ஹேமந்த் சர்மா என்பவர் எழுதிய “அயோத்யா கா சாஸ்ம்தீத் மற்றும் யுதா மீ அயோத்யா (“Ayodhya ka Chasmdeed” and “Yuddha Me Ayodhya” )” நூல்கள் வெளியிடும் விழா வியாழனன்று (21.09.2012) நடைபெற்றது. நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய தலைவர்  மோகவன் பகவத் நூலை வெளியிட, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலை வகிக்க மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா தலைமை தாங்கினார்.

எல்லா மதங்களைச் சேர்ந்தோரின் சம்மதத்தோடு ராமர் பிறந்த மண்ணில் கோவில் அமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றார் மோகவன் பகவத். அதாவது மற்ற மதத்தவர் சம்மதிக்கவில்லை என்றாலும் கோவில் அமைக்கப்படும் என்பதை ‘மென்மையான’ மிரட்டலாக சொல்கிறாராம்.  என்றைக்கு ராமர் கோவில் அயோத்தியில் இடிக்கப்பட்டதோ அன்றே இராம ஜென்மபூமி இயக்கம் துவங்கி விட்டது, கலாச்சார வெற்றியை அடையும் வரை இந்த இயக்கம் தொடரும் என்றார் அமித்ஷா. கோவில் கட்டாமல் விடமாட்டோம் என்பதுதான் கலாச்சாரமாம். ஆகவே இது இறைவழிபாட்டின் பெயரில் மதவெறியை முன்னிறுத்தும் கலாச்சாரம் என்பதை இவர்களது வன்மத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

அயோத்திதான் ராமர் பிறந்த இடம், அங்கேதான் ராமர் கோவில் இடிக்கப்பட்டது, ஆகவே ராமர் கோவில் அங்கே கட்டப்பட்டே ஆகவேண்டும் என்று மோகன் பகவத் கடந்த புதன்கிழமை கூறியதை இங்கேயும் வலியுறுத்தினார். புதன்கிழமை என்றல்ல, பல ஆண்டுகளாக இதைத்தான் சங்கிகள் கூறுகிறார்கள். கடந்த தேர்தலில் ‘வளர்ச்சி’ என்று நாடகமாடும் தேவை இருந்தது. 90-களில் இவர்களை அதிகாரத்தை நோக்கி அழைத்து வந்தது இந்த ராமர் கோவில்தான் – அதாவது பாபர் மசூதி இடிப்பு!

நூல் வெளியீட்டு விழாவில்…

“எப்போதெல்லாம் அராஜகம், சுயநலம் காரணமாக உண்மை மற்றும் நீதி கண்டுகொள்ளப்படவில்லையோ பிறகு அயோத்தியில் மகாபாரதப் போர் நடக்கும். அப்படி நடக்க கூடாது என்றாலும் நடந்தே தீரும். யார் இதை தடுத்து நிறுத்த முடியும்?”, என்கிறார் மோகன் பகவத். இந்திய மக்களில் யார் ராமர் கோவிலை ஏற்கவில்லையோ, யார் பாபர் மசூதி இடிப்பை எதிர்க்கிறார்களோ அவர்களையெல்லாம் இவர்கள் பாரதப் போரில் சந்தித்து கொல்வார்களாம். எவரும் இதை தடுத்து நிறுத்த முடியாது என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர். இதெல்லாம் உச்சிக்குடுமி நீதிமன்ற பார்வையில் சட்ட விரோத, வன்முறையைத் தூண்டும், பிரிவுகளில் வராது போலும்.

“நாம் பொய்கள் மற்றும் அநீதிகளோடு முன்னே சென்றால் பிறகு வன்முறை நம்மை பின் தொடர்ந்து வரும். உண்மை, நீதி இருக்கும் போது மட்டுமே வன்முறை இருக்காது” என்றும் பகவத் கூறினார். பாபர் மசூதி இடிப்பை ஒட்டியும், இடிப்பிற்கு பிறகும் நடந்த பல்வேறு கலவரங்களில் பலநூறு முசுலீம் மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வன்முறையை நிறுத்தப்படவேண்டுமென்றால் ராமர் கோவில் கட்டுவதை நாம் ஏற்றே ஆகவேண்டுமாம். அடுத்து உண்மை – பொய், நீதி – அநீதி அனைத்தையும் இவர்கள்தான் முடிவு செய்வார்கள். மனுஸ்மிருதி போல இது ஆர்.எஸ்.எஸ். ஸ்மிருதி!

நாம உண்மையை முகங்கொள்ள வேண்டும். நீதியை விரைவில் அளிக்க வேண்டும். தாமதப்படுத்தும் வேலைகள் ஒருபோதும் நடக்காது.ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ராமர் பிறந்த மண்ணில் கோவில் கட்டுவதை விரும்புவதோடு, அதற்கு பங்களிப்பு செய்யவும் விரும்புவதாக அவர் கூறினார். இந்த பங்களிப்பை கலவரங்கள் என்ற பெயரில் இந்தியாவே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

“ராம்ஜன்மபூமி குறித்த விவாதங்கள், யார் இதை (பாபர் மசூதியை) இடித்தார்கள், யார் இதற்கு பொறுப்பு இதர குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியலுக்காக கூறப்படுபவை. ராமனது வனவசாம் 14 ஆண்டுகளில் முடிந்தாலும், அயோத்தியில் அவரது வனவாசம் 500 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது”, என்றார் அவர். ராமர் அங்கே பிறந்தார் என்பது ஒரு இட்டுக்கட்டிய கதை என்பதோடு, பாபர் மசூதி கட்டப்பட்டது ராமர் கோவிலை இடித்து அல்ல என்பதும் வரலாற்று ரீதியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் அணுகுண்டு வெடித்தோம் என்று பிதற்றும் இந்த முட்டாள்களிடம் யார் எந்த வரலாற்று ஆதாரத்தைக் காட்டி என்ன பயன்?

சுதந்திர இந்தியாவைப் பொறுத்தவரை அயோத்தி இயக்கம்தான் மிகப்பெரிய இயக்கம், ராமனையும், அயோத்தியையும் பிரிக்க முடியாது என்றார் அவர். மேலும் ராம ராஜ்ஜியம் என்பது நல்லாட்சி, ராமன்தான் முன்னுதாரணமான ஆட்சியாளர் என்றார். ஒரு மனைவியை மட்டும் வைத்து குடும்பம் நடத்தினான் என்பதைத் தாண்டி ராமனிடம் என்ன முன்னுதாரணம் இருக்கிறது? அதுவும் சீதையை பிறகு தீக்குளிக்க வைத்து கொன்ற ராமன், சீதை மீட்பு எனும் தனது தனிப்பட்ட போருக்காக தனது படைகளை பலி கொடுத்தவன் என்பதில் என்னய்யா பொது நலம் இருக்கிறது? இந்தியாவில் ராமன் மட்டுமே ஒரு மனைவியோடு வாழ்ந்தான் என்றால் மற்ற இந்தியர்களை கொச்சைப்படுத்துவது ஆகாதா?

“ஜனநாயகத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்றாலும் மக்களது நம்பிக்கை எப்போதும் வெற்றி பெறும். இந்த இயக்கமும் இதே பாதையில் பயணிக்கும் என்றார் மோகன் பகவத். அதாவது ‘இந்துக்கள்’ நம்பிக்கையான அயோத்தியில் ராமன் பிறந்தான் என்பதை ஏற்பதுதான் ஜனநாயகமாம். அந்த ஜனநாயகத்தை இந்த நாட்டின் அரசு – நீதிமன்ற அமைப்புக்கள் மரியாதையாக கொடுத்து விடவேண்டும், இல்லையென்றால் அவர்களது வேலையை அவர்கள் செய்து நம்மை கொல்வார்களாம்.

– வினவு செய்திப் பிரிவு.