மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டை, நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது.

1
  • “பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்’ பிரச்சினையில் வெட்டிக்கொண்டார்கள்”
  • இனி வன்முறையில் ஈடுபட மாட்டோம் – ரூட் தல மாணவர்கள் உறுதிமொழி
  • ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது – காவல் இணை ஆணையர் சுதாகர்

♣ 2011-ல் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக தங்கள் கல்லூரி அழிக்கப்படுவதற்கு எதிராகப்போராடிய மாணவர்களைப் பார்த்து சோ சொன்னார் “இந்த பச்சப்பாஸ் பசங்கள இராணுவத்தை வச்சு அடக்கணும்” அவர் அடக்கமாகிவிட்டார். அவரின் கருத்துக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து நிற்கின்றன.

♣ ரூட் சண்டையில் ஈடுபட்டவர்கள் இவர்கள்தானா என்று விசாரணை செய்து முடிவெடுப்பதற்கு முன்னால் அத்தனை பேரும் கீழே ‘வழுக்கி விழுந்து’ கை உடைந்து போயிருக்கிறார்கள். ஆனால் திருச்சியில் கர்ப்பிணிப் பெண் உஷாவை உதைத்துக்கொன்ற காமராஜின் பாத்ரூம் மட்டும் வழுக்காமல் இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே!

chennai pachaiyappa college 2ஜல்லிக்கட்டு முதல் ஹைட்ரோகார்பன் வரை மக்கள் பிரச்சினைக்காக எப்போதும் முன்னே நிற்கக்கூடிய மாணவர்கள் மீது இப்போது மிகப்பெரிய வன்முறை ஏவிவிடப்பட்டு இருக்கிறது. “ஆமா, ரோட்ல பட்டாக் கத்தியில வெட்டிக்கிட்டா போலீசு சும்மாவா இருக்கும்” “பேனா பிடிக்கும் கையில் அருவா பிடித்தால் அவன் மாணவனா?” என்றும் பலரும் கேட்கிறார்கள். ஹீரோவாக இருந்த மாணவர்கள் வில்லன்களாகிவிட்டார்கள். மாணவர்களை கிண்டல் செய்தும் கேவலப்படுத்தியும் பல மீம்ஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எல்லோரும் திட்டிக்கொண்டு இருக்கும் மாணவர்கள் யார் ? அவர்கள் எல்லாம் அந்தரத்தில் இருந்து குதித்தார்களா? நம் வீட்டிலிருக்கும் பிள்ளைகள்தானே அவர்கள்?

“இவர்களை எல்லாம் ஸ்டூடண்ட்ஸாக பார்க்காதீர்கள்? கிரிமினல்களாக பாருங்கள்” என்கிறார் இணை ஆணையர். போலீசில் லஞ்சம் வாங்கியும்; கிரிமினல் குற்றம் செய்தும் மாட்டிக்கொண்டவர்களிடம் குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 107ன் கீழ் எப்போதும் ‘எதுவும் வாங்கிவிடவில்லை’. அதிகபட்ச தண்டனையே ஆயுதப்படைக்கு மாற்றுவதும் காத்திருப்போர் பட்டியலில் வைப்பதும்தானே!

படிக்க:
பச்சையப்பன் கல்லூரி : கல்விக் கூடமா மாட்டுத் தொழுவமா ?
♦ உங்கள் ரயில் பயணங்களைப் பதம்பார்க்கக் காத்திருக்கும் அம்பானிகள் !

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐஜி, பெண் எஸ்பியிடம் தவறாக நடந்து கொண்டாராமே அவரிடம் கு.ந.ச. பிரிவு 107ன் கீழ் உறுதிப்பத்திரம் வாங்குவீர்களா? அமைதியைப் பேணுவதற்கான பிணையம் வாங்குவது என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடம் உறுதிப்பத்திரம் வாங்கும் போலீசு, சீரழிவுகளோடு இருக்கும் தங்கள் பிள்ளைகளிடம் என்ன பத்திரம் வாங்கப்போகிறீர்கள்?

சொல்லப்போனால் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டையானது நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது. இதை போலீசும் நிர்வாகமும் தடுக்கவில்லை. இப்படி ஒரு பிரச்சினையை நடக்கவிட்டு வேடிக்கைப்பார்த்து அதன் மூலம் மொத்த மாணவர்களையுமே கிரிமினல்களாக்குவதுதான் போலீசின் நோக்கம்.

ஈழம் மாணவர் எழுச்சி
ஈழம் மாணவர் எழுச்சி

பச்சையப்பன் கல்லூரியில் போலீசு சுதந்திரமாக திரிகிறது. எந்த வகுப்பறையிலும் போலீசு வந்து ‘பாடம் கேட்கும்’ நிலைதான் இப்போதும் இருக்கிறது. நேர்மையான ஆசிரியர்களையும்; மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் ஆசிரிரியர்களையும்; கண்காணித்து அவர்களை ’போட்டு’க்கொடுப்பதற்கென்றே போலீசு தனியாக இருக்கிறது. ஒரு வகுப்பில் யார் யார் எந்த அமைப்பில் இருக்கிறார்கள், அவர்களை எப்படி வெளியேற்றுவது என்பதுதான் போலீசு கல்லூரி நிர்வாகங்களுக்கு கொடுத்த அசைன்மெண்ட்.

போலீசுக்கு எப்போதும் எத்தனை பேரை கிரிமினலாக்கினோம்; ரவுடி லிஸ்டில் கொண்டுவந்தோம்; எத்தனை பேரை ரிமாண்ட் செய்தோம் என்பதுதான் இலக்கு. வேறெதையும் சிந்திக்க முடியாது. ஏனென்றால் போலீஸ் உருவாக்கப்பட்ட ‘டிசைன்’ அப்படி. மொத்த சமூகத்திற்கும் போலீசுதான் அத்தாரிட்டி என்பது போல ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்த சமூகத்தையும் இயக்குவது கட்டிக்காப்பது உழைப்பாளி மக்கள்தான். பத்து நாள் குப்பையள்ளாமல் விட்டால், சாக்கடை அடைப்பு எடுக்காவிட்டால், மருத்துவம் பார்க்கா விட்டால் தெரியும் எது சமூகத்திற்கு தேவை என்பது. போலீசுதான் ஏதோ சமூக மாற்றத்திற்கு வித்திடுவது போல கதையளந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதுவரை உலகம் முழுவதும் நடைபெற்ற சமூக மாற்றங்களுக்கு யார் காரணம் போலீசா? மாணவர்களா? போலீசு எப்போதும் நிலவுகின்ற அரசை காப்பதையே கடமையாகக் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள் “நாங்க என்ன சார் பண்றது, அது எங்க டியூட்டி” ஆனால் மாணவர்கள் சமூக மாற்றத்தை நோக்கி சிந்திக்கக்கூடியவர்கள். அதனால்தான் தங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் கல்லூரிக்கு ஒரு பிரச்சினை என்றாலோ, மாணவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ, மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலோ முன்னேவந்து நிற்பவர்கள். அவர்களை, அவர்களில் தவறான எண்ணங்களை அழிப்பதற்கு அரசியல்தான் சிறந்த மருந்து. அதை ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலேயே பார்த்து இருப்போம்.

அத்தனை லட்சம் பேர் திரண்டு இருந்தபோதும் மக்களுக்கான அரசியல் அவர்களை நல்வழிப்படுத்தியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில், சண்டைகளைக்கூட தடுக்க வக்கற்றுப்போயிருக்கிறது இந்த கார்ப்பரேட்டுக்கான அரசு. மக்களுக்கான அரசாக இருந்தால் ஒரு பிரச்சினை என்றால் அது உருவாகக்காரணம் என்ன? எப்படி களைவது? அதன் சமூகத்தாக்கம் என்ன? என்பதையல்லவா யோசித்திருக்கும்.

ஒரே ஒரு மெரீனா போதும் மாணவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் போலீசு எப்படிப்பட்டது என்பதையும் நிரூபிப்பதற்கு.

chennai pachaiyappa college 1

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு) பல கல்லூரிகளிலும் ரூட் சண்டைகளை தடுத்து நிறுத்தி மாணவர்களை நல்வழிப்படுத்தி இருக்கிறது. அதன் தலைமையில்தான் ஈழப்போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் எல்லா ரூட் மாணவர்களும், அனைத்துக்கல்லூரி மாணவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை வந்ததில்லை. அவர்களை மக்களுக்கான அரசியல் ஒன்றுபடுத்தியது. இப்போது அரசியலை போலீசு வெளியேற்றிவிட்டது. அதனால் மீண்டும் ரூட் சண்டைகள் தொடங்கிவிட்டன.

பு.மா.இ.மு தலைமையில் மாணவர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து தமிழகத்துக்கே முன்மாதிரியாக இருந்தார்கள். அப்போது போலீசும் நிர்வாகமும் என்ன செய்தார்கள் ? டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியவர்களுக்கு ஆதரவா கொடுத்தார்கள்? அத்தனை பேரையும் சஸ்பெண்ட் செய்தனர். முன்னணியாளர்களை டிஸ்மிஸ் செய்தனர். இப்படி படிப்படியாக மணவர்களிடம் துண்டுப்பிரசுரம் கூட கொடுக்கவிடாமல் தடுத்து மாணவர்களை அரசியலற்றவர்களாக்கி இன்றைக்கு அவர்களை கிரிமினல் போல கத்தியோடு திரிய வைத்தது யார்? அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

படிக்க:
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!
♦ குழந்தைகளே ! தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில் !

அன்றாடம் டிவி-யும் , சினிமாவும் என்ன கற்றுக்கொடுக்கிறதோ அதைத்தானே செய்வார்கள் குழந்தைகள். எப்படிப்பட்ட இழிவு வேலை செய்தாலும் சரி, எப்படி மானங்கெட்ட அடிமையாக இருந்தாலும் சரி, சம்பாதித்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கும் சமூகத்திற்கு மாணவனை கிரிமினல் என்று பேசத் தகுதி இருக்கிறதா என்ன? ஏன் போலீசுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் எனத் தெரியாதா? அடிதடி சண்டையில் ஈடுபடாமல் பவுசாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களா? பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருப்பவன் கையில் கத்தி எடுக்காமல் என்ன செய்வான் என்பதை யோசிக்க முடியுமா போலீசால்? சமூகத்தை நேசிக்காத எந்திரமாகக் குழந்தைகள் மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது பெற்றோர்களான போலீசுக்குத் தெரியாதா?

மாணவர்கள் இன்று கத்தியைப்பிடித்துக் கொண்டு திரிகிறார்கள் என்றால் அதற்கு போலீசும், ஆசிரியர்களும் முக்கியக்காரணம். பலருக்கும் இது அதிர்ச்சியாக இருக்கலாம். பச்சையப்பன் கல்லூரி அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் ஈழப்பிரச்சினை வரை மொத்தத் தமிழகத்திற்கே வழிகாட்டியாக இருந்த அக்கல்லூரியை யாராவது நேரில் சென்று பார்த்து இருக்கிறீர்களா? மாணவர்களுக்கு போதிய அளவு குடிநீர் வசதி உள்ளதா? கழிவறை ஏதாவது இருக்கிறதா? விளையாட்டு உபகரணங்கள் இருக்கிறதா? பல்கலைக்கழக விதிகளின்படி ஆண்டுதோறும் அனைத்து விழாக்களும் நடத்தப்பட்டு இருக்கிறதா?

அங்கு மாணவர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறதா என்ன? ஜே.என்.யூ. -வில் தேர்தல் நடக்கிறது, டெல்லி பல்கலை கழகத்தில் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் ஏன் தேர்தல் நடப்பதில்லை? மாணவர்களுக்கு நியாயமான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேட்டால் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்பதையே காரணமாகச்சொல்கிறார்கள். சட்டமன்ற – பாராளுமன்ற தேர்தல்களில் நடக்காத சண்டையா – தில்லுமுல்லுகளா – பிராடுத்தனங்களா- மொள்ளமாரித்தனங்களா? அதற்காக பொதுத்தேர்தலை ரத்து செய்ய போலீசு சொன்னால் கேட்டுக்கொண்டு போவார்களா? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட – சரி செய்யத்தான் போலீசு! இதெற்கெல்லாம் ஆசிரியர் சங்கங்கள் போராடியதோ – பேசியதோ இல்லை. மாணவனுக்கு கொடுக்க வேண்டிய எவ்வித உரிமையும் இல்லாமல் வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு என்ன தண்டனை கொடுப்பது?

சென்னையில் எந்தக் கல்லூரியிலும் மாணவர் அமைப்பு என்ற ஒன்றே இருக்கக்கூடாது என்பதை கடந்த 10 ஆண்டுகளாக சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றி இருக்கிறது போலீசு. அதற்கு கல்லூரி நிர்வாகங்களும் உடந்தையாகத்தான் இருந்திருக்கின்றன. அப்போதைய பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் ஒருவரே போலீசு இன்பார்மர் போல செயல்பட்டு எந்தெந்த மாணவர்கள் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியில் இருக்கிறார்கள் என்று போலீசுக்கு காட்டிக்கொடுக்கும் வேலையை கச்சிதமாகச் செய்தார்.

மாணவர்கள் மக்கள் பிரச்சினைக்காகப் போராடினால் காட்டிக்கொடுக்கும் வேலையை கல்லூரி முதல்வர் தெளிவாக மேற்கொள்வார். ஏன் சில நாட்களுக்கு முன்னர் கூட மாநிலக்கல்லூரியின் வாசலில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக துண்டறிக்கை விநியோகம் செய்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச்சேர்ந்த ஒருவரை பேராசிரியர்களும், கல்லூரி அலுவலர்களும் தாக்கி போலீசிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.

மாணவர்களிடம் புதிய கல்விக்கொள்கை பற்றிபேசினால் பேராசிரியருக்கும் அலுவலர்களுக்கும் என்ன கேடு? அப்படிப்பேசினால் மாணவர்கள் சண்டையின்றி ஒற்றுமையாக இருப்பார்கள். நிர்வாகம் ஊழல் செய்து பொறுக்கித்தின்ன முடியாது, போலீசுக்கு வேலையில்லாமல் போய்விடும், அதை எப்படி அனுமதிப்பார்கள்?

chennai pachaiyappa college route thalaமாணவர்களிடம் 107-ன் படி பிரமாணப்பத்திரம் வாங்கினால் பிரச்சினை தீரும் என்று நினைத்தால் அது முட்டாள்த்தனமே. பச்சையப்பன், மாநிலக்கல்லூரி, நந்தனம் போன்ற அரசு – அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டுமல்ல தனியார் கல்லூரிகளிலும் மாணவர்கள் சண்டையிட்டுக்கொள்ளாமல் இல்லை. இப்பிரச்சினையை எப்படி சரி செய்வது என்ற அறிவியல்பூர்வமான விவாதமே தேவை. கல்வியை மொத்தமாக தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு, மொத்தமும் கிரிமினல்மயமாகிப்போன இந்த அரசு அதைச்செய்யுமா என்ன?

நிர்பயா வழக்குக்குப்பின் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் கடுமையான சட்டம் – தண்டனை என்று எத்தனையோ ஜாலங்கள் சொல்லியபோதும் பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் செல்கிறது. (இரு வாரங்களுக்கு முன்பு கூட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் திருமுல்லைவாயலில் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றிருக்கிறார்.) ஆணாதிக்க – நுகர்வு வெறியே அடிப்படையாக இருக்கும் இச்சமூகத்தை அகற்றாமல் கடுமையான சட்டப்பிரிவுகளை உருவாக்குவதன் மூலம் எதுவும் செய்ய முடியாது. சாக்கடையை தூர்வாராமல் கொசு மருந்து அடிப்பதால் பயனேதும் இருக்கப்போவதில்லை.

படிக்க:
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !
♦ நூல் அறிமுகம் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு

மணல் கடத்தல் தொடங்கி எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு மையம் வரையிலான திட்டங்களை மேற்கொள்வதில் மாபியாத்தனமான கிரிமினல் கும்பலாக அரசு இருக்கும் இச்சமூகத்தில், குற்றவாளிகள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள். கிரிமினல் அரசு, மாணவர்களின் நலனை ஒருபோதும் சிந்திக்காது. மாணவர்கள் ரவுடிகள்தான் என்று பட்டம் கொடுத்து எதிரியிடம் பலிகொடுப்பதை நிறுத்திவிட்டு அவர்களிடம் உள்ள குறைகளை நீக்குவது என்பது பற்றிய அறிவுப்பூவமான அறிவியல் பூர்வமான விவாதத்துக்குத் தயாராக வேண்டும்.

அநியாயத்துக்கு எதிரான போராட்டங்கள் முதல் சமூக மாற்றம் வரை மாணவர்களால்தான் எப்போதும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்வதுதான் போலீசும் அரசும் செய்யும் வேலை. மாணவனை ஒடுக்கும் அதே கைகள்தான் ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட மக்கள் விரோதத் திட்டங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன. இப்போது சொல்லுங்கள் . நீங்கள் யார் பக்கம்?

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு, தொடர்புக்கு : 94451 12675.