கேள்வி: // சமீப காலங்களில் கம்யூனிசத்தை முன் நிறுத்துவதை காட்டிலும் இடதுசாரிகள் திராவிட சிந்தனையை தீவிரமாக முன்னிருத்துகின்றார்களோ? கம்யூனிசத்தில் சாதியை ஒழிப்பதற்கான வழிமுறை இல்லை என்ற முடிவுக்கு இடதுசாரிகள் வந்துவிட்டார்களா? CPI,CPI(M) யை கேட்கவில்லை. //

– அகிலன்

ன்புள்ள அகிலன்,

திராவிட சிந்தனை என்று நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? இட ஒதுக்கீடு, சமூகநீதி, நாத்திகப் பிரச்சாரம், மகளிர் விடுதலை, பார்ப்பனிய எதிர்ப்பு … இவற்றைத்தானே? இவற்றை திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல தலித் அமைப்புகள், இடதுசாரி அமைப்புகளை உள்ளிட்டு பொதுவில் முற்போக்கு அமைப்புகள் அனைவரும் ஆதரிக்கிறார்கள். அதே நேரம் இந்தக் கோரிக்கைகளில் எவை தற்காலிகமான தீர்வைத் தரும், இந்த பிரச்சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்பதை வைத்து கம்யூனிஸ்டுகள் திராவிட சிந்தனைகளிலிருந்து வேறுபடுகிறார்கள் அல்லது ஒன்றுபடுகிறார்கள்.

சாதியை ஒழிப்பதற்கு இந்தியாவில் வர்க்க ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்படுவது ஒரு முன்னிபந்தனை. உழுபவனுக்கு நிலத்தை சொந்தமாக்காமல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்த பொருளாதார வலிமையை கொடுக்காமல் தீண்டாமை, சாதி ஒழிப்பிற்கான போராட்டத்தை  தீவிரமாக நடத்த முடியாது. அதே போன்று ஆதிக்க சாதிகளில் வாழும் நிலமற்ற அல்லது சிறு விவசாயிகளின் ஏழ்மையும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஏழ்மையும் வேறு வேறு அல்ல. இரு பிரிவினரையும் பொருளாதாரப் போராட்டங்களில் இணைத்து அதன் வலிமை கொண்டு சாதி தீண்டாமை ஒழிப்பிற்கான போராட்டங்களை இணையாக முன்னெடுக்க வேண்டும். இதுவே கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?

திராவிட இயக்க சிந்தனைக்கோ, தலித் இயக்க சிந்தனைக்கோ இப்படி அறிவியல் பூர்வமான சாதி ஒழிப்புத் திட்டம் இல்லை. அவர்கள் பொதுவில் சாதி சமத்துவம், சாதி ஒழிப்பு என்று பேசுகிறார்கள். அதை வெறும் கருத்துப் பிரச்சாரம் செய்வதன் மூலம் அடைய முடியும் என்று கருதுகிறார்கள். மோடி அரசின் தலைமையில் பாசிச அரசு படர்ந்து வரும் நிலையில் இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இயங்க வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரம் சமூக மாற்றம் என்று வரும் போது கம்யூனிஸ்டுகள் தமது கொள்கைப்படியே அரசியல் இயக்கத்தை கொண்டு செல்ல விரும்புகிறார்கள். இப்படி இருக்கையில் சாதி ஒழிப்பதற்கான வழிமுறை கம்யூனிசத்தில் இல்லை என கம்யூனிஸ்டுகள் ஏன் நினைக்க வேண்டும்?

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : // ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலன் இருவரின் சொத்து மதிப்பை வெள்ளை அறிக்கைப் போன்று வெளியிட தங்களால் முடியுமா? உங்களது வினவு செய்தி தொகுப்பின் சொத்து மதிப்பை வெளியிட முடியுமா? வணிகம், சேவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? //

– ஜோஸ்

ன்புள்ள ஜோஸ்,

ஹீலர் பாஸ்கர்.

பொதுவில் வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை, திட்டம் பற்றி அரசு அமைப்புகளால் வெளியிடப்படும் ஒன்று. அதை தனியார் நிறுவனங்களோ நபர்களோ சட்டப்படி வெளியிடும்படி யாரும் கூற முடியாது. அவர்களால் வெளியிட்டால்தான் உண்டு. அல்லது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ஏதாவது பண மோசடி மூலம் கசிந்தால்தான் தெரிய வரும். ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் இருவரது சொத்து மதிப்பு குறித்து எங்களுக்குத் தெரியாது. ஹீலர் பாஸ்கரது வீடியோக்களைப் பார்க்கையில் அவரது நிறுவனங்கள், சிகிச்சை மையங்கள், அவற்றுக்கான கட்டணங்கள் எல்லாம் சேர்ந்து அவரை பெரும் பணக்காரராய் காட்டுகின்றன. பாரிசாலனும் அந்த அளவு இல்லை என்றாலும் சிறு அளவு தமிழ் பெயரில் பொருட்கள், நாய்கள், சேவைகளை விற்பனை செய்வதற்கு உதவுகிறார். இவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களே இவர்களது சொத்து மதிப்பினை கூற முடியும். நாங்கள் சொல்வது ஒரு பொதுவான மதிப்பீடு.

படிக்க:
நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? அச்சுநூல்
வினவை ஆதரிப்பது உங்கள் கடமை ! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் !!

வினவு செய்தி தொகுப்பிற்கு சொத்து மதிப்பே கிடையாது. கிட்டத்தட்ட இலவச சேவை போன்றுதான் நடத்தப்படுகிறது. வாசகர்கள் சிலர் தரும் குறைந்தபட்ச சந்தா, நன்கொடை, தோழர்கள் தரும் உதவி நிதி கொண்டு வினவு குறைந்த பட்ச செலவுகளோடு நடத்தப்படுகிறது. உண்மையில் எங்களது நிதி நெருக்கடியால் எங்களது செயல்பாடுகளை பாரிய அளவில் விரிவுபடுத்த இயலவில்லை.

பாரி சாலன்.

வணிகம் என்பது இலாபத்தை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் தொழில். சேவை என்பது இலாப நட்டத்தை தவிர்த்து மக்களது நலனுக்காக நடத்தப்படும் சேவைத் தொழில். எந்த ரூட்டில் அதிக பணம் கிடைக்கும் என்பது ஆம்னி பேருந்து நிறுவனங்களின் குறிக்கோள். நட்டமே ஆனாலும் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் செய்ய வேண்டும் என்பது அரசு பேருந்து கழகத்தின் நிலை. தற்போது இந்த நிலைமை மாறி வருகிறது. அரசும் இலாப நட்டத்தை கணக்கிற்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உலக வங்கி, பன்னாட்டு நிதி முனையம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவை உலக நாடுகளின் அரசுகளை ஏற்கச் செய்து வருகின்றன. அதனால்தான் தனியார் பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும், தனியார் மருத்துவமனைகளும் பெருகி வரும் நேரத்தில் அரசு நிறுவனங்கள் அருகி வருகின்றன.

நன்றி !

♦ ♦ ♦

கேள்வி : // இப்பொது இருக்கும் நிதி நெருக்கடி சரியாகுமா? //

பாலா p

ன்புள்ள பாலா,

நிதி நெருக்கடி என்ற பதத்தை விட பொருளாதார நெருக்கடி என்ற பதமே பொருத்தமானது. இந்தியாவில் தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி இப்போதைக்கு சரியாகும் வாய்ப்பில்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் உள்நாட்டு நுகர்வு குறைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக உற்பத்தி குறைந்து தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இன்னொரு புறம் விவசாயிகளின் வருமானமும் பாரிய அளவுக்கு குறைந்து கிராமப்புற நுகர்வு தேய்ந்து வருகிறது.

இதனால்தான் இந்தியாவில் புதிய தொழில் துவங்குவதோ, அன்னிய முதலீடுகளின் உதவியுடன் தொழில் துவங்குவதோ காகித அளவிலேயே இருக்கிறது. உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவதற்கு இல்லாமல் சந்தை சுருங்கி வருகிறது. இந்த இலட்சணத்தில் ஐந்து டிரில்லியன் பொருளாதாரத்தை கொண்டு வருவோம் என மோடி அரசு கேழ்வரகில் நெய் வடிவதாக அடித்து விடுகிறது. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. இரண்டும் சேர்ந்து சிறு – குறு தொழில்களை சுனாமி போல ஒழித்து விட்டன – ஒழித்தும் வருகின்றன. இந்தியா ஒரு பெரிய நாடு, பெரிய பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடு என்பதால் இந்த பாதிப்புகள் குவிந்து பெரிய பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு துறை சார்ந்து பரிசீலித்து பார்த்தோமானால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை புரிந்து கொள்ளலாம்.

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : // இந்தப் பொருளாதார மந்தம் (தேக்கம்) உலகம் தழுவி உள்ளது. அப்படியிருக்கையில் இந்தியாவில் மோடியைப்பற்றி மட்டுமே பேசுவது என்பது எப்படி? பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. இரண்டும் இல்லையென்றால் இந்தியா வல்லரசு ஆகமுடியுமா? //

– உடுமலைப்பேட்டை சண்முகவேல்

ன்புள்ள சண்முகவேல்,

முன்னர் கண்ட பதிலின் தொடர்ச்சியாக உங்கள் கேள்வியை பரிசீலிக்கலாம். உலகு தழுவிய பொருளாதார மந்தம் என்று பேசப்படும் விசயம் உண்மையில் முதலாளித்து கட்டமைப்பு நெருக்கடியாக இருக்கிறது. இந்த நெருக்கடியின் பாதிப்பில் இருந்து எந்த நாடும் தப்பித்துக் கொள்ள முடியாது. உலகமே ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் வலைப்பின்னலில் சிக்கியிருப்பதால் இந்த நெருக்கடி எந்த ஒரு நாட்டையும் நகரத்தையும் கிராமத்தையும் விட்டு வைக்காது என்பது உண்மைதான். அமெரிக்க – சீன வர்த்தக போர், அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றிய முரண்பாடு, வளைகுடாவில் நடக்கும் போர்கள் – உள்நாட்டு சண்டைகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையில் ஏகாதிபத்திய உலகமும் தனது நிதி மூலதனத்தைக் கொண்டு தொடர்ந்து உலகை சுரண்ட முடியாத அளவில் நெருக்கடியில் தத்தளிக்கிறது. உற்பத்தி அதிகரித்து நுகர்வு குறைந்து சந்தை சுருங்கி அதன் விளைவாக வேலையின்மை அதிகரித்து என ஒரு தொடர் விளைவாக இந்த நெருக்கடி பரவி வருகிறது.

படிக்க:
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! அச்சுநூல்

இந்தியாவிலும் இதன் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. ஏற்றுமதி குறைகிறது, இறக்குமதிக்கு வரி போடக்கூடாது என வல்லரசு நாடுகள் வற்புறுத்துகின்றன. மலிவான உழைப்பிற்காக ஆயத்த ஆடைத் தொழில் இந்தியாவில் இருந்து வங்க தேசத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சுதேசி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வண்ணம் இந்திய அரசு செயல்பட வேண்டும். ஆனால் மோடி அரசோ தனியார்மயம், தாராளமயம், உலக மயக் கொள்கைகளை முன்னிலும் மூர்க்கமாக அமல்படுத்தி சுதேசி பொருளாதாரத்தை சாகடித்து வருகிறது. கூடுதலாக பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. மூலம் சிறு குறு தொழில்கள், விவசாயம் அழிக்கப்பட்டு வேலையின்மையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மோடி அரசு உருவாக்கி விட்டது. இந்த இலட்சணத்தில் வல்லரசு, சந்திராயன், அயோத்தி கோவில், கோமாதா என்று நடுத்தர வர்க்கத்தை திசை திருப்புகிறார்கள்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க