அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 16

பெரும்பாலரான திராவிட மக்கள், சூத்திர நிலை, தீண்டாமை முதலிய ஆரியப் படுகுழிகளில் வீழ்ந்து உழல்வதற்கும், விரல்விட்டு எண்ணக்கூடிய சிறு வகுப்பினராகிய ஆரியர் சுகவாழ்வு வாழ்வதற்கும் ஆதாரமாயிருக்கிற ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் என்று கேட்டால், கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது திராவிட நாகரிகத்தின் மறுமலர்ச்சியை நாடும் நண்பர்களின் மனம் துடியாய்த் துடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் சொல்லுகிற படியாவது இந்த ஆரியக் கொள்கைகளும் வழக்கங்களும் உண்மையாகவே முற்காலம் முதல் ஏற்பட்டு நடந்து வருகின்றனவா என்று பார்த்தால், அப்படியும் இல்லை.

வரலாற்றுக் காலத்தில் வாழாத வடநாட்டரசன் இராமன் இடைநாட்டு வானரர் துணைக்கொண்டு, அணைகட்டிக் கணைதொடுத்து இணையற்ற தென்னாட்டுப் பேரரசன் இராவணனை அழித்த செய்தி, இதிகாசப் பெயரால் இயம்பப்படுகிறது.

முற்காலத் திராவிட மக்கள் இவ்வித ஆபாசமான, இழிவையே தரும், தன்மானத்தைக் கெடுக்கும் மதச் சடங்குகளையும் சாதிக் கட்டுப்பாட்டையும் கையாண்டதில்லை. அக்காலத்திய திராவிட நாகரிகம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் உயர் தனி நாகரிகமாயிருந்தது. இவையெல்லாம் சரித்திர ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உண்மைகள்.

ஆரிய நூலாசிரியர் சிலரும், இந்த உண்மையை ஒருவாறு எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அவற்றுள், ஒரு சிறிய அத்தாட்சியை இங்கே எடுத்துரைக்க விரும்புகிறோம்.

விஜய நகரம் மகாராஜா கல்லூரிச் சரித்திரப் பண்டிதர் தோழர் எம்.எஸ்.இராமசாமி ஐயங்கார் எழுதியுள்ள (மதுரை ஜில்லா பூவருணனை) நூலில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

ஆதிகாலத்திலே திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். பின்பு ஆரியர், திராவிட நாட்டில் வந்து குடியேறித் திராவிட மன்னர்களின் தயவைப் பெற்றார்கள். ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்குக் குருவானார்கள். அதன் பின்னர்தான் தமிழ்நாட்டில் ஆரிய நாகரிகம் பரவத் தொடங்கிற்று. ஆரிய மதமும் தெய்வங்களும் ஆசாரங்களும் சாதி வித்தியாசங்களும் தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டன.

கி.மு. முதலாவது நூற்றாண்டு முதல் மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டு வரையில் புகழ்பெற்ற சங்கங்கள் இருந்தன. அரிய பெரிய கவிஞர்களும் வித்துவான்களும் இச்சங்கங்களில் அங்கத்தினராயிருந்தார்கள். அவர்கள் எழுதி வைத்த நூல்களின் மூலமாக அரசாங்கத்தில் தமிழ்நாட்டில் பரவியிருந்த மதங்களின் வரலாறு நன்றாய்ப் புலப்படுகின்றன. அக்காலத்தில் பௌத்த சமண மதங்கள் பரவியிருந்தன.

இக்காலத்து மதநிலையைப் பற்றி நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அதாவது தற்காலத்தில் குடும்பத்திலிருக்கும் ஒருவன் ஒரு மதத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவினால், அவனைச் சாதியில் சேர்த்துக் கொள்வது வழக்கமில்லை. சங்க காலத்தில் அப்படியில்லை, ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எந்த மதத்தை வேண்டுமானாலும் அனுசரிக்கலாம். அதனால் அவனுக்கு யாதொரு குற்றமும் ஏற்படாது. குடும்பத்தார் அவனை நீக்குவதும் இல்லை. இது அக்காலத் தமிழர்களுடைய விரிந்த மனப்பான்மையையும் நாகரிக உயர்வையும் காட்டுகிறது’’.

இது நாம் கூறுவதல்ல. ஆரிய ஆசிரியர் ஒருவரே எடுத்துக் கூறியிருக்கும் உண்மை. அக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் விருப்பம் போல் பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அதனால் அவர்களுக்குள் வேறுபாடோ, வெறுப்போ, பிரிவினையோ இல்லாமல் எல்லோரும் ஒரே குடும்பத்தினர் போல், ஒரே இனமாக ஒற்றுமையுடனும் சகோதர பாவத்துடனும் பழகி வந்தனர். இது தமிழ் நாகரிகத்தின் மாண்பு. ஆரியர் வந்த பின்தான் மேலே குறிப்பிட்டபடி தமிழ்நாட்டில் சாதி வித்தியாசங்களும் மத வேற்றுமைகளும் மதத்துவேஷமும் வளர்ந்து தற்காலச் சிறுமை நிலை ஏற்பட்டது. இதெல்லாம் ஆரியர் சேர்க்கையால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மகத்தான கேடு! இந்தச் சீர்கேடும் சிறுமை நிலையும் நம் முன்னோர் காலத்தில் உள்ளதல்ல என்பதும், இடைக்காலத்திலே ஆரியர் வரவால் உண்டானதென்பதும், மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டால் தெற்றென விளங்குகிறது. இதற்கு ஆதாரமாக இது போன்ற நூற்றுக்கணக்கான சான்றுகளைச் சரித்திரத்திலிருந்து எடுத்துக் காட்டலாம்.

முற்காலத் திராவிட மக்கள் இவ்வித ஆபாசமான, இழிவையே தரும், தன்மானத்தைக் கெடுக்கும் மதச் சடங்குகளையும் சாதிக் கட்டுப்பாட்டையும் கையாண்டதில்லை.

ஆகவே, முன்னோர் வழக்கம் என்று தவறாக எண்ணிக் கொண்டு ஆரியர் சிறுமை நிலைகளுக்கு இடங்கொடுக்க வேண்டியதில்லை. திராவிட நாட்டு மாபெருந் தலைவர் ஈ.வெ.ரா-வின் இடைவிடாத முயற்சியால், தமிழர் மீது சுமத்தப் பெற்ற ஆரிய இழி நிலைகள், ஒவ்வொன்றாக வீழ்ந்து வருகின்றன! இந்த அரிய தருணத்திலே, தமிழ்ப் பெருமக்கள் ஆரிய சூழ்ச்சியினால் மறந்து போன, மறைந்து கிடக்கும் பழந்தமிழ் நாகரிகத்தை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவர, ஒவ்வொரு வழியிலும் முற்பட வேண்டும். திராவிடத் தமிழ் நாகரிக மறுமலர்ச்சியே, திராவிடர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிட நாட்டின் விடுதலைக்கும் வழிகோல வல்லது.

தென்னிந்திய மொழிகளை நன்றாக ஆராய்ந்த அறிஞர் கால்டுவெல், இவை வடமொழியினின்று தோன்றியவை அல்லவென்றும் வட மொழி திராவிடத்தினின்று கடன் பட்டுள்ளதென்றும் கூறியுள்ளார். ‘இந்தியக் கலையின் அடிப்படை, திராவிடக்கலையே’ என்று டாக்டர் கில்பர்ட் ஸ்லேட்டர் அவர்களும் இந்தியக் கலைகளை ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.

இனித் திராவிடம் தெற்கில் சிறப்பதேன், என்பதை இந்தியத் துணைக் கண்டத்தின் உண்மை வரலாறு காண, வரலாறு, வேதகால வேதியர் சிந்துக்கரையிலும் கங்கைக்கரையிலும் வாழ்ந்ததிலிருந்து தொடங்குவது மாறி வைகை, காவேரி, பாலாறு ஆகிய ஆற்றோரங்களில் அமைந்த அரசுகளின் பழமையிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்றும், அதுவே உண்மையான வரலாற்றை உணர வழியென்றும், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூறியது மறைக்க – மறுக்க முடியாததோர் உண்மையாகும்.

படிக்க:
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்
செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ?

இந்திய வரலாற்றின் ஏட்டைப் புரட்டினால், வரலாற்றுக் காலத்தில் வாழாத வடநாட்டரசன் இராமன் இடைநாட்டு வானரர் துணைக்கொண்டு, அணைகட்டிக் கணைதொடுத்து இணையற்ற தென்னாட்டுப் பேரரசன் இராவணனை அழித்த செய்தி, இதிகாசப் பெயரால் இயம்பப்படுகிறது. பாண்டவரிடையே நடந்த போரும், நூற்றுவர் ஐவரிடையே இருந்த நியாயமும் கூறப்படுகிறது. ஆனால் பாரதப்போரில் பெருஞ்சோறளித்த சேரனைப்பற்றிய குறிப்புக் காணப்படுவதில்லை.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க