உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டம் காயம்கஞ்ச் கிராமத்தில் இரண்டு தலித் பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (27/08/24) அன்று கண்டெடுக்கப்பட்டனர். இப்பெண்களுக்கு 15 மற்றும் 18 வயதாகிறது. இரண்டு பெண்களும் திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவிற்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை.
சிறுமிகள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் இரவு முழுக்க கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மரத்தில் ஒரே துப்பட்டாவில் சடலங்களாய் தொங்கிய நிலையில் அவர்கள் இருந்தனர்.
“இரவு 9 மணிக்கு அவர்கள் கோவிலுக்குச் சென்றனர். ஆனால் திரும்பி வரவில்லை. அருகிலுள்ள என் சகோதரி வீட்டிற்குச் சென்று என் மகள் இருக்கிறாளா என்று தேடினேன். காலை 5 மணியளவில், மரத்தில் இரண்டு உடல்கள் தொங்கிக் கொண்டு இருப்பதாக உறவினர் தெரிவித்தார். அங்கு சென்று பார்த்த போதுதான் தொங்கிக் கொண்டிருந்த இரு பெண்களில், ஒருவர் என்னுடைய மகள் என்றும் மற்றொருவர் வீட்டு அருகிலுள்ளவரின் மகள் என்றும் தெரிந்து கொண்டேன்” என்று இறந்த ஓர் பெண்ணின் தந்தை கூறுகிறார்.
ஃபரூக்காபாத்தின் போலீசு கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்சி, இப்பெண்களின் உடல்கள் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டது. இரு சிறுமிகளும் நெருங்கிய நண்பர்கள், அயலர்கள் மற்றும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். துப்பட்டாவின் ஒரு முனையில் ஒரு பெண்ணின் உடலும் மற்றொரு முனையில் மற்றொரு பெண்ணின் உடலும் தொங்கிக் கொண்டு இருந்தது. இதனை பார்க்கும்போது அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், விசாரணையை தீவீரபடுத்தியுள்ளோம்” என்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
படிக்க: உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்
போலீசு ப்ரைமா ஃபேசி (primae facie) அடிப்படையில் இவ்விரு பெண்களும் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கொலை செய்து தான் துப்பட்டாவில் தொங்கவிடப்பட்ட உள்ளனர் என்று இறந்த ஒரு பெண்ணின் தந்தை குற்றம்சாட்டினார்.
அவர்களது குடும்பத்தினர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தும் கூட பெண்கள் தற்கொலை செய்து இறந்ததாக உடற்கூறாய்வு அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக போலீசார் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) தெரிவித்தனர்.
“பெண்கள் தூக்கில் தொங்கி இறந்துள்ளனர். உடல்களில் வெளிக் காயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளனரா என்று கண்டுபிடிக்க அவர்களது மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்று தலைமை மருத்துவ அதிகாரி அவிந்திர சிங் கூறினார்.
தற்போது வெளிவந்துள்ள உடற்கூறு ஆய்வு அறிக்கை போலீசாரால் முன்பு வைக்கப்பட்ட விசாரணையுடன் ஒத்துப் போவதாக உள்ளது. தற்பொழுது விசாரணையை அடுத்த கட்டத்திற்குத் தள்ளி இருக்கிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி தெரிவித்தார்.
அதிகாரிகளின் கூற்று ஒருபுறம் இருக்க, இறந்த பெண்களின் பெற்றோர்கள் இதனை மறுக்கின்றனர். “நீங்கள் பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகக் கூறுகிறீர்கள். ஆனால் அவர்களது உடம்பில் உள்ள காயங்களை நீங்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்த அறிக்கை போலியாக உள்ளது. அவர்கள் தாங்களாகவே தூக்கிலிட்டுக் கொள்ளவில்லை யாரோ அவர்களைக் கொலை செய்துள்ளனர்” என்று இறந்த ஒரு பெண்ணின் தந்தை பி.டி.ஐ செய்தி முகமையின் காணொளியில் தெரிவித்தார். இறந்த பெண்ணின் மற்றொரு தந்தையும் அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கிறார். எங்களுக்கு உண்மைகள் வெளிவர வேண்டும் நாங்கள் யாரிடமும் பகையை வைத்துக் கொள்ளவில்லை” என்று கூறினார்.
இதன்பிறகு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பெண்களின் இறுதிச் சடங்கை நடத்த குடும்பத்தினர் மறுத்தனர். அதிகாரிகளும் குடும்ப உறவினர்களைச் சந்தித்து விரைவான விசாரணை நடத்துவதாக உறுதி அளித்த பின்னரே இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை நடத்த குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர்.
படிக்க: கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா
சமாஜ்வாதி, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இவ்வழக்கு கையாளப்பட்ட விதம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். “பிஜேபி ஆட்சியில் நீதியை எதிர்பார்ப்பது கூட குற்றமாகும். இந்த நிகழ்வு மிகவும் துக்ககரமானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீது நிர்வாகத் துறையின் இந்த அணுகுமுறை சகித்துக் கொள்ள முடியாது” என்று இறந்த பெண்ணின் ஒரு தந்தையின் காணொளியைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“ஏன் ஒரு தந்தை இவ்வளவு கொடூரமான நிகழ்வுக்குப் பின் இறப்பில் இதுபோன்று கேள்விகள் எழுப்ப வேண்டும். பாதிக்கப்பட்ட ஒருவரின் தந்தைக்கு அவரது மகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அறிந்து கொள்வதற்கு உரிமை இல்லையா? இறந்த பெண்களின் உடல்களைத் தகனம் செய்வதற்கு ஏன் நிர்வாகம் இவ்வளவு அவசரப்படுகிறது. நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை பல கேள்விகளை எழுப்புகிறது.
ஹத்ராஸ், உன்னாவ், ஃபரூக்காபாத் என்று அதே கொடூரமான கதைகள் தொடர்கிறது. தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகள், பெண்கள், பலவீனமானவர்கள் என அனைவரும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை கைவிட்டு விட்டனர்” என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பெண்களின் பாதுகாப்பு அரசியல் அரங்கில் வலியுறுத்தப்பட வேண்டும். மேலும் இந்த வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
“பிஜேபி அரசின் இந்த அமைதி இரண்டு காரணங்களைக் கொண்டுள்ளது. ஒன்று பிஜேபி பெண்களுக்கு எதிரான சிந்தனையையும் நடவடிக்கையும் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தலித் என்பது மற்றொரு காரணம்” என்று அகிலேஷ் யாதவ் மேலும் கூறினார்.
படிக்க: ஹலால் சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை விதித்த யோகி!
2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டிருப்பதாகப் பாராட்டினார். “இப்போது 16 வயது சிறுமி கூட நகை அணிந்து நள்ளிரவு 12 மணிக்கு எந்த பயமும் இல்லாமல் சுற்றித் திரிய முடியும். 2017-ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த மாற்றம் சாத்தியமானது” என்று கூறினார்.
ஆனால், தற்போது இரவு 9 மணியளவில் கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவிற்குச் சென்ற சிறுமிகள் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அத்தகைய குற்றங்களைக் கையாள்வதில் அம்மாநில போலீசின் அணுகுமுறையும் யோகி ஆதித்யநாத் அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகின்றன.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்களின் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. அங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 65,743 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021 ஆம் ஆண்டில் 56,083 வழக்குகளும் 2020 ஆம் ஆண்டில் 49,385 வழக்குகளும் பதிவாகியுள்ளன. “இரட்டை எஞ்சின் சர்க்கார்” ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் ஆண்டுதோறும் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருவதையே புள்ளி விவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram