தி திராவிடர் மற்றும் பழங்குடியின  மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி தருவதற்காக உருவாக்கப்பட்டது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை (Adi Dravidar and Tribal Welfare Department – ADTWD). இத்துறை மூலம் நிதி ஒதுக்கி மாணவர்களின் அடிப்படை தேவைகள், கல்வி உரிமைகள் முதலானவற்றை நிறைவேற்றித் தர வேண்டியது அரசின் கடமை.

தமிழ்நாட்டிலுள்ள  இத்துறை நடத்தும் பெரும்பான்மையான மாணவர் விடுதிகளில் உள்ள  கட்டிடங்கள், சுகாதார வசதி, உணவு வசதி, குடிநீர் வசதி  போன்றவை இம்மாணவர்கள் விடுதிகளின் அவல நிலைகளுக்கு சாட்சியாக பல வருடங்களாக இருக்கிறது. இவ்விடுதிகளைப் பற்றி ஒரு கட்டுரையை இந்து ஆங்கிலப் பத்திரிகை அக்டோபர் 13-ம் தேதி வெளியிட்டு இருந்தது.

அதில், இத்துறை நடத்தும் சில மாணவர் விடுதிகள் பற்றி தமிழ்நாட்டில் உள்ள  பல்வேறு செயல்பாட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட உண்மைத் தகவல்களைப்  பட்டியலிடுகிறது.

திருச்சி திருவெறும்பூரில் ஒவ்வொரு நாளும் தண்ணீருக்காக மாணவர்கள் படும் அன்றாடத் துயரத்தையும், கோடம்பாக்கம் விடுதியில் அளிக்கப்படும் தரமற்ற உணவு பற்றியும், கானங்கரையில் பள்ளியின் விடுதிக்கு கட்டிடமே இல்லாததையும், அதனால் மாணவர்களுக்காக வாங்கப்பட்ட கட்டில்கள் துருப்பிடித்துப் கிடக்கிறது என்றும்  மதுரையில் உள்ள  விடுதிகளில் படிப்பிற்காக எந்தவித உதவியோ மற்றும் சிறப்பு பயிற்சிகளோ இல்லை என்றும் அக்கட்டுரை தெரிவிக்கிறது.

கொங்கடையில் உள்ள பழங்குடியின மாணவர் பள்ளியில் கட்டமைப்பு வசதி இல்லாததால் இப்பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்கள் வேலைக்குப் போவது, இடைநிற்கும் மாணவிகள் திருமணம் செய்து  செல்வது என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் ஒரு தன்னார்வலர் கூறுகிறார். (2018-ல் ஒன்பதாம் வகுப்பில் 49 பழங்குடியின மாணவர்கள் படித்து வந்தனர். 2019-ல் பத்தாம் வகுப்பில் வெறும் 17 மாணவர்கள்தான் படிக்கின்றனர்)

டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரியில் வேலைப் பார்க்கும் ஒரு கல்வியாளர், தான் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தங்கியிருந்த போது உள்ள விடுதியின் மோசமான நிலை இன்னமும் மாறாமல் அப்படியே தொடர்வதாகக் கூறுகிறார். கோடம்பாக்க விடுதியை சேர்ந்த ஒரு மாணவர்  ஒருவர், தான்  அறை எடுத்து தங்குவதற்கு வசதி இல்லாததால் அங்கு தங்கியிருப்பதாகவும், பகுதி நேர வேலையாக கேட்டரிங் வேலைக்குப் போவதாகவும், இவ்விடுதியில் அளிக்கப்படும் உணவு சாப்பிடுவதற்கு மிகவும் மோசமாக இருப்பதால், தான் விடுதியில் சாப்பிடுவதில்லை என்றும் கூறுகிறார்.

வார்டன்களின்  முறையற்ற நியமனம், பரவலான ஊழல்,  கண்காணிப்பு முறைகள் இல்லாதது, சரியான கணக்கீடு இல்லாதது, மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி நிதி மோசடி செய்வது போன்ற முறைகேடுகளே விடுதிகளின் மோசமான நிலைமைகளுக்கு காரணம் என்று செயல்பாட்டாளர்கள் பட்டியலிடுகிறார்கள்.

இவ்விடுதிகளின் மாணவர்கள் பட்டினியாகக் கிடந்து பள்ளிக்குச் செல்வதும், தண்ணீருக்காக அவதிப்படுவதும், அழுக்கடைந்த கட்டிடங்களிலும் வசிப்பதும், அதன் கழிப்பறை, செப்டிங் டேங்குகளாக இருப்பதும் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பள்ளிகள் முதல் முதுநிலை கல்லூரிகள் வரை  ATWD-ன் கீழ் இயங்கும் விடுதிகளின் எண்ணிக்கை 1,675 இருக்கிறது. இதில்  மொத்தம் 1,25,602 மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் பள்ளி மாணவர்களுக்கு உணவிற்காக மாதம் ஒன்றுக்கு ரூ. 900 ஒதுக்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு ரூ. 30 (ஒரு வேளை உணவிற்கு  ரூ. 10) இதுவே கல்லூரி மாணவர்களுக்கு என்றால் ஒரு மாதத்துக்கு ரூ. 1000 ஒதுக்கப்படுகிறது. சோப்பு மற்றும் எண்ணெய்க்காக  பள்ளி மாணவர்களுக்கு ரூ 50-ம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ 75-ம் ஒதுக்கப்படுகிறது. ஒருவேளை உணவிற்காக பத்து ரூபாய் செலவில் மாணவர்கள் எவ்வாறு சத்துள்ள உணவை உண்ண முடியும்?

மாணவர்களின் ஒரு வேளை உணவிற்காக அரசு ஒதுக்கும் இந்த பத்து ரூபாயும் கூட, முழுமையாக போய்ச்சேருவதில்லை. துறை அதிகாரிகள் தொடங்கி விடுதி வார்டன் உள்ளிட்டு சமையலர் வரையில் தங்களது பங்கை ஒதுக்கிக்கொண்டது போக எஞ்சிய தொகைதான் விடுதி மாணவர்களுக்கு செலவிடப்படுகிறது.

எவ்வாறு ஆரோக்கியமாக படிப்பில் கவனம் செலுத்த முடியும்? இப்படி இம்மாணவர்களின் உணவு செலவிற்காக  இந்த அரசு நிதி ஒதுக்கவதில் இருந்தே இம்மாணவர்களைப் பற்றிய இந்த அரசின் கண்ணோட்டம் வெளிப்படுகிறது.

மாணவர்கள் இதை அனைத்தையும் சகித்துக் கொண்டு கல்வி கற்க வேண்டும்  இல்லையெனில் அவர்கள் விடுதியில் இருந்தும், ஏன் கல்வியில் இருந்தும் வெளியேற வேண்டியதாக உள்ளது.

ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளின் நிலைமை அடிப்படை வசதிகள் கூட  இல்லாமல்  இருக்கிறது. அவ்வப்போது எங்காவது ஒரு இடத்தில்  விடுதிக்கு பெயிண்ட் அடிப்பதை தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை. இவ்விடுதிகளின் அவலநிலையை இத்தனை வருடங்களாக மாற்ற முடியாத அரசோ, ADTWD தன் விடுதிகளை முழுவீச்சில் சீர்படுத்துவதாக பொய் பேசி வருகின்றது.

படிக்க:
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!

நான்கு மாதத்திற்கு முன்பு துடியலூர் அருகேயுள்ள வெள்ளைகிணறு பகுதியில் உள்ள ஐ.டி.ஐ. மாணவர்கள் தங்கும் விடுதியில் வழங்கப்படும் உணவின் தரத்திற்கு எதிராக, கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாருக்கு அதிகபட்சமாக அவ்விடுதியின் சமையல்காரர் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டார். மனு அளிப்பதன் மூலம் விடுதிகளின் அவலநிலை மாறப்போவதில்லை என்பதற்கு இச்சம்பவமே சாட்சி.

பொதுவில் அரசு விடுதிகள் அனைத்திலுமே இவ்வகையான குறைபாடுகள், போதுமான நிதிஒதுக்கீடுகள் இல்லாத நிலை இருப்பினும் அவற்றுடன் ஒப்பிடுகையில் ஆ.தி.நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளின் நிலை அதற்கும் கீழானதாகத்தான் இருந்து வருகிறது. இன்றளவும் ஊரும் சேரியும் பிரிந்து கிடப்பதைப் போல இத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளை பாரபட்சமாகத்தான் அரசே நடத்தி வருகிறது என்பதையும் மறுக்கமுடியாது. இது அரசே கடைபிடிக்கும் நவீனத் தீண்டாமை.

இவ்விடுதிகளின் நிலைமைக்கு எதிராக  மாணவர்கள் அவ்வப்போது நடத்தும் போராட்டங்களினால் தற்காலிக தீர்வுகூட எட்டப்படவில்லை என்பதுதான் உண்மை. தற்காலிக தீர்வுகளைத்  தாண்டி, மாணவர்கள் தங்கள் கல்வி உரிமையை நிலைநாட்ட வேறு விதத்தில் போராட வேண்டிய சூழலை அரசே  ஏற்படுத்துகிறது. ”எத்தனை முறைதான் போராடுவது” என்று மாணவர்கள் சலித்துக்கொள்வதாலோ, ”ஒன்றும் செய்துவிடமுடியாது” என ஒதுங்கிச் செல்வதாலோ தீர்வு கிட்டாது.

இதற்கு பிரேசிலைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்கள் தங்களுடைய சுகாதார உரிமையை நிலைநாட்டுவதற்காக நடத்திய போராட்டம் நமக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.

பிரேசில் பழங்குடியினர் தங்களுடைய வாழ்வுரிமையை பாதிக்கும் சுரங்க நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல கட்டமாகப் போராடி வருகின்றனர். பிரேசில் அரசை எதிர்த்து பல போராட்ட வடிவங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பிரேசில் அரசு அம்மக்களை வஞ்சிக்கும் விதமாக, அம்மக்களின் சுகாதார  உரிமையை பறிக்க முயல்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரேசில் பழங்குடியினரின்  மத்தியில் பணியாற்றும் உழைக்கும் வர்க்கத்திடமிருந்து வந்த கியூப மருத்துவர்களை கியூபா நாட்டிற்கு  திரும்ப அனுப்பவதற்கான திட்டத்தை செயல்படுத்திவருகிறது.

பிரேசில் பழங்குடியினருக்கு அளிக்கப்படும் மருத்துவ நிதிகளை குறைப்பது, சுகாதாரத் துறையை தனியாருக்கு அனுமதிப்பது போன்ற பிரேசில் அதிபர் பொல்சனாரோ கொண்டுவந்த சுகாதார கொள்கையை எதிர்த்து, பிரேசில் பழங்குடியினப் பெண்கள் ஆயிரக்கணக்கானவர்கள்  வில், அம்புகளோடு சுகாதார அமைச்சகத்தை நோக்கிப் பேரணி சென்றனர். பேரணியின் இறுதியாக 200-க்கும் மேற்பட்ட பழங்குடியினப் பெண்கள் அரசின் சுகாதார அமைச்சகத்திற்குள் புகுந்து சுகாதார அமைச்சர்  உடனடியாக வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தோடும் பழங்குடியினர்களின் சுகாதார உரிமைகளைப் பாதிக்கும் கொள்கையை கைவிட வேண்டும்  என்று அமைச்சகத்தின் உள்ளேயே  தங்கிப் போராடினர். அமைச்சகத்தின் உள்ளேயும், வெளியேயும்  தங்களுடைய பராம்பரிய நடனங்களை ஆடினர். பெண்களால் மட்டுமே நடத்தப்பட்ட இப்போராட்ட வடிவத்தை கண்டு பீதியடைந்த பிரேசில் சுகாதார அமைச்சகம்,  பழங்குடியினத் தலைவர்கள் உடனான பேச்சுவார்தைக்குப் பிறகு பின்வாங்கியது.

படிக்க:
சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்
அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்

மாணவர்களும் மனு அளிப்பதன் மூலமும், அவ்வப்போது நடக்கும் போராட்டங்களினாலும்  நம் கல்வி உரிமையை நிலை நாட்ட முடியாது.  பிரேசில் பழங்குடியினப் பெண்களின்  போராட்ட வடிவம் நமக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது. கல்வித்துறை அலுவலகத்தை மாணவர்கள் ஆக்கிரமித்து விடாப்பிடியாக போராடுவதன் மூலம்தான் விடுதிகளின் அவலநிலையை மாற்ற முடியும். அதற்கு முதற்கட்டமாக  புரட்சிகர மாணவர் அமைப்புகளில் ஒருங்கிணைய வேண்டியது அவசியமாகிறது.


– பரணிதரன்.
செய்தி ஆதாரங்கள் :thehindu | bbc | apib

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க