அயோத்தி ராமர் கோவில் பகுதி நேர பணியாளரான கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் துப்புரவுப் பணியாளராகக் கல்லூரி மாணவி ஒருவர் பணியாற்றி வருகிறார். கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் பகுதி நேரமாக, கல்லூரியில் படித்துக்கொண்டே ராமர் கோவிலில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அயோத்தி கான்ட் போலீசு நிலையத்தில், “தன்னை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தனர்” என அந்த மாணவி புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படிக்க: உ.பி: அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
மேலும், “அயோத்தி மாவட்டத்தின் சஹாதத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த வன்ஷ் சவுத்ரி, கடந்த ஆகஸ்ட் 16 அன்று என்னைக் கடத்தி, ராமர் கோவிலின் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்து வைத்தார். தொடர்ந்து அவரது நண்பர்கள் உட்பட 8 பேர் என்னைக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். 2 நாட்கள் என்னைக் கொடுமைப்படுத்தி, இதுகுறித்து வெளியே சொன்னால் என்னையும், எனது குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிடுவதாக மிரட்டி ஆகஸ்ட் 18 அன்று விடுவித்தனர். மிரட்டியதால் இந்த சம்பவத்தை நான் யாரிடமும் கூறவில்லை. உயிருக்குப் பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன். ஆனால் ஆகஸ்ட் 25 அன்று வன்ஷ் சவுத்ரி என்னை மீண்டும் கடத்திச் சென்றார். அவருடன் உதித் குமார், சத்ரம் சவுத்ரி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் இருந்தனர். கார் விபத்தில் சிக்க நான் அவர்களின் பிடியிலிருந்து தப்பினேன்” என மாணவி அளித்த அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள கான்ட் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஆகஸ்ட் 26 அன்று புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகாரை கான்ட் போலீசு நிலைய போலீசார் ஏற்கவில்லை. துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன் செப்டம்பர் 2 அன்று வழக்குப் பதிவு செய்தனர். 10 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 13 அன்று வன்ஷ் சவுத்ரி மற்றும் அவரின் நண்பர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அயோத்தி கான்ட் போலீசு நிலைய ஆய்வாளர் அம்ரேந்திர சிங் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் அரசியல் ஆதாய பொருளான அயோத்தி ராமர் கோவிலில் பகுதி நேர பணியாளரான கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இந்த பாசிச கும்பலின் ராமராஜ்ஜியத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை.
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram