சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அவலநிலை!

எனவே ஏழை எளிய மக்களை கல்வியை விட்டு துரத்தியடிக்கும் ஆளும் வர்க்கங்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால், தனி தனியாக போராடி கொண்டிருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முக்கியமான ஒன்றுதான் பச்சையப்பன் கல்லூரி. மேலும் மாநில கல்லூரி, சட்ட கல்லூரி, நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரி, தியாகராய கல்லூரி என பல அரசு கல்லூரிகளும் அரசே எடுத்து நடத்தும் கல்லூரிகளும் பெரும்பான்மையாக உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளாக உள்ளன.

இக்கல்லூரிகளுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. 1800-களில் இருந்தே இதன் வரலாறு தொடங்குகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய காலத்தில் கட்டப்பட்டவை இவை. இதில் பச்சையப்பன் கல்லூரிக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி அறக்கட்டளை  பச்சையப்பன் அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளைக்கு கீழ் பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் பச்சையப்பன் கல்லூரி ஆகும்.

எண்ணற்ற தலைவர்களை, கல்வியாளர்களை, விஞ்ஞானிகளை அரசு உயரதிகாரிகளை உருவாக்கிய பெருமை இப்பச்சையப்பன் கல்லூரிக்கு உண்டு. இந்திய விடுதலை போராட்டத்திலும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்திலும் இக்கல்லூரி மாணவர்களின் பங்கு முக்கியமானது.

மேலும், விவசாயிகள் வாழ்வுரிமை காக்கும் போராட்டம், தொழிலாளர்கள் நலன் காக்கும் போராட்டம், கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம், டாஸ்மாக்கை மூடும் போராட்டம் என உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் இவர்கள் போர்க்குணத்தோடு முன் நின்றுள்ளனர். இக்கல்லூரி மாணவர்களை போலவே பேராசிரியர்களும் பல்வேறு போராட்டங்களில் முன் நின்று போராடியுள்ளனர்.

படிக்க : பச்சையப்பன் கல்லூரி காக்க பேராசிரியர் – மாணவர் போராட்டம்

இத்தகைய பாரம்பரியத்திற்கு சொந்தமான கல்லூரி அறக்கட்டளை தான் சமீப ஆண்டுகளாக தி.மு.க – அ.தி.மு.க-வை சார்ந்த பிழைப்புவாத ஓட்டு பொறுக்கிகளின் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கல்வியாளர்களைக் கொண்டு கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டிய இந்த கல்லூரி அறக்கட்டளையின் சொத்துகள் இன்று ஓட்டுக் பொறுக்கி அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. பல புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கிய பள்ளி, கல்லூரிகள் இன்று பாழடைந்த பேய் பங்களாக்களை போல் உள்ளன. இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளோ கல்விப் பணியை செய்வதற்கு பதில் பிற அனைத்து ‘சட்டவிரோத’ கேடுகெட்ட வேலைகளையும் செய்கிறார்கள்.

பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு; கல்விக்கூடத்தை பராமரித்து இயக்குவதற்கு பதில் தனிப்பட்ட நலனுக்காக சொத்துக்களை விற்பது; கல்வியின் தரத்தை உயர்த்தி சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு பதில் தனியாருக்கு இணையாக அதிக கட்டணத்திற்கான வகுப்புகள் உருவாக்கி கொள்ளையடிப்பது, கல்லூரி மைதானத்தை தனியாருக்கு வாடகைக்கு விட்டு நிர்வாகிகள் தங்கள் சொத்தை உயர்த்தி கொள்வது என லஞ்ச லாவண்யங்களும் முறைகேடுகளும் இவ்வறக்கட்டளையில் மண்டிக்கிடக்கின்றன.

கடந்த 2013-2015-ஆம் ஆண்டுகளில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கி வரும் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆறு கல்லூரிகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியுடையவர்கள் இல்லை எனக் கூறி அறக்கட்டளையை நிர்வகித்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், உதவிப் பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் “முறையாகத் தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது’’ என தீர்ப்பு வழங்கியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சொல்லப்போனால் இந்த ஊழலின் ஊற்றுகண்ணாக செயல்பட்டதே பச்சைப்பன் அறக்கட்டளை நிர்வாகியும் தற்போது திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் தான். அவருக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கான பேராசியர்கள் வாழ்வாதாரமும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும் தற்போது கேள்விகுறியாகி உள்ளது.

இதனை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நவம்பர் 18 அன்று கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 254 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்ததை கண்டித்தும் சரியான விசாரணை குழு அமைத்து ஊழலில் ஈடுபட்ட பேராசிரியர்களை மட்டும் வகை பிரித்து (spot out) பணி நீக்கம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும், ஊழலுக்கு ஊற்றுக் கண்ணாக இருந்த பச்சையப்பன் கல்லூரி நிர்வாகி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் போராடினர்.

ஒருபுறம், சிங்கார சென்னை, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சென்னையின் உழைக்கும் மக்கள் நகரத்தை விட்டு வெளியே தூக்கியடிக்கப்படுகின்றனர். சென்னையை அழகுபடுத்துதல் என்ற பெயரில் சென்னை நகரத்தை உருவாக்கிய உழைக்கும் மக்கள் நகரத்தின் அழுக்குகளாக பார்க்க படுகின்றனர். இன்னொருபுறமோ அந்த உழைக்கும் மக்களின் பிள்ளைகள் கல்வி பறிக்கப்பட்டு அவர்களும் சமூகத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

அதனோடு இணைந்த நடவடிக்கைதான் இந்த பச்சையப்பன் அறக்கட்டளை கீழ் இயங்கும் பேராசிரியர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டதும். மொத்தம் 254 பேராசிரியர்களின் நியமனத்தில் 152 பேராசிரியர்களின் நியமனம் முறைகேடாக நடந்துள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கில், மொத்தமாக 254 பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என்று தீர்ப்பு வழங்கவேண்டிய அவசியம் என்ன?

ஏனெனில் எப்படி உழைக்கும் மக்கள் ‘சிங்கார சென்னை’யின் அழுக்காக பார்க்கப்படுகின்றனரோ அப்படி தான் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, தியாகராய கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசு கல்லூரி மாணவர்களும் பார்க்கப்படுகின்றனர்.

படிக்க : போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

அப்படிப்பட்டவர்களின் கல்லூரிகள் பெரிய முக்கியமான நிலபரப்பில் அமைந்திருப்பதையும் மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ள கல்வி இன்னும் இலவசமாக வழங்கப்படுவதையும் ஆளும் வரக்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது போதாதென்று, இந்த மாணவர்கள் ஒவ்வொரு சமூக அநீதிக்கு எதிராகவும் சாலையில் அமர்ந்து போராடுவதை ஆளும் வரக்கத்தால் கனவில் கூட சகித்துக்கொள்ள முடியாது.

இதனால்தான் இதற்கு முன்பே மெட்ரோ ரயில் போட உள்ளோம் என்று பச்சையப்பன் கல்லூரியை ஒழித்துகட்ட பார்த்தனர். மாணவர்களின் போராட்டத்தினால் அந்த திட்டம் கை விடப்பட்டது. அதே போல் தலைமை செயலகம் அருகில் இருந்த சட்டக் கல்லூரியும் மூலையில் வீசப்பட்டது. மாநிலக் கல்லூரி முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ரூட் பிரச்சினையை காரணம் காட்டி இக்கல்லூரி மாணவர்கள் சமூக விரோதிகளாக காட்டப்படுகின்றனர்.

எனவே ஏழை எளிய மக்களை கல்வியை விட்டு துரத்தியடிக்கும் ஆளும் வர்க்கங்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால், தனி தனியாக போராடி கொண்டிருக்கும் கௌரவ விரிவுரையாளர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக இந்த பிரச்சினையை மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கொண்டு சென்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு கட்டி போராட்டத்தை முன்னெடுப்போம்.

ஊமத்துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க