மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் புனிதமாகக் கருதும் ஒரு நிலத்தை ஜார்க்கண்ட் மாநில அரசு சில கார்ப்பரேட் குழுமங்களுக்கு கையகப்படுத்தித் தர முடிவு செய்தது. அரசின் இந்த நடவடிக்கையை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஹேமந்த் சோரன் (Hemant Soren) அரசாங்கம் அப்பகுதி கிராம சபைகளின் ஒப்புதலைப் பெறாமலேயே, அந்த அரசு நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவாக்க முடிவு செய்தது. இதை எதிர்த்து, கடந்த அக்டோபர் மாதத்தில், பெரும் அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.

அக்டோபர் 16 அன்று ஆயிரக்கணக்கான பழங்குடிகள் குந்தபானி வட்டத்தில் (Khuntpani block) உள்ள லோஹர்டா (Loharda) பஞ்சாயத்தில் ஆயுதமேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசு மற்றும் நிர்வாகத்தின் உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல், தேசிய நெடுஞ்சாலை NH-75 ஐ மறித்து, போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். அக்டோபர் 10-ம் தேதி அன்றே மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலையை மறிக்கக் கூடாது என்று கடிதம் எழுதியிருந்தது. மக்கள் அதைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்டுப் போராட்டத்தில் இறங்கினர்.

தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கவிருந்த அந்த நிலமானது, ஹோ (Ho) என்ற பழங்குடியின மக்களுக்குப் புனிதமான ஒரு இடமாகும். இந்தப் பகுதியில் அமைந்துள்ள ஜாத்ராபாரு குன்று (Jatrabaru hillock) ஹோ சமூகத்தினரின் வழிபாட்டுத் தலமாகும். வருடா வருடம் மாகே திருவிழாவைத் (Maghe festival) தொடர்ந்து இந்தக் குன்றின் மீது ஜாத்ரா வழிபாடு (Jatra worship) நடத்தப்படும்.

தனியாருக்கு இந்த நிலங்களைக் கொடுத்து, மானியங்கள் வழங்கி, தொழில் பூங்காக்கள் அமைத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தப் போவதாக ஜார்க்கண்ட் அரசாங்கம் கூறுகிறது.  அதற்கான திட்ட வரைவுக்கு  செப்டம்பர் மாதத்தில் ஜார்க்கண்ட் அமைச்சரவை ஒப்புதலும் அளித்துவிட்டது. இத்திட்டத்திற்குத் தேவையான நிலத்தை ஜார்க்கண்ட் தொழில்துறை பகுதி மேம்பாட்டு ஆணையம் (Jharkhand Industrial Area Development Authority) கையகப்படுத்தி வழங்கும்.

இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள குந்தபானி வட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் ’புனித தலம்’ என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பங்களிப்பு செலுத்தும் முக்கியமான பகுதியாகும். மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு அவ்விடத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள்; காலங்காலமாக பயன்படுத்தி வரும் இடுகாடும் அந்த புனித மலைக்கு அருகாமையில்தான் அமைந்துள்ளது; மேலும் அங்கு பல மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளும் இருக்கின்றன.

நிலத்தை கையகப்படுத்த அரசு முயல்வதானது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்று அங்குள்ள பழங்குடி மக்கள் கூறுகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ, தற்போது கையகப்படுத்துவதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம் ஏற்கனவே அரசுக்குச் சொந்தமானது என்றும், 189.63 ஹெக்டேர் கொண்ட ஒரு பார்சல் நவம்பர் 2017-லேயே தொழில்துறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறுகிறது.

2011 – 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், பாஜகவின் அர்ஜுன் முண்டா முதல்வராக இருந்தபோது, மாவோயிஸ்ட் நடவடிக்கைகளைத் தடுப்பது என்ற பெயரில் நரவேட்டையாடும் நோக்கில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் (Indian Reserve Battalion) என்ற சிறப்பு ஆயுதப்படையை உருவாக்கத் திட்டமிட்டனர். அதற்காக, குந்தபானி வட்டத்தில் உள்ள இந்தப் பகுதியில்தான் 70.82 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தி இந்த சிறப்புப் படைக்கான தலைமையிடத்தை அமைக்க முடிவு செய்தனர். மக்களின் வீரியமிக்க போராட்டங்களைத் தொடர்ந்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

சூழ்ச்சி செய்து பழங்குடி மக்களை ஏமாற்றி நிலங்களைக் கையகப்படுத்துவதை மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மட்டும் அரசு செய்யவில்லை. ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதுமே மக்களை ஏமாற்றி அரசும் நில மோசடிக்காரர்களும் நிலங்களை கையகப்படுத்துவதானது அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பழங்குடிகளை ஏமாற்றுவதானது எந்த அளவிற்கு நடக்கிறது என்றால், 2015-ல் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கும் அளவிற்கு நடக்கிறது.

2017 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த பாஜகவைச் சேர்ந்த ரகுபர் தாஸ் (Raghubar Das) குந்தபானி வட்டத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்த முயன்றார். மக்கள் தீவிரமாக போராட்டங்களில் இறங்கி சாலைகளை மறித்ததன் மூலம் இத்திட்டத்தை முறியடித்தனர்.

இந்திய அரசால் வெளியிடப்பட்ட 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி, மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் வசிப்பவர்களில் 26.68 சதவீதத்தினர் பழங்குடியினர் ஆவர். இந்த மாவட்டம் அரசியலமைப்பு சாசனத்தின் அட்டவணை 5-ன் (Schedule 5) கீழ் வருவதால், அங்குள்ள மக்களுக்கு நிலத்தின் மீது சிறப்பு உரிமைகள் உள்ளன.

பஞ்சாயத்துகள் (பட்டியலிடப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம்) சட்டம் 1996-ன் படி, அட்டவணை 5 இன் கீழ் வரும் நிலத்தை கையகப்படுத்த வேண்டுமானால், அங்குள்ள கிராம சபைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த சட்டத்தைப் பின்பற்றவில்லை; அந்த நிலம் அரசிற்குச் சொந்தமான நிலம் என்பதால் கிராம சபைகளின் ஒப்புதல் தேவை இல்லை என்று கூறுவிட்டது. என்னவொரு பித்தலாட்டம்!

படிக்க: தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !

ஜார்க்கண்ட்-ஒடிசா எல்லையில் உள்ள மேற்கு சிங்பூம், இரும்புத்தாது சுண்ணாம்புக்கல், மாங்கனீசு மற்றும் தங்கம் போன்ற கனிம வளங்களைக் கொண்ட பகுதியாகும். தற்போது போராட்டம் நடந்த இந்தப் பகுதி இந்தியாவின் முதல் பழங்குடி ஜனாதிபதியான திரௌபதி முர்முவின் சொந்த கிராமத்திலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. நிச்சயமாக அவர் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளப் போவதில்லை. இந்தப் பகுதி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வரும் தற்போதைய பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் உள்ள அர்ஜுன் முண்டாவின் மக்களவைத் தொகுதியாகும். கார்ப்பரேட் கைக்கூலியான பாஜகவை சேர்ந்த இவரும் இம்மக்களின் பிரச்சினை குறித்து வாய்திறக்கப் போவதில்லை.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க