துரை மாவட்டம், ஜல்லிக்கட்டுப் புகழ் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு ஊராட்சியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த மாணவன் சரவணக்குமார். வயது 14. அவனுடன் படிக்கும் தேவர் சாதியைச் சேர்ந்த மகா ஈஸ்வரன் என்ற மாணவனால் நடு முதுகில் பிளேடால் கொடுரமாக வகிரப்பட்ட சம்பவம் அண்மையில் செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பானது.

9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் மனதில் ஆதிக்க சாதி மனப்பான்மை கொழுந்துவிட்டு எரிந்துள்ளது என்பதை அறிந்தபோது மனம் பதறியது. நடந்தது என்ன என்பதை அறிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளையின் துணைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், எம்.டி.ராஜசேகரன்  மற்றும் அலங்காநல்லூரைச் சேர்ந்த ஆதரவாளர்கள் பெரியசாமி, முருகன் ஆகியோர் 15-10-2019 அன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பாலமேட்டிலிருந்து சுமார் 2 கி.மீ.தூரத்தில் உள்ளது மறவர்பட்டி கிராமம். சுமார் 600 குடும்பங்கள் வாழும் சிற்றூரில் 60 அருந்ததியர் குடும்பங்கள் காலனியில் (சேரி) வசிக்கின்றனர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்த சரவணக்குமாரை அங்கே சந்தித்தோம். அவனுடைய அம்மா, தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர்.

மாணவர் சரவணகுமாரின் குடும்பம்.

நடந்த சம்பவத்தைப் பற்றி சரவணக்குமாரிடம் கேட்டோம். “அன்றைக்கு (11-10-2019) சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும் பஸ்ஸுக்காக நின்னுக்கிட்டிருந்தோம். என்னோட நண்பன் மோகன் ராஜோட புத்தகப் பையை எங்க கூடப் படிக்கிற மகா ஈஸ்வரன் ஒளிச்சு வச்சுட்டான். பையக் குடுடா சொங்கிப் பயலேன்னு சொன்னேன். மகா ஈஸ்வரன் என்கிட்ட வந்து ‘ஏண்டா சக்கிலிய கூ… மவனே உனக்கு அவ்வளவு திமிரா’ ன்னு திட்டி, அடிச்சு கையில வச்சிருந்த பிளேடால முதுகில கிளிச்சுட்டான். சட்டை ரெண்டா கிழிஞ்சிட்டு, ரத்தமா கொட்டுச்சு. நான் கதறி அழுதேன். மகா ஈசுவரன் வெட்டிட்டு ஓடிட்டான். அங்க இருந்தவங்க என்னைய போலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போனாங்க. அதுக்கு அப்புறம் என்னோட அம்மா வந்தாங்க. போலீஸ்காரங்க எங்க அம்மாவோட என்னைய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சாங்க ” என்று கூறினான்.

சட்டையைக் கழற்றச் சொல்லிப் பார்த்த போது கழுத்திலிருந்து அடி முதுகு வரை முதுகுத்தண்டு மேல் நீளமாக கிழிக்கப்பட்ட காயம் இருந்தது. பிளேடு என்பதால் பையன் தப்பித்தான். இதுவே கத்தியாக இருந்தால் என்னவாகி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

அதன் பிறகு சரவணக்குமாரின் அம்மா ராஜாத்தி பேசினார். “இதுக்கு முன்னாடியும் ரெண்டு தடவை இதே பையன் என் பையனோட சண்டை போட்டு காயத்தை ஏற்படுத்தி இருக்கான். நான் அதைப் பெரிது படுத்தவில்லை. கேட்கப் போனால் நம்ம மேல தான் பழியப் போடுவாங்க. அவங்க மேல்சாதிக்காரங்க… ஒன்னா சேந்துக்கிட்டு அடிக்க வருவாங்க என்று பயந்து தான் நான் கேட்கவில்லை. என்னோட வீட்டுக்காரர் வெளியூருல பெயிண்டிங் வேல பாக்குறார். எனக்கு இவன் ஒரே மகன். இவனாச்சும் படிக்கட்டுமேன்னுதான் பல பிரச்சினைகளுக்கு மத்தியில படிக்க வைக்குறோம். இப்பகூட இந்த சம்பவத்துக்குப் பிறகு சமரசத்துக்கு வந்தாங்க. காயத்துக்கு மருந்துபோட 500 ரூபா கொடுக்குறோம்னு சொன்னாங்க. சமுதாயத் தலைவர்கள் வந்து சமரசமாகப் போகச் சொல்லி வற்புறுத்தினாங்க. நாந்தான் முடியாதுன்னுட்டு போலீசுல புகார் கொடுத்தேன். அதுக்கும் பல மிரட்டல்… இந்த பிரச்சினை இத்தோட முடியட்டும்னு தான் நான் புகார் கொடுத்தேன்” என்று கூறினார்.

காலனி பகுதியில் 60 குடும்பங்கள் இருந்தாலும் எல்லோரும் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிப் போகும் அளவுக்கு அங்கே சாதி ஒடுக்கு முறை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் என்ற அருந்ததியர் இளைஞரை தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள் வீடு புகுந்து தாக்கியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் என்கின்றனர். கட்சிகள் மற்றும் ஊர் பொறுப்புகளில் இருப்பவர்கள் எல்லோரும் ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். எல்லோராலும் ஒடுக்கப்படுகிறவர்கள் காலனி மக்கள்.

படிக்க:
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
கிராமத்து பள்ளிகளில் சாதி வளர்க்கும் சண்முகங்கள்

இவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமுதாயக் கூடத்திற்குப் போகக்கூடாது. செருப்பு அணிந்து மேல் சாதியினர் தெருவில் நடக்கக்கூடாது. கோவில் திருவிழாவில்கலந்துகொள்ளக்கூடாது. சொந்த நிலம் கிடையாது. சுடுகாடு இல்லை. தெரு விளக்கு இல்லை. குடி நீர் இல்லை. கழிப்பறை வசதி இல்லை. அரசின் எல்லா பொது நலத் திட்டங்களும் இவர்களுக்கு கிடைத்தால் உண்டு. இல்லாவிட்டால் இல்லை. யாரிடமும் கேட்க முடியாது. கொத்தடிமைகளைப் போல இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாலமேடு அரசு மேல் நிலைப் பள்ளியில் சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,200 மாணவர்கள் படிக்கின்றனர். இருபாலர் பள்ளி. ஆசிரியர்கள், அலுவலர்கள் 40 பேர் வரை பணியாற்றுகின்றனர். ஜான் பாக்கியம் செல்வம் தலைமை ஆசிரியராக உள்ளார். பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகிறது. மாணவர்களிடையே சாதி ஆதிக்க மனப்பான்மை பரவிக்கிடப்பதாகவும் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்கள் சுதந்திரமாகக் கல்வி கற்க முடியவில்லை என்றும் தேவர் சாதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற சமூக ஆர்வலர் தெரிவித்தார்.

தலித் வகுப்பைச் சேர்ந்த அலங்காநல்லூர் முருகன் என்பவரும் நம்முடைய களப்பணியில் நம்மோடு இணைந்து வந்தனர். பள்ளி மாணவர்களிடையே சாதி வெறி மட்டுமல்லாமல் கஞ்சா போன்ற போதைப் பழக்கமும் பரவலாக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்களை மிரட்டுவது, பொருட்களைப் பறிப்பது, சைக்கிள் டயரை கத்தியைக் கொண்டு கிழிப்பது, மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களை கேலி செய்கின்ற அளவுக்கு ஆதிக்க சாதி மாணவர்களில் ஒரு கும்பல் சீரழிந்துள்ளனர். ஆசிரியர்களால் மட்டும் அல்ல பெற்றோர்களாலும் தட்டிக்கேட்க முடியாத நிலை உள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

பாலமேடு காவல் நிலையத்தில் குற்ற எண்:156/19 ஆக சட்டப் பிரிவுகள் 294(b) 324 IPC R/w 3(1)(r) 3(1)(s)3(2)(va) POA Act வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. பள்ளியிலிருந்து கல்விச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பாலமேடு காவல் நிலையம் வாடிப்பட்டி தாலுகா சரகத்துக்கு உள்பட்டது. இது பற்றி கேட்டதற்கு அங்கிருந்து முறையான பதில் கிடைக்கவில்லை.

( முதல் தகவல் அறிக்கையின் நகல் )

மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய  மாவட்டங்கள் சாதிக்கொடுமைக்குப் பேர்போன மாவட்டங்கள். பட்டியல் இன மக்கள் எந்த உரிமையும் இல்லாமல் அடிமைகளைப் போல வாழ்ந்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன் அருந்ததி வகுப்பைச் சேர்ந்த சத்துணவுப் பணியாளர் சமைத்தால் எங்கள் வீட்டுப் பிள்ளைகள் சாப்பிடமாட்டார்கள் என்று இடை நிலைச் சாதியினர் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த கொடுமை அரங்கேறியது.

மதுரை, தேனி மாவட்டங்களில் சில கிராமங்களில் அரசுப் பள்ளிகளில் சாதி அடிப்படையில் பிள்ளைகள் பிரித்து வைக்கப்பட்டு பாடம் கற்றுத் தரப்படுகிறது. உசிலம்பட்டி அருகே வடுகபட்டி என்ற ஊரில் செருப்பு அணிந்து சென்ற தலித் மாணவனின் தலையில் செருப்பைச் சுமக்க வைத்து இழிவு படுத்தினர். தேனி மாவட்டம் கோடாங்கி பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் பட்டதாரி தலித் இளைஞன் கால் மேல் கால் போட்டு தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்ததினால் “ஏண்டா  நாயே, எம்ம்புட்டு திமிர் இருந்தா நான் வரும்போது கால் மேல கால்போட்டு உக்காந்திருப்ப” என்று சொல்லி கத்தியால் தலையில் வெட்டப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் தலித் மக்கள் தேவர் சாதியினர் முன்பு பேருந்தில் உட்கார்ந்து செல்ல முடியாத நிலைமை இப்போதும் இருந்துவருகிறது.

படிக்க:
சாதிய பிளேடுகள் : இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா ?
♦ கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?

உசிலம்பட்டி அருகே பூதிப்புரம், பன்னியான் போன்ற ஊர்களில் சாமி கும்பிடுவதில் தலித்களுக்கு காலங்காலமாக இருந்து வந்த உரிமைகள் கூட தற்போது இளைய தலைமுறைகளால் மறுக்கப்பட்டு வருகிறது. இது போன்று எண்ணற்ற கொடுமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சாதிக்கட்டமைப்பைப் பேணிக் காக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அடிமை அ.தி.மு.க அரசின் ஆதரவோடு தமிழ் நாட்டின் ஊர்கள் தோறும் “ஆயுத பூஜை” ஊர்வலங்கள் நடத்திவருகிறது.

பா.ஜ.க. அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை – 2019 , பள்ளிக் கல்வியை முடிக்கும் முன் மாணவர்கள் ஆறு பொதுத் தேர்வுகளைக் கடக்கச் சொல்கிறது. அல்லது தொழில் கல்வி என்ற பெயரில் குலக்கல்வியைத் திணிப்பது அல்லது கல்வியை விட்டே வெளியேற்றுவது என்பதில் தீவிரமாக உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள கல்வித்துறை உயர் அதிகாரிகள் தமிழக அரசுக்குத் தெரியாமலே பா.ஜ.க.அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் பள்ளிக்கூடங்களில்  நிலவிவரும் சாதிக் கொடுமைகளைத் தடுக்க முன்வருவார்கள் என்று நம்பமுடியுமா ? இடதுசாரி, ஜனநாயக, சிறுபான்மை சக்திகள் பெரும்பான்மையுடன் செல்வாக்குப் பெற்றுள்ள ஐ.ஐ.டி, ஜே.என்.யு. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கூட ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் நிர்வாகத்துடன் இணைந்து அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர். ஜனநாயகவாதிகளின் ஒன்றுபட்ட கடுமையான போராட்டத்தின் மூலமாகவே இதனை முறியடிக்க முடியும் என்பதை அனைவருக்கும் முதலில் உணர்த்த வேண்டியுள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கள ஆய்வு :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 73393 26807 

2 மறுமொழிகள்

    • நான் வழக்கமாக வினவின் செய்திகளை நம்புவதில்லை அவர்களே அவர்களின் நம்பகத்தன்மையை பல பொய் செய்திகள் மூலம் கெடுத்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் இது எவ்வுளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை அப்படி உண்மையாக இருந்தால் இது கண்டிக்க வேண்டிய செயல்.

      ஆனால் என்னை பொறுத்தவரையில் 14 வயது மாணவனிடம் ஜாதி வன்மம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க