சத்தீஸ்கர்-ஒடிசா வனப்பகுதியில் 14 மாவோயிஸ்டுகளைக் கொன்றுள்ளதாக அமித்ஷா ஜனவரி 21 அன்று அறிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இம்மாதத்தில் மட்டும் 42-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு தோழர்கள் பாசிச கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு கருத்துக் கூறிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நக்சலிசத்திற்கு மற்றுமொரு பலத்த அடி. நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் நமது பாதுகாப்புப் படையினர் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். சி.ஆர்.பி.எஃப், எஸ்.ஓ.ஜி ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் போலீசு ஒடிசா-சத்தீஸ்கர் எல்லையில் கூட்டு நடவடிக்கையில் 14 நக்சலைட்டுகளை அழித்துள்ளது. நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது உறுதியாலும், நமது பாதுகாப்புப் படையினரின் கூட்டு முயற்சிகளாலும், நக்சலிசம் இன்று தனது இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
“ஆப்பரேஷன் காகர்” என்ற பெயரில் 2026 ஆம் ஆண்டிற்குள் நக்சலிசத்தை ஒழிக்கப்போவதாகக் கூறி ஆயிரக்கணக்கான ராணுவ – துணை ராணுவ படையினர் மற்றும் போலீசை காடுகளுக்குள் இறக்கிவிட்டு மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடிக் கொண்டிருக்கிறது மோடி-அமித்ஷா கும்பல். சத்தீஸ்கர்-ஒடிசா வனப்பகுதியில் 15 கி.மீ. தொலைவிற்குச் சுற்றிவளைக்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று கி.மீ. அளவிற்குச் சுற்றி வளைத்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என மாநில அரசின் அதிகார வர்க்கம் அறிவித்திருக்கிறது.
இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர்களும் கொல்லப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகிவரும் நிலையில் இதனை மாவோயிஸ்டுகள் மீதான இறுதிக்கட்ட தாக்குதல் என்றும் வெறிக்கூச்சலிடுகிறது. தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் மாவோயிஸ்ட் தோழர்கள் கொலை செய்யப்படுவதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது 14 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
படிக்க: மாவோயிஸ்ட் நரவேட்டையைத் தீவிரப்படுத்தும் சத்தீஸ்கர் அரசு
இரும்பு தாது, நிலக்கரி, செம்பு, அபாடைட், இரும்பு சுண்ணாம்பு, பாக்சைட், படிக கற்கள் ஆகிய கனிம வளங்கள் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நிறைந்துள்ளன. ஜார்க்கண்டில் முப்பது சதவிகிதமும் சத்தீஸ்கரில் நாற்பது சதவிகிதமும் காடுகள் உள்ளன. உள்நாட்டு மற்றும் அந்நிய கார்ப்பரேட் முதலாளிகள் இந்த கனிம வளங்களைச் சத்தமின்றி கொள்ளையைவிட வேண்டுமெனில், அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளான பழங்குடி மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக உள்ளது.
இதுபோல் இந்தியா முழுமைக்கும் உள்ள வளங்களை கொள்ளையிடுவதற்கான பொருத்தமான உத்திகளை வகுக்கும் ஆளும் வர்க்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்தான் எதிரிகள் எனவும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பசுவளைய மாநிலங்களில் ‘இசுலாமிய வந்தேறிகள்’ நாட்டை ஆக்கிரமித்துவிட்டனர் எனவும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நகர்ப்புற நக்சல்கள் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளனர் எனவும் விஷமப் பிரச்சாரத்திலும் அவதூறுகளிலும் ஈடுபடுகிறது. மக்களின் சிந்தனையில் இத்தகைய நஞ்சை விதைப்பதின் வழியே மாவோயிஸ்ட் தோழர்களைப் படுகொலை செய்வதை நியாயப்படுத்த முயல்கிறது. இதன் மூலம் சுரண்டலைத் தீவிரப்படுத்தத் துடிக்கிறது.
கனிமவளக் கொள்ளைக்கெதிரான பழங்குடியின மக்களின் போராட்டம் இந்தியா முழுவதும் முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் அதானிக்கு எதிராகத் தொடரும் பழங்குடியின மக்களின் போராட்டம்; ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் நடக்கும் பழங்குடி மக்களின் போராட்டம்; மணிப்பூரில் குக்கி மக்களின் எழுச்சி ஆகியவை பாசிச கும்பலை அதிர்ச்சியில் ஆழ்த்தி அதன் நெருக்கடியைத் தீவிரப்படுத்தியுள்ளது. பில் பழங்குடியின மக்களின் பில் நாடு கோரிக்கை பாசிஸ்டுகளுக்கு கிலியூட்டியுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் அதானிக்கு எதிராக பழங்குடியின மக்கள் நேரடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்ட் தோழர்களைக் கொன்று குவிப்பதன் மூலம் பாசிஸ்டுகள் தங்களின் கனவை ஒருநாளும் ஈடேற்றிக்கொள்ள முடியாது.
ஆ.கா.சிவா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram