இந்துத்துவ சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு !
1949 டிசம்பர் 22-ஆம் தேதி நள்ளிரவில் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டதுதான் இந்த உரிமை மூல வழக்கின் தொடக்கம்.
பாபர் மசூதி 1528 வாக்கில் கட்டப்பட்டிருக்கிறது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் சமஸ்தானத்தின் மன்னனாக இருந்த வாஜித் அலி ஷாவின் மனைவி பேகம் ஹசரத் மகல் 1857 காலனியாதிக்க எதிர்ப்புப் போரை தலைமையேற்று நடத்தியவர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான போரில் முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க அளவில் பைசாபாத் சமஸ்தானம் முழுவதும் இந்து முஸ்லிம் ஒற்றுமை நிலவியது.
1857 போரின் தோல்விக்குப் பின் பைசாபாத் சமஸ்தானம் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வருகிறது. 1885இல் பாபர் மசூதி தொடர்பான முதல் உரிமையியல் வழக்கை மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் தொடர்கிறார். மகந்தின் மனுவைத் தள்ளுபடி செய்கிறார் மாவட்ட நீதிபதி சேமியர்ஸ். உரிமையியல் வழக்குகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் சுதந்திரத்துக்குப் பின்னரும் தொடரும் என்பதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் நிலை. அந்த வகையில் பாபர் மசூதி தொடர்பான வழக்கு 1885-இலேயே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்று.
1949 – காந்தி கொலையின் காரணமாக தடை செய்யப்பட்டு, தனிமைப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மீண்டும் தலையெடுக்கும் பொருட்டு முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களைத் தூண்டுவதற்கு எல்லா விதங்களிலும் முயற்சி செய்து கொண்டிருந்தது. டிசம்பர், 1949-இல் அகில பாரத ராமாயண மகாசபா என்ற அமைப்பின் பெயரில் பாபர் மசூதிக்கு எதிரே 9 நாட்கள் விடிய விடிய ராமாயண உபன்யாசம் என்ற பெயரில் மதவெறி தூண்டப்படுகிறது. 1992 டிசம்பரில் பஜனை என்ற பெயரில் பாபர் மசூதியை இடித்ததைப் போலவே, 1949 இலும் இந்த 9 நாள் பஜனையின் தொடர்ச்சியாக டிசம்பர், 22, 1949 இரவில் 50 பேர் கொண்ட கும்பல் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலையை வைக்கிறது. இது தொடர்பாக குற்றவாளிகளின் பெயரைக் குறிப்பிட்டு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. உடனே சிலைகளை அகற்றுமாறு உ.பி. முதல்வருக்கு தந்தி அடிக்கிறார் பிரதமர் நேரு. உ.பி. முதல்வர் பந்த் அகற்ற மறுக்கிறார்.
1950 – “சுயம்புவாகத் தோன்றியிருக்கும் ராமபிரானுக்கு வழிபாடு நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோபால்சிங் விசாரத், பரமஹன்ஸ் என்ற இருவர் மனு தாக்கல் செய்கின்றனர். “சிலைகளை அங்கிருந்து அகற்றவோ, பூசை நடத்துவதைத் தடுக்கவோ கூடாது” என்று மாவட்ட நீதிபதி நாயர் (பின்னாளில் ஜனசங்க கட்சியில் சேர்ந்தவர்) இடைக்காலத்தடை பிறப்பிக்கிறார்.
1959 – பாபர் மசூதி அமைந்துள்ள 1500 சதுர கெஜம் அளவிலான நிலத்தின் மீது உரிமை கோரி, அயோத்தியில் இருக்கும் நிர்மோகி அகாரா என்ற மடம் வழக்கு தொடுக்கிறது. இதற்கு எதிராக சன்னி வக்பு வாரியம் 1961-இல் எதிர் மனு தாக்கல் செய்கிறது.
1986 – வழக்கில் எதிர் தரப்பான சன்னி வக்பு வாரியத்துக்கே தெரியாமல், யாரோ ஒரு பக்தர் பெயரில் மனு தாக்கல் செய்யவைத்து, ராமன் சிலையை வழிபட இந்து பக்தர்களை அனுமதிக்கும் உத்தரவை ஒரு தலைப்பட்சமாகப் பிறப்பிக்கிறது மாவட்ட நீதிமன்றம். இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்து, மசூதிக்குள் இருந்த ராமன் சிலைகளை வழிபட இந்துக்களை அனுமதிக்கிறது ராஜீவ் அரசு. ராம ஜென்மபூமி பிரச்சினையை வைத்து நாடெங்கும் மதவெறியைத் தூண்டுகிறது பாரதிய ஜனதா.
1989 – பாபர் மசூதி வளாகத்தில் ராமன் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூசை நடத்த சங்கபரிவாரத்தை அனுமதித்தது ராஜீவ் அரசு. இந்து மதநம்பிக்கை தொடர்பான இந்த பிரச்சினையில் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது என்றும் பாபர் மசூதியை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது பா.ஜ.க.
1992 – மசூதிக்கு ஆபத்து என்று உளவுத்துறை கூறியிருப்பதால் கரசேவையை அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் நவ-27 அன்று அட்டார்னி ஜெனரல் மிலன் பானர்ஜி ஆட்சேபிக்கிறார். அதை மீறி உச்சநீதிமன்றம் கரசேவையை அனுமதித்தது. போலீசு, துணை இராணுவம் வேடிக்கை பார்த்து நிற்க, மசூதி இடிக்கப்பட்டது. மசூதியை இடித்ததற்காக அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது ஒரு வழக்கு, மத உணர்வை தூண்டியதாக அத்வானி உள்ளிட்டோர் மீது ஒரு வழக்கு என இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
1993 – பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அங்கு கோயில் இருந்ததாவென்று கூறுமாறு நரசிம்மராவ் அரசு உச்ச நீதிமன்றத்தைக் கோரியது. இதுகுறித்து கருத்து கூறவியலாது என்று உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
1994 – பாபர் மசூதி இடிப்பின்போது பதவியிலிருந்த உ.பி. பா.ஜ.க. முதல்வர் கல்யாண் சிங், மசூதியைப் பாதுகாக்க தவறி நீதிமன்றத்தை அவமதித்த “குற்றத்துக்காக” அவருக்கு ஒருநாள் சிறைத்தண்டனை விதித்தார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா. ஓய்வு பெற்றபின் அரசியல் சட்டத்தை மீளாய்வு செய்ய பா.ஜ.க. அமைத்த கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார் வெங்கடாசலய்யா.
2010 – மே 20 – மசூதி இடிப்பை தூண்டிய வழக்கிலிருந்து அத்வானி மற்றும் பிற பா.ஜ.க. தலைவர்களை விடுவித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
2010 – செப்,30 – பாபர் மசூதி நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்து மனுதாரர்களுக்கும், ஒரு பங்கை முஸ்லிம்களுக்கும் கொடுத்து தீர்ப்பளித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
2017 – மார்ச், 21 – பாபர் மசூதி பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்குமாறு இந்த வழக்குக்கு எந்த விதத்திலும் தொடர்பற்ற சுப்பிரமணியசாமியை கேட்டுக் கொள்கிறார் தலைமை நீதிபதி கேஹர்.
2017 – ஏப்ரல், 19 – ரோஹிந்தன் நாரிமன், பி.சி. கோஷ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கிலிருந்து அத்வானி உள்ளிட்டோரை அலகாபாத் நீதிமன்றம் விடுவித்தது தவறு என்றும், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதும் மசூதியை இடித்த கரசேவகர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை சேர்த்து இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரித்து முடிக்குமாறும் உத்தரவிட்டது.
2017 – டிச, 5 – அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போடப்பட்டுள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையை, பா.ஜ.க. தனது அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதால், 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை இவ்வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்குமாறு முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியதையும், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்க மறுத்து, பிப்ரவரி 8 முதல் இறுதி விசாரணை என்று அறிவிக்கிறார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.
– குமார்.
–புதிய ஜனநாயகம், ஜனவரி 2018.
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.