தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் : மந்திரத்தால் மாங்காய் விழாது !

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் தினந்தோறும் நடைபெறுவதும் அவற்றுள் ஒரு சில பத்திரிகைகளில் வெளியாகி விவாதப் பொருளாவதும் புதிய செய்தி அல்ல. எனினும், தற்பொழுது, அதாவது இந்து மதவெறிக் கும்பல் மைய அரசு அதிகாரத்தில் அமர்ந்த பிறகு நடைபெறும் தாக்குதல்கள், முன்னைக் காட்டிலும் வக்கிரத்தோடும், எவ்விதமான கூச்ச, குற்ற உணர்வின்றியும், தண்டிக்கப்பட மாட்டோம் என்ற திமிரோடும் தொடுக்கப்படும் புதிய சூழல் உருவாகியிருக்கிறது.

இந்த வகையான மிகவும் வெளிப்படையான வன்கொடுமைத் தாக்குதல் குஜராத் மாநிலம் உனாவில் நடந்தபோது நாடெங்கும் அதிர்ச்சியும் எதிர்வினைகளும் ஏற்பட்டன. ஆயினும், இந்த வகையான தாக்குதல்கள் தற்பொழுது இயல்பாகி வருவதை மத்தியப் பிரதேச மாநிலம் பாவ்கேதி கிராமத்திலும், தமிழகத்தில் மதுரை மாவட்டத்திலும் நடந்திருக்கும் வன்கொடுமைகள் எடுத்துக்காட்டுகின்றன.

caste-violence-in-india-(2)
வன்கொடுமை தாக்குதலுக்குப் பலியான குழந்தைகள் அவினாஷ் மற்றும் ரோஷிணியின் சடலங்கள்.

மத்தியப்பிரதேச மாநிலம், ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள பாவ்கேதி கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியைச் சேர்ந்த 12 வயது ரோஷ்ணி, 10 வயது அவினாஷ் ஆகிய இரு குழந்தைகளும் அவ்வூரின் ஊராட்சி அலுவலகம் அருகே திறந்தவெளியில் மலம் கழித்தார்கள் என்ற அற்பமான காரணத்திற்காக, யாதவ் சாதியைச் சேர்ந்த சகோதரர்கள் ஹக்கீமும், ராஜேஷ்வரும் அவ்விருவரையும் குழந்தைகள் என்றுகூடப் பாராமல் மிருகத்தனமாகத் தாக்கியதில், அவ்விரு குழந்தைகளும் இறந்து போனார்கள்.

தமிழகத்தில், மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும், மறவப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சரவணக்குமார் என்ற மாணவனின் புத்தகப்பையைத் தேவர் சாதியைச் சேர்ந்த மகா ஈஸ்வரன் என்னும் சக வகுப்பு மாணவன் ஒளித்து வைத்திருக்கிறான். ஏண்டா, என் பையை ஒளிச்சு வச்ச? என்று சரவணக்குமார் கேட்டதற்காக, அவனின் சாதியைச் சொல்லித் திட்டி, நீயெல்லாம் என்னை எதுத்துப் பேசறயா? என்று அவமானப்படுத்தி, சரவணக்குமாரின் முதுகுப் பகுதியில் கழுத்து முதல் இடுப்பு வரை பிளேடால் பிளந்திருக்கிறான் மகா ஈஸ்வரன்.

படிக்க :
♦ திறந்தவெளியில் மலம் கழித்த ‘குற்றத்திற்காக’ இரு தலித் சிறுவர்கள் அடித்துக்கொலை !
♦ மதுரை : தாழ்த்தப்பட்ட மாணவனை பிளேடால் கிழித்த வன்கொடுமை ! – ம.உ.பா.மையம் கள அறிக்கை !

திறந்தவெளியில் மலம் கழிப்பது இந்தியாவில் பரவலாக நடந்துவரும் விடயம்தான். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த அநாகரிகத்தை ஒழிக்கப் போவதாக நரேந்திர மோடி பீற்றிவரும்போது, ஆதிக்க சாதிவெறியர்களோ இதனை வன்கொடுமை மூலம் ஒழித்துக்கட்ட முனைகிறார்கள் போலும்.

“எப்படியோ இந்தியா சுத்தமானால் சரி” என்று இந்த வன்கொடுமைக்கு ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் ஆதரவுகூடக் கொடுக்கலாம். இது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு அல்ல. காஷ்மீர் மாநிலம், கதுவாவில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த பழங்குடியினச் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்த குற்றவாளிகளை ஆதரித்து ஊர்வலம் போனவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்கள்.

மேலத் தெருக்களிலும் அக்ரஹாரத்திலும் ஆடு மாடுகளும் நாயும் மூத்திரமும் மலமும் கழிப்பதைச் சகித்துக்கொண்டு போகும் ஆதிக்க சாதி இந்து மனம், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குழந்தைகள் திறந்த வெளியில் மலம் போனதைப் பொறுத்துக் கொள்ள மறுக்கிறது. அக்குழந்தைகளைக் கொன்றுபோடும் அளவிற்கு மிருகத்தனமாகத் தாக்குகிறது. எனில், இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை ஆடு, மாடுகளைவிடக் கீழானது என்பதுதான் இக்கொலை உணர்த்தும் பொருள்.

அதனால்தான் இத்தாக்குதலைக் குற்றமாகவோ அநாகரிகமானதாகவோ கருத மறுக்கிறது ஆதிக்க சாதி மனோபாவம். மேலும், இதற்காகத் தம்மை யாரும் தண்டித்துவிட முடியாது என்ற சாதி ஆணவத் திமிரில் இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிடுகிறார்கள். இதன் வழியாக தாழ்த்தப்பட்டோர் மத்தியில் அச்சத்தை விதைக்க முயலுகிறார்கள்.

சரவணக்குமாரின் முதுகில் தெரியும் “ஆதிக்க சாதிவெறி”க் காயம்!

“ஏன்டா, என் பையை ஒளிச்சு வச்ச?” என்பது விளையாட்டுப் பருவத்தைத் தாண்டாத மாணவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளும் மிகச் சாதாரணமான கேள்வி. இக்கேள்வியால் கேள்விக்குள்ளானவனின் கௌரவம் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடப் போவதில்லை. ஆனால், இங்கோ கேள்வி கேட்ட சரவணக்குமார் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவன் என்பதாலேயே ஆதிக்க சாதியைச் சேர்ந்த மகாஈஸ்வரனால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறான். ஆதிக்க சாதியினரின் எந்தவொரு செயலையும் தாழ்த்தப்பட்டவர்கள் கேள்விக்குள்ளாக்கக்கூடாது என்பதுதான் இத்தாக்குதல் உணர்த்தும் செய்தி.

ஆதிக்க சாதியினரின் முகம் சுளித்துவிடாதபடி, மனம் கோணாதபடி தாழ்த்தப்பட்டோர் நடந்துகொள்ள வேண்டும். அவர்களை எதிர்த்தோ, கண்டித்தோ சுண்டுவிரலைக்கூட அசைத்துவிடக் கூடாதென்றால், தாழ்த்தப்பட்டோர் சுயமரியாதையற்ற சதைப் பிண்டங்களாகத்தான் வாழ வேண்டும்.

மத்தியப் பிரதேசத்தில் நடந்திருக்கும் அவ்வன்கொடுமைக்கு, அம்மாநிலம் பின்தங்கிய மாநிலம், சமூக சீர்திருத்த இயக்கங்கள் எதுவும் நடைபெற்றிராதா மாநிலம், மிக முக்கியமாக  ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினரின் கோட்டை எனக் காரணங்களை அடுக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு அப்படியா? பெரியார் மண், சமூக நீதி பூமி என்றெல்லாம் தமிழ்நாட்டிற்கு ஒளிவட்டம் போடப்படுவதெல்லாம் வெற்றுக் கோஷம்தானா என்றால், இந்தக் கேள்விக்கு இல்லை என்று உறுதியாகப் பதில் சொல்ல முடியாது.

சரவணக்குமாரின் சொந்த ஊரான மறவப்பட்டியில் இன்றும்கூட தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பு அணிந்துகொண்டு ஊர்த் தெருவுக்குள் செல்ல முடியாத தீண்டாமை தாண்டவமாடுவதாகக் கூறுகிறார்கள், அவ்வூரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள்.

படிக்க :
♦ தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
♦ சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?

இத்தகைய தீண்டாமைக் கொடுமை இன்னமும் தமிழ்நாட்டில் நிலவுகிறதா என நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் புருவத்தை உயர்த்தக்கூடும். எனினும், சந்தேகமே கொள்ளமுடியாத அளவிற்குத் தீண்டாமையும் வன்கொடுமைகளும் தமிழகத்தில் நடைபெற்று வருவதற்கு ஆணவக் கொலைகளும், இரட்டைக் குவளை முறை, தீண்டாமைச் சுவர், தனிச் சுடுகாடு உள்ளிட்டவையும் சாட்சியங்களாக உள்ளன.

சரவணக்குமார் மீது மகாஈஸ்வரன் நடத்திய வன்கொடுமைத் தாக்குதலை விதிவிலக்கானதாகப் பார்க்க முடியாது. ஆதிக்க சாதிவெறி தென் தமிழகப் பள்ளி மாணவர்களைக் கபளீகரம் செய்திருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது, அத்தாக்குதல். 1990-கள் தொடங்கியே தென் தமிழக மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறி மனோபாவமும் சாதிவெறியர்களின் கொட்டமும் அதிகரித்து வருவதன் விளைவுதான் மகா ஈஸ்வரன் சரவணக்குமாரைத் தாக்கியதன் பின்னே இருக்கும் சூழல்.

இந்தச் சூழலைத் தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிடுகிறது, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தென் தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் தத்தமது சாதிகளைக் குறிக்கும் வண்ணக் கயிறுகளைத் தமது கைகளில் கட்டிவருவதை ஆதரித்து எச்ச.ராசா அறிக்கைவிட்டது ஒரு தனிப்பட்ட பார்ப்பன வெறியனின் கருத்து மட்டுமல்ல. சாதியுணர்வைத் தனது சமூக அடித்தளமாகப் பயன்படுத்திக்கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் அரசியல் நோக்கமும் அதன் பின்னே  உள்ளது.

எச்ச.ராஜா அறிக்கை வந்தவுடன் அ.தி.மு.க. அரசு அவ்விவகாரத்தில் பின்வாங்கிக் கொண்டது அதனின் அடிமைத்தனத்தை மட்டும் காட்டவில்லை. அ.தி.மு.க. அரசு அதன் தன்மையிலேயே பார்ப்பனர், தேவர், கவுண்டர் உள்ளிட்ட ஆதிக்க சாதிவெறியர்களுக்கு அனுசரணையான அரசுதான் என்பதையும் உறுதிப்படுத்திக் காட்டியது.

ஆதிக்க சாதிவெறியை அரவணைத்துக் கொம்பு சீவிவிடுவதற்கு மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதற்கும் ஏற்ற அரசியல் சூழல் தமிழகத்தில் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன. இச்சூழலுக்கு முகங்கொடுக்காமல், அதனை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடாமல், பெரியார் மண், சமூக நீதி பூமி என்று மட்டும் கதைத்துக் கொண்டிருப்பதால் எந்தவொரு ஆக்கபூர்வமான பயனும் விளைந்துவிடாது.

தமிழ்ச்சுடர்
– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க