பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் முற்றிலும் பாதுகாப்பற்ற மாநிலமாக விளங்கும் யோகி ஆதித்யநாத் ஆட்சி புரியும் உத்தரப்பிரதேசத்தின் பரூக்காபாத்தில் மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த வாரம் பரூக்காபாத் அருகே காயங்கஞ்ச் பகுதியில் கோவிலுக்குச் சென்ற 2 தலித் சிறுமிகளை ஜாதவ் சாதிவெறியர்கள் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். அச்சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகப் பெற்றோர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில், பரூக்காபாத் கோட்வாலி அருகே 13 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த அதிர்ச்சிக்குரிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. கோட்வாலி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை, அதே பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றும் பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த 13 வயது சிறுமி 5 மாதத்திற்கு முன்பே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கருவுற்ற பின்பே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


படிக்க: உத்தரப்பிரதேசம்: மரத்தில் சடலங்களாகத் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட தலித் சிறுமிகள்


ஐந்து மாதத்திற்கு முன்பு சிறுமி இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்பொழுது பங்கஜ் மற்றும் அமித் ஆகிய கயவர்கள் சிறுமியைக் கடத்தி தங்கள் வீட்டிற்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைப் பற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் சிறுமி பெற்றோர்களிடம் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி கருவுற்றதைத் தொடர்ந்து பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அச்சிறுமியின் பெற்றோர்கள் ஆகஸ்ட் 31 அன்று கோட்வாலி போலீசு நிலையத்தில் புகார் அளித்தனர். பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களைக் கைது செய்ததாக தற்போதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் உத்தர்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. வன்முறையாளர்கள் ஆதிக்க சாதியினராய் இருக்கும் போது உரிய நடவடிக்கை கூட எடுக்கப்படுவதில்லை. இதுதான் சங்கிகளால் மெச்சிப் புகழப்படும் இந்து ராஷ்டிரத்திற்கான ‘உ.பி மாடல்’இன் யோக்கியதை.


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க