ங்களது வாழ்விடங்களை விழுங்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. ஆனால், அவர்களை “நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்றும் “நக்சலைட்டுகள்” என்றும் ஆளும் வர்க்கங்களும் அடிவருடி ஊடகங்களும் சித்தரிக்கின்றன. வளர்ச்சிக்கு எதிராக அவர்கள் ஏன் இருக்கிறார்கள்? என்று மக்கள் கேட்கிறார்கள்.

பழங்குடிகளின் கடுமையான தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பிறகும் அவர்களது இடங்களை வலுக்கட்டாயமாக தொழிற்சாலைகள் ஆக்கிரமித்ததும் பழங்குடிகளுக்கு என்ன நேர்ந்தது? வளர்ச்சி அவர்களுக்கோ அவர்களது இடங்களுக்கோ பயனளித்ததா?

கடுமையான எதிர்ப்பிற்கு பிறகும் கூட நிறுவனங்களால் எப்படி பழங்குடிகளது வாழிடங்களை கைப்பற்றிக்கொள்ள முடிந்தது என்பதை புரிந்து கொள்ள அப்படியான இடங்களுக்கு நேரில் செல்வது இன்றியமையாதது. மாநில அரசுகள் மற்றும் காவல்துறையின் உதவியினாலேயே இத்தகைய ஆக்கிரமிப்புகள் சாத்தியமானது. இந்நடவடிக்கையில் மக்களின் இயக்கங்கள் நசுக்கப்பட்டன. மேலும், போராட்டக்காரர்கள் சிறைச்சுவர்களுக்குள்ளே அடைக்கப்பட்டனர்.

இப்பின்னணியில் இது போன்ற இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஒடிசாவின் காஷிபூர் (Kashipur) தொகுதியை சேர்ந்த குச்சைபடார் (Kuchaipadar) கிராமம் அதற்கு பதிலளிக்கிறது.

மண்ணின் மைந்தர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக 1992 -ம் ஆண்டில் டாடாவும் பிர்லாவும் பாக்சைட் சுரங்க மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களைத் தொடரும் திட்டங்களை அங்கே கைவிட்டனர். பின்னர், உட்கல் அலுமினா (Utkal Alumina – ஹிண்டால்கோ மற்றும் கனடிய நிறுவனம் ஒன்றின் கூட்டு நிறுவனம்) அங்கே நுழைந்தது. இம்முறையும் மக்கள் எதிர்த்தனர். ஆனால், மாநில அரசாங்கம் அந்நிறுவனத்தை அனுமதித்தது. கூடுதலாக மக்கள் கருத்தை அரசாங்கம் கேட்பதாய் கூறியது.

Hindalco

1992-லிருந்து பல்வேறு போராட்டங்களில் பகவான் மஜ்ஹி கலந்து கொண்டிருக்கிறார். 1996 லிருந்து பிரக்ருதிக் சம்பத்தா சரக்ஷ பரிஷத் (Prakrutik Sampada Suraksha Parishad) என்ற 24 கிராமங்களை உள்ளடக்கிய இயற்கை வளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். கருத்துக் கேட்பு நிகழ்வில் பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் உட்கால் அலுமினா நிறுவனத்திடம் சாய்ந்துவிட்டனர். போலீஸ் பட்டாளமும் நிரந்தரமாக ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

சிலர் விலைக்கு வாங்கப்பட்டனர். இளைஞர்கள் பணத்திற்கும் வேலைக்கும் விலை போயினர். அப்பா மகன், அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என குடும்பங்களுக்குள்ளும் மோதல்கள் உருவாக்கப்பட்டன. வாக்குறுதிகளுக்கு இணங்கி பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் இருந்து விலகி விட்டனர். இயக்கம் சிதறடிக்கப்பட்டது.

தொடர்ந்து போராடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் வீடு திரும்பியதும் உடைந்த குடும்பங்களை ஒன்று சேர்ப்பதில் மூழ்கி விட்டனர். சொற்ப மக்கள் மட்டுமே சுரங்கத்திற்கு எதிராக போராட்டத்தை தொடர்ந்தனர். கடைசியில், 2004 -ம் ஆண்டில் உட்கால் அலுமினா நிறுவனம் தன்னுடைய சுத்திகரிப்பு ஆலையை குச்சைபடாரில் தொடங்கியது.

இயற்கை சார்ந்த வாழ்வு அழிக்கப்பட்டது எப்படி?

திருட்டோ, கொள்ளையோ அல்லது பாலியல் கொடுமைகளோ எதுவும் பல நூறு ஆண்டுகளாக குச்சைபடார் அறியாமல் இருந்தது. மக்கள் அமைதியாகவும் ஒருவருக்கொருவர் நட்பாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். தங்களது நிலங்களில் நெல் அறுவடை செய்து வந்தனர். காட்டிற்கோ, மலைகளுக்கோ அல்லது நீர்வீழ்ச்சிகளுக்கோ தனியாக செல்ல பெண்கள் ஒருபோதும் அப்போது அச்சம் கொண்டதில்லை.

அவர்கள் இயற்கையை வழிபட்டனர். பருவகால திருவிழாக்களில் ஆடியும் பாடியும் கொண்டாடினர். ஒரு குடும்பத்திற்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் மொத்த சமூகமும் அதற்கு உதவி செய்தது. மகிழ்ச்சி என்றாலும் கூட மொத்த கிராமமும் பகிர்ந்து கொண்டது.

ஒடிசா பழங்குடிகள்
தண்ணீர் எடுப்பதற்கு கும்பலாக செல்லும் காஷிபூர் பெண்கள்

வீடுகள் ஒருபோதும் பூட்டப்படவில்லை. பரஸ்பர நம்பிக்கை உணர்வு நிலவியது. உட்கல் அலுமினாவின் சுத்திகரிப்பு நிறுவனம் அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை கிராமத்தில் பதிவாகியுள்ளது. திருட்டுகள் அப்பகுதியில் அதிகரித்தது. தங்கள் நிலங்களுக்கு தனியாக செல்ல மக்கள் தயங்க தொடங்கினர்.மேலும், பெண்கள் நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று தனியே குளிப்பதற்கு அஞ்சினர்.

பெண்களும் சிறுமிகளும் பட்டப்பகலிலேயே கடத்தப்பட்டனர். மேலும், பாலியல் சீண்டல்களுக்கும் ஆளாகினர். அவர்களது வாழ்க்கைமுறை முற்றிலும் மாறியது. ஒரு பயங்கர சூழல் உருவானது. நீர்வீழ்ச்சிகளுக்கும் வயல்களுக்கும் சேர்ந்து செல்ல தொடங்கினர். ஆண்களும் கூட காடுகளுக்கு கூட்டாக சேர்ந்து செல்ல தொடங்கினர். வீடுகளை பூட்டத் தொடங்கினர்.

பழங்குடிகளது கலாச்சாரம் நொறுங்கியது எப்படி?

குன்றுகள், காடுகள் மற்றும் நீரூற்றுகளை கொச்சைப்படார் மக்கள் வழிபடுகின்றனர். மலைகள், நீரோடை மற்றும் நீரூற்றுகள் எத்தனை இருக்கின்றனவோ அத்தனை தெய்வங்கள் பழங்குடிகளுக்கு இருக்கின்றன. அவை அனைத்தும் வழிபட்டு கொண்டாடப்பட்டன.

சுத்திகரிப்பு நிறுவனங்கள் அமைந்த பிறகு, பழங்குடிகளில் சிலர் தங்கள் தெய்வங்களில் நம்பிக்கை இழந்தனர். வெளியில் இருந்து வந்த அந்த கடவுளை வலிமையானது என்று கருதியதால் அதை வழிபடத் தொடங்கினர். புதிய கடவுளை வழிபட்டால் தாங்களும் வலிமையானவராகலாம் என்று வேறு சிலர் நம்புவதை போல நம்பத் தொடங்கினர்.

பழங்குடிகள் மக்கள்
பழங்குடிகளின் விடுகளில் துளசி செடி.

சிலர் அருகிலிருக்கும் நகரத்திற்கு புலம் பெயர்ந்து வந்த பிறகு துளசி விதைகளை கொண்டு வந்து தங்களது வீடுகளில் வளர்த்தனர். பெண்களில் சிலர் காயத்ரி பூஜை செய்யத் தொடங்கினர். இன்று கிராமத்திலிருக்கும் பெரும்பாலான வீடுகளில் காயத்ரி பூஜை செய்யப்படுகிறது. பழங்குடி நம்பிக்கைகளும் கலாச்சாரமும் அவர்களது மனங்களில் தரம் தாழ்ந்து விட்டது.

எவ்விதமான வளர்ச்சியை மக்கள் விரும்புகின்றனர்?

முறையான நீர்ப்பாசன வசதிகள் மற்றும் தண்ணீர் பாதுகாப்பு குறித்து பன்னாட்டு நிறுவனங்களும் அரசாங்கமும் ஏன் அக்கறை கொள்ளவில்லை என்று சிர்குடா (Shriguda) கிராமத்தை சேர்ந்த மனோகர் மஜஹி கூறுகிறார். “யாருடைய வளர்ச்சியை குறித்து அவர்கள் பேசுகிறார்கள்? நாங்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லையா? அப்படியானால் எங்களுக்கான முன்னுரிமையை உள்ளடக்கிய வளர்ச்சியை ஏன் அவர்கள் விரும்பவில்லை?” என்று அவர் கேட்கிறார்.

ஒரு நிறுவனம் எங்கு சென்றாலும் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தை திருப்பி விடுகிறது என்று அவர் கூறுகிறார். “போலீசுடன் வந்து வலுக்கட்டாயமாக அந்த நிறுவனத்திற்கு அரசாங்கம் வழி செய்து கொடுத்து போராட்டக்காரர்களை சிறையில் தள்ளுகிறது. கூடுதலாக அந்நிறுவனமும் குண்டர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் உடன் அழைத்து வருகிறது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை காலில் இட்டு மிதித்து நீர்வளம், காடுகள் மற்றும் ஆறுகள் என அனைத்தையும் அழிக்கிறார்கள். மக்களது வாழ்க்கை திடீரென்று முழுமையாக மாறுகிறது” என்று அவர் கூறுகிறார்.

உட்கால் அலுமினா பாக்சைட்
பாக்சைட் எடுத்துச்செல்வதற்காக 23 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள பாதை.

பாக்சைட் தாதுப்பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதால் கிட்டத்தட்ட 105 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பாக்ரிஜோலா (Bagrijhola) கிராமத்தை சேர்ந்த நதோ ஜானி கூறினார். “மலையில் சுரங்க எல்லைக்குள் இருப்பதால் 85 கிராமங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் மறுவாழ்வு இடங்களுக்கு செல்வதற்கு முன்னதாகவே சுரங்க வேலைகள் தொடங்கி விட்டன. சுரங்கப்பணிகள் மலையில் தொடங்கிய பிறகு வாழ்நிலை மோசமானால் மக்கள் தாமாகவே ஓடி விடுவார்கள் என்று ஒருவேளை அவர்கள் எண்ணியிருக்கலாம்.” என்று அவர் மேலும் கூறுகிறார்.

சுத்திகரிப்பு நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பிறகு விவசாயம் செய்வது சாத்தியமில்லாததாகிவிட்டது என்று அவர் கூறுகிறார். மாசு அதிகரித்த பின்னர் எங்களது வயல்கள் மலடாகிவிட்டன. “இந்த அளவுக்கு மோசமாக நாங்கள் பாதிக்கப்படுவோம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று ஜானி கூறுகிறார்.

அனைத்தையும் அழித்த பிறகு அவர்கள் சென்று விடுவார்கள் :

சுத்திகரிப்பு நிறுவனத்தை எதிர்த்த போராட்டத்தின் போது மக்கள் எப்படி பிளவுபடுத்தப்பட்டார்கள் என்று குச்சைபடார் கிராம தலைவர் கூறுகிறார். போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்களிடம் ஒவ்வொரு மாதமும் 1,800 ரூபாய் தருவதாக கூறிய நிறுவனம் அவர்களை அதிலிருந்து விலக வலியுறுத்தியது. “ஒன்றன் பின் ஒன்றாக கிராமங்கள் சதிவலையில் விழுந்து விட்டன; போராட்டமும் வலுவிழந்துவிட்டது. பணத்தின் வலிமைக்கு முன்பு மக்களது போராட்ட உணர்வு நொறுங்கி விட்டது” என்று அவர் கூறினார்.

படிக்க:
பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!
இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

“சில இளைஞர்களுக்கு அந்நிறுவனத்தில் தற்காலிக வேலை கிடைத்தது. ஆனால், சுரங்கம் முடிந்ததும் அவர்களது வேலைகளும் போய் விடும் என்பது அவர்களுக்கு தெரியும். இந்த இளைஞர்களால் விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்ய முடியாது. அவர்கள் வேலையைத் தேடி இடம் பெயர்ந்து சென்று விடுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.

“முன்பு வேலைகளில் அனைவரும் பங்கெடுத்து கொள்வார்கள். அது கிராமத்திற்கு உதவியாக இருந்தது. இனிமேல் அது நடக்காது. ஒருநாள் அனைத்தையும் அழித்த பிறகு மலடான இந்த இடத்தை விட்டு விட்டு இந்நிறுவனம் சென்று விடும். யார் இதன் அழகை மீட்டு வருவார்கள்? முன்னர் இருந்ததை போன்ற வாழ்க்கையை எங்களுக்கு யார் இனி தருவார்கள்?” என்று அந்த கிராமத் தலைவர் தொடர்ந்து விசும்புகிறார்.

வினவு செய்திப் பிரிவு
கட்டுரையாளர்: Jacinta Kerketta
மூலக்கட்டுரை: நன்றி: thewire
How Adivasi Livelihoods in Odisha Were Ruined by ‘Development’
தமிழாக்கம்: சுகுமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க