தொன்மவியல், இனவரைவியல், மானிடவியல், தொல் பொருளியல் ஆகியவற்றில் ஒருவர் எந்த அளவு புலமையாளரோ அந்த அளவு அவர் வரலாற்றில் பயணித்தல் சாத்தியமானது. கோசாம்பி இந்த எல்லைகளையெல்லாம் பொருள்முதல்வாத வழிமுறையால் அதிரடியாக உடைத்தெறிந்தார். அவர் அணுகுமுறையில் ஆய்வு செய்யப்பட முடியாத, தேடியடைய முடியாத மறைஞானம் ஒன்றுமில்லை. நன்கறியப்பட்ட தொன்மவியல் ஆர்வலர் மிர்ஸியா இலியாட் சொல்வதைப் பார்ப்போம்.

“உலகின் படைப்பு என்பது ஒப்புயர்வற்ற படைப்பு நிகழ்வு தான் என்ற வகையில் அண்டப் பிறப்புக் கோட்பாடு, எல்லாப் படைப்புகளுக்கும் பின்பற்றத்தக்க முன்மாதிரி ஆகிறது.”

எல்லாவற்றிற்கும் முதலில் குறிப்பிடப்பட வேண்டியது, மனிதனாலோ தெய்வீக முகமையினாலோ படைக்கப்பட்டது என்பதற்கு எந்தவொரு சான்றும் இல்லை. ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் உண்டு. மனித வாழ்வில் படைப்புக் கான முன்மாதிரி,  அவர்கள் அறிந்த படைப்புக்கான முன்மாதிரி பெண் தான் என்பதுதான் முக்கியமான விஷயம். கடந்த காலத்தில் அறியப்படாதது ஒன்றுமில்லையென்றால், நாம் அறிவதற்கும் ஒன்றுமில்லை. அறியப்படாததன் முன்மாதிரியைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு பாசாங்கு வேலைதான்! அறியப் படாத ஒன்றுக்கு முன்மாதிரி இருக்கலாம். ஆனால், அது என்ன என்பது நமக்குத் தெரியாத ஒன்றே! எனவே, அதைப் பற்றிப் பேச முனைவது என்பது எலியாட் சொன்னதைப் போல மறை ஞானத்தைத் தேடும் நிலைதான். ஆராய்ச்சிக்கு உட்படாத தளங்களிலிருந்து தொடங்கி உள்நோக்கிப் பார்த்துவிட்டுச் சொல்வதைவிட மனித அனுபவத்துடன் தொடங்கிச் சொல்வது மிகவும் விரும்பத்தக்கது.

இவற்றில் மனிதர்கள் எதை நோக்கிச் சொல்வது?

உற்பத்தித் திறமுடைய மனித வாழ்க்கைதான் படைப்புத் தொன்மங்களுக்கான நல்ல துவக்கம். கருத்து முதல்வாத விளக்கம் என்பது மிக முக்கியமானதொரு மானிட முயற்சியே! ஆனால், அதை இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பயன் படுத்தும்போதுதான் தவறுகளுக்கு இட்டுச்செல்கிறது.

இதைப் பற்றிய விழிப்புணர்வினை, தன்னுடைய பிற்கால எழுத்துகளில் கோசாம்பி வெளிப்படுத்தியுள்ளார்.  (நூலிலிருந்து பக்.3-4)

கோசாம்பி உற்பத்தி முறையை அடியொற்றி, சமூக வரலாற்றின் உண்மைகளைப் பற்றிக்கொண்டு புராணங்கள், மதம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி உருப்படியான விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார். ”தொன்மமும் உண்மை நிலையும்; இந்தியப் பண்பாடு உருவாக்கம் பற்றி ஆய்வு” என்னும் நூலில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“நாகரிகம் துவங்கிய காலத்திலிருந்து இன்று வரைக்கும் எஞ்சியிருக்கும் இந்தியத் தொன்மங்கள், சடங்குகளின் மூல முதலான அடிப்படைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இது, ஏறத்தாழ ஒவ்வொரு வரலாற்றுக் காலத்திலும் அழியாமல் நிலைத்து நிற்கும் தன்மைகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ள சமகால சமூகம் நிலவிவரும் ஒரு நாட்டில் மிகவும் சிரமமான காரியமன்று. இதுபோன்ற பகுப்பாய்வைப் புறக்கணிப்பது என்பது, இந்திய வரலாற்றினை மூடத்தனமான உருக்குலைப் பதற்கும், இந்தியப் பண்பாட்டைப் பற்றிய தவறான புரிதலுக்கும் இட்டுச்செல்லும். இதை நுட்பமான இறையியலோ அல்லது வறட்டுத்தனமான பொருள் முதல்வாத பெருமைகளோ ஈடு செய்ய முடியாது.” (நூலிலிருந்து பக்.6-7)

பகவத் கீதையின் சமூக, பொருளியல் கோட்பாடு

கோசாம்பியின் ஆய்வுமுறை “பகவத்-கீதையின் சமூக பொருளியல் கோட்பாடு” என்னும் நூலில் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுப் பொருள்முதல்வாத  ஆய்வு தெளிவுநிலையைக் கொண்ட தலைசிறந்த சிறுபடை ஆகும். அது, பத்தொன்பதாம் நூற்றாண்டைய கருத்தியல்வாத வரலாற்றுருவாக்கம் முடிந்த நிலையில், மறைஞானத்தை எந்திர வியல் தெளிவுபடுத்த முனைந்தது; வரலாற்றை இயங்கியல் பொருள்முதல்வாதம் தெளிவுபடுத்தியது. இச்சிறு ஆய்வில், கிருஷ்ணன் அனைத்தையும் படைப்பவனும், அழிப்பவனும் ஆவான். அத்துடன் அனைத்து வீரர்களையும் சண்டையிடச் செய்து அழித்திருக்கிறான். கீதையின் தர்மம் என்பது ‘என் மீது நீ நம்பிக்கை வைக்கிற வரை, உன்னுடைய எல்லாப் பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு. கடமை உனக்கு ஆணையிட்டால், நீ உன் சொந்த சகோதரனையே கருணையின்றிக் கொன்று அழி.’ இப்படி முன்பே திட்டமிடப்பட்ட துரோக வேலைகள், டெய்லர் எழுதிய புனித வாழ்வும், புனித இறப்பும் (Holy Living and Holy Dying) மாக்கிய வல்லியின் ‘இளவரசனை’ப் போலப் பழங்காலத்தில் புகழ்பெற்று விளங்கியதும் இந்திய அரசியல் நூலுமான அர்த்தசாஸ்திரத்தில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது” என்று கோசாம்பி மெய்ப்பிக்கிறார்.

கீதை மகாபாரதத்தின் முதலிடத்தில் வைக்கப்பட்டது ஏன் என்று கேட்கிறார் கோசாம்பி. அதற்கு அவர் சொல்லும் பதில்: “பழங்காலப் போரைப் பற்றிய வீரயுகக் கதைப்பாட்டுகளை ரசித்துக் கேட்கக்கூடியவர்கள் கீழ்நிலை வர்க்கத்தினரே. மேலும், காவியமானது, பிராமணர்கள் இடைச்செருக விரும்பிய எந்தக் கோட்பாட்டையும் புகுத்திப் பரப்புவதற்கான சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது.”

அவர் கேட்கும் இரண்டாவது கேள்வி. ஆளும் வர்க்கத்தின் புது மறை நூலை எடுத்துரைப்பதற்குக் இருஷ்ணன் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? அதற்கு அவர் அளிக்கும் பதில்: “மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் கிருஷ்ணன் பக்தி பண்பாடு மக்களிடையே பரவத் தொடங்கி, ஒன்றிணைந்த நாராயணனுடன் இணைக்கப்பட்டது. தண்ணீருக்கு மத்தியில் உள்ள தன் அறையில் உறங்கும் இந்த நாராயணன் சுமேரியப் பெரு வெள்ள உருவாக்கப் புனைகதைக்காக வடிவமைக்கப்பட்டு பின்னர் யூதர்களுக்கு நடுவில் நோவாவாகக் காட்சியளிக்கிறார். மற்ற எந்தக் கடவுளையும்விட கிருஷ்ணன் மிகவும் இன்றியமையாதவராகிறார்.

படிக்க:
ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்

ஏனெனில் இந்திரன் (அதுவரை கடவுள்களுக்கெல்லாம் தலைவன்) யக்ஞங்களை மறுதலித்திருந்த புத்தமதம் குறுக்கிட்டதன் விளைவாக தனது மேன்மையை இழந்திருந்தான். கடவுள்களுக்கெல்லாம் மன்னனான இந்திரன் நாட்டுப்புற வாழ்வு வாழ்ந்த செம்புக்காலத்தின் போதுதான் ஒப்புயர்வற்ற நிலையில் இருந்தான். கிருஷ்ணனின் ஆதிக்கம் கி.மு.800-வாக்கில் பஞ்சாபில் துவங்குகிறது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான், அவன் தெற்கிலும் கிழக்கிலும் பயணிக்கிறான். அப்போதுதான் அவன் ஒருங்கிணைக்கும் இயக்கங்களுக்கு மிகவும் பயனுள்ளவன் ஆனான். உதாரணமாக, தக்காண யாதவர்கள் தங்களைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கு மேலாக உள்ளூர்க் குலத் தலைவர்களை உயர்வுபடுத்திக் காட்டும் நோக்கத்தில் கிருஷ்ணன் வழியைத் தங்கள் கால்வழி மரபுடன் இணைத்துக் கொண்டனர்.” (நூலிலிருந்து பக்.10-11)

நூல் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு
ஆசிரியர் : டேல் ரியபெ
ஆசிரியர் : கீதாபாரதி

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2848 2441, 2848 2971.
மின்னஞ்சல் : aaa.com

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

இணையத்தில் வாங்க : noolulagam

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க