ஆஸ்திரேலியாவில் கடந்த திங்கள் கிழமை அனைத்து செய்தித் தாள்களின் முதல்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் அனைத்தும் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தன. அரசாங்கம் ஊடகங்களின் மீதான ஒடுக்குமுறையை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு எதிராக ஆஸ்திரேலிய பத்திரிகை ஊடகங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கங்கள் இணைந்து இவ்வகையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.
தொலைகாட்சி, வானொலி, இணையதளம் மற்றும் அச்சு ஊடகங்களின் “தெரிந்து கொள்வதற்கான உரிமை” என்ற பெயரிலான கூட்டியக்கம், இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் எதிர் துருவப் பத்திரிகை நிறுவனங்களான நியூஸ் கார்ப்பரேசந் ஆஸ்திரேலியா மற்றும் Nine எண்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்களும் கூட இந்த விவகாரத்தில் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.
படிக்க :
♦ உ.பி. : முசுலீம் என்பதாலேயே பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் !
♦ இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !
இது மட்டுமல்லாமல், தொலைக்காட்சிகளில் முக்கிய நேர நிகழ்ச்சிகளும், இருட்டடிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டன. பத்திரிகைகள் என்ன காரணத்திற்காக இந்த எதிர்ப்பை பதிவு செய்கின்றனர் ?
கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக தேசியப் பாதுகாப்பு சட்டங்கள் என்னும் பெயரில் பத்திரிகைகளின் சுதந்திரத்தை முடக்கி வருகிறது ஆஸ்திரேலிய அரசு. துப்பறியும் பத்திரிகையாளர் பணியை மட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், அதனைக் குற்றமாக வரையறுத்தது அரசு.
கடந்த ஜுன் மாதம், நியூஸ் கார்ப்பரேசன் ஆஸ்திரேலியா பத்திரிகை நிறுவனத்தைச் சேர்ந்த அன்னிகா என்ற பத்திரிகையாளரின் வீட்டிற்குள் சென்று தேடுதல் வேட்டை நடத்தியது ஆஸ்திரேலிய போலீசு. ஆஸ்திரேலிய மக்களை கண்காணிக்க ஆஸ்திரேலிய அரசு ரகசியமாக மேற்கொள்ளவிருந்த திட்டத்தைப் பற்றி துப்பறிவதற்கான பணியில் அன்னிகா ஈடுபட்டிருந்தார்.
இந்தக் கூட்டியக்கத்தின் மையமான கோரிக்கையே, தேச விரோத சட்டத்தின் கீழ் தண்டிப்பதிலிருந்து பத்திரிகையாளர்கள், உள்ளிருந்து தகவல்களை அம்பலப்படுத்துபவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே ஆகும்.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து ஆஸ்திரேலியாவின் பிரபல செய்தி நிறுவனமான ஏபிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், “ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரும் இரகசிய ஜனநாயகமாக மாறிவரும் அபாயம் இருக்கிறது” என்கிறார்
ஆஸ்திரேலியாவில், அரசு மக்களை ரகசியமாகக் கண்காணிப்பதை அம்பலப்படுத்த பத்திரிகையாளர்களும், பத்திரிகை நிறுவனங்களும் முயற்சிக்கி்றார்கள். அதற்கு தடை ஏற்படும்போது ஒருங்கிணைந்து போர்க்குரல் எழுப்புகிறார்கள்
ஆனால் இந்தியாவில் நமது பத்திரிகைகளின் நிலைமை என்ன ? ஒரு பிரதமரிடம் பேட்டி எடுப்பதற்குக் கூட வெட்கமில்லாமல் கேள்விகளை முன் கூட்டியே கொடுத்து பதிலை ஒப்புவிக்கச் சொல்கிறார்கள்.
படிக்க :
♦ மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி
♦ மோடியைக் காப்பாற்றும் பெரும்பான்மை ஊடகங்கள் !
இந்திய மக்களை ஒடுக்கவும் கண்காணிக்கவும் அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தி அரசுக்கு ஒத்து ஊதும் வேலையையே செய்து வருகின்றன பெரும்பான்மை ஊடகங்கள் !
மக்களைக் கண்காணிக்கும் அரசாங்கங்களின் பட்டியலில் உலக அளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ரசியா, சீனாவிற்கு அடுத்தபடியாக சொந்த நாட்டு மக்களை கண்காணிக்கிறது மோடி அரசு. இதற்கெல்லாம் தேசப் பாதுகாப்பு ராகம் பாடி, இத்திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நியாயம் கற்பிக்கும் வேலையையே செய்கின்றன ஊடகங்கள்!
ஜனநாயகம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நாட்டில், மக்களுக்கான சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் கானல் நீர்தான் !
நந்தன்
செய்தி : இந்தியன் எக்ஸ்பிரஸ்