திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி ரெய்னால்ட்ஸ் சாலையில் உள்ளது அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி. இங்கு வெளியூர்களில் இருந்து வந்து பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் கல்லூரி மாணவிகள் தங்கியுள்ளனர். இவ்விடுதியில் சேர்வதற்கு மாணவிகளிடம் 5,000 முதல் 10,000 வரை பணம் வாங்கிக் கொண்டுதான் சேர்க்கிறார்கள்.

இதனால் பணம் கொடுக்க முடியாத மாணவிகள் பலருக்கும் இவ்விடுதிகளில் இடம் கிடைக்கவில்லை. இப்படி மாணவிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தரமான உணவு, குடிநீர், கழிப்பிடம் அமைத்து கொடுக்கவில்லை. இங்கு உள்ள போர்வெல்லில் அடிக்கடி மோட்டார் பழுதாகி விடுகிறது. இப்படி மோட்டார் பழுதாகும் போதெல்லாம் அதற்கும் மாணவிகளிடம் பணம் கேட்டு நிர்பந்திக்கிறார் விடுதி காப்பாளர்.

16.12.2019 அன்று காலை முதலே தண்ணீர் வரவில்லை. இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும் கூட வெளியிலிருந்து வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வாங்கி பயன்படுத்துவதுதான் நிலைமையாக இருந்து வந்தது. இதை சரிசெய்ய விடுதி காப்பாளரிடம் முறையிட்ட போது அரசிடமிருந்து பணம் வரவில்லை நீங்கள் அனைவரும் சேர்ந்து பணம் கொடுங்கள், சரிசெய்து தருகிறேன் என்றுள்ளார். தற்காலிகமாக தண்ணீர் ஏற்பாடு செய்து தரவும் முடியாது என்று கூறியிருக்கிறார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மாலையில் காலி பக்கெட்டுகளுடனும், அழுக்கு துணிகளுடனும் விடுதி முன் உள்ள சாலையில் அமர்ந்து இரவு வரை போராட்டம் நடத்தினர். உடனே போலிசு விடுதிக்குள் செல்லுங்கள் என்று மிரட்டியது. மாணவிகள் அதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து போராடினர். இறுதியாக தாசில்தார் வந்து சரி செய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்தார். அதன் பிறகு உடனே தண்ணீர் லாரி வந்தது. பம்பு செட் சரி செய்யப்பட்டது. கழிவறை சுத்தம் செய்யப்பட்டது.

இன்று நாடெங்கும் மாணவர்களின் போரட்டம் எழுச்சியுற்று வருகிறது. அது பொருளாதார கோரிக்கையோ, அரசியல் கோரிக்கையோ இந்த பாசிச அரசு அதை தீர்ப்பதற்கு வக்கற்றுப் போயுள்ளது. நாடெங்கும் நடக்கும் இந்நிகழ்வுகள் உணர்த்துவது ஒன்றுதான் போராட்டமே நம்முன் உள்ள ஒரே தீர்வு.

படிக்க:
ஆதி திராவிடர் நலத்துறை விடுதிகளின் அவல நிலை ! பிரேசில் பழங்குடியினரிடம் போராடக் கற்போம் !
அரசு ஆதி திராவிடர் நல மாணவர் விடுதிகள் – நவீன சேரிகள் !

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க