இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !

இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என அமித் ஷா பேசியுள்ளார். இனி இவர்கள் எழுதும் வரலாறு இந்திய வரலாறாக அல்ல ‘இந்துய’ வரலாறாக தான் அமையும்.

0

“இந்திய வரலாற்றை இந்தியப் பார்வையில் திருத்தி எழுத வேண்டியது இருக்கிறது” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் அமித்ஷா.

கடந்த வாரத்தில், வாரனாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த “குப்த வம்ச வீரர் : ஸ்கந்த குப்தா விக்ரமாதித்யா” என்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

Amit shahஇதில் பேசிய அமித்ஷா, குப்த சாம்ராஜ்ஜிய மன்னராகிய ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யாவினுடைய பங்களிப்பு குறித்து தற்போதைய தலைமுறைக்குத் தெரியாதது வருத்தமளிப்பதாகவும், அதற்கு முக்கியக் காரணம் போதுமான ஆவணப்படுத்தல்கள் இல்லாததுதான் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சாவர்க்கர் மட்டும் இல்லையென்றால், 1857 சுதந்திரப் போர், வெறும் கலகமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அவர்தான் அதனை சுதந்திரப் போர் என்று அதை அழைத்தார், என்றும் கூறினார்.

இந்திய வரலாறு – இந்தியப் பார்வையில் மறுவார்ப்பு செய்து எழுதப்படவேண்டிய அவசியம் இருக்கிறது என்றும், இதற்காக நாம் யாரையும் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பது பயனற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்திய வரலாறு இதுவரையில் பிரிட்டிஷ் பார்வையிலான வரலாறாக இருக்கிறதாம். அதை ‘இந்துய’ பர்வையிலிருந்து மீண்டும் எழுதப் போகிறாராம்.

“நமது வரலாற்றை எழுதுவது நமது கடமை அல்லவா? இன்னும் எவ்வளவு நாளைக்கு பிரிட்டிஷை குற்றம்சாட்டப் போகிறோம். நாம் யாருடனும் பிரச்சினை செய்யப் போவதில்லை, வெறுமனே எது உண்மையோ அதை எழுதப் போகிறோம்.” என்று கூறியிருக்கிறார்.

இந்திய வரலாற்றை திருத்தி எழுதப் போவதாக அமித்ஷா பகிரங்கமாகக் கூறியிருக்கும் சூழலில் சில நாட்களுக்கு முன்னர், மகாராட்டிர பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்க எத்தனித்துள்ளது. சாவர்க்கருக்கு இந்திய அரசின் “பாரத ரத்னா” விருது கொடுப்போம் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படிக்க:
அமித்ஷா-வின் ஆணவப்பேச்சு ! 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு | பு.மா.இ.மு கண்டனப் போராட்டம் !
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவகம் புரிந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் சாவர்க்கர் கும்பலை சுதந்திரப் போராட்ட வீரர்களாக சித்தரிக்க, வரலாற்றை ‘இந்துய’ பார்வையில் மாற்றி எழுதுவதற்கான ஒரு முயற்சிதான் இது.

இதனை பலரும் கண்டித்திருக்கின்றனர். இந்த தேர்தல் அறிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணீஷ் திவாரி கூறுகையில், “மோடி அரசு ஏன், இந்த தேசத்தின் தந்தையாகிய காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு பாரதரத்னா வழங்கக் கூடாது ?” என்று வினவியுள்ளார்

சி.பி.ஐ கட்சியின் பொதுச்செயலர் டி.ராஜா, “காந்தியைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், பாஜக, காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட சாவர்க்கருக்கு பாரதரத்னா கோருகிறது. இனி இவர்கள் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கும் சிலை வைக்கக் கோருவார்கள். இது அவர்களது நிகழ்ச்சி நிரலில் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமித்ஷாக்கள் வரலாற்றை ‘இந்துயப்’ பர்வையில் மாற்றி எழுதத் தொடங்கிவிட்டார்கள் ! இனியும் அமைதியாக வேடிக்கைப் பார்ப்போமானால், சோசலிசக் குடியரசை உருவாக்கப் போராடிய பகத்சிங்குகள் அர்பன் நக்சல்களாகப் பதிவு செய்யப்படும் காலம் நெடுந்தொலைவில் இல்லை !


– நந்தன்
நன்றி: ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க