரப்பட்ட முக்கியத்தும் குறித்து மட்டுமே நான் கருத்து தெரிவிக்கிறேன். ‘விவகாரம் சமரசத்தை எட்டியது’ என ஊடகங்கள் கத்துகின்றன. ஆனால், இது வழக்கு இல்லை!
படிக்க:
♦ ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக செய்திகளை ‘இருட்டடிப்பு’ செய்த பத்திரிகைகள் !
♦ ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !
உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் அனைத்து விவரங்களும் பொது தளத்தில் கொண்டுவரப்பட வேண்டிய வழக்காக இது இருக்கும் என நான் நினைக்கிறேன்.
தமிழாக்கம்: கலைமதி
நன்றி: தி வயர்