கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் ஒரு ‘உயர்’ சாதியைச் சேர்ந்தவரின் இரு சக்கர வாகனத்தை தொட்டதாக ஒரு தலித் மீது சாதிவெறி கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
தினக்கூலி வேலைப் பார்க்கும் 28 வயதான காசிநாத் தல்வார், தனது தந்தையுடன் விஜயபுராவில் உள்ள மினாஜி கிராமத்தில் சனிக்கிழமை வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னம்மா வட்டம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆதிக்க சாதியினருக்குச் சொந்தமான ஒரு பைக்கைத் தொட்டதாக குற்றம் சாட்டிய அந்த கிராமத்தைச் சேர்ந்த கும்பல் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து தல்வாரின் தந்தை யங்கப்பா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோவில் காசிநாத் தல்வாரின் மேலடை கிழிக்கப்பட்டு, கீழே தள்ளப்பட்ட நிலையில், அவரை சுற்றியிருக்கும் கும்பல் சரமாறியாக அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறது.
காசிநாத்தை மீட்க முயன்றபோது சாதிவெறி கும்பல் அவரையும் அவரது மருமகள் மற்றும் மகளையும் தாக்கியதாக யங்கப்பா கூறினார். “அவர்கள் எங்கள் சாதிக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். எங்கள் வீடுகளுக்கு தீ வைப்பதாக அச்சுறுத்தினர்” என தல்வார் தனது புகாரில் கூறினார். இந்தப் புகார் தாலிகோட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்சி / எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் உள்ளூர் போலீசார் புகார் பதிவு செய்துள்ளபோது, கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரமாக வீடியோ உள்ளபோதும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. புகாரில் 13 பேரின் பெயர் கூறப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி கூறுகிறது.
கர்நாடக காவல்துறை அதிகாரி அனுபம் அகர்வால், கொலைவெறி தாக்குதல் நடத்திய கிராமத்தைச் சேர்ந்த கும்பலும் தல்வார் மீது எஃப்.ஐ.ஆர். பதிந்துள்ளதாக கூறியுள்ளார்.
“சம்பவம் நடந்த இடத்தை ஒரு விசாரணைக் குழு அடைந்தபோது, தல்வார் தனது ஆடைகளைக் களைந்து துணி துவைத்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளுக்கு தனது தனிப்பட்ட பாகங்களைக் காட்டத் தொடங்கியதால் அவரைத் தாக்கியதாக கூறப்பட்டது. எனவே ஐபிசியின் 354 வது பிரிவின் கீழ் நாங்கள் எதிர் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என அந்த காவல் அதிகாரி தங்களது ‘புலனாய்வு’ அறிக்கையை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.
படிக்க:
♦ உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
♦ தமிழக ஊடகவியலாளர்கள் மீதான காவி கும்பலின் தாக்குதல் ! ஃபேஸ்புக்கில் எழும் கண்டன குரல் !
சாதி அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வாங்க வைக்க அல்லது சமரசத்திற்கு வரும்படி கட்டாயப்படுத்த காவல்துறையால் எதிர்-எஃப்.ஐ.ஆர். பதியப்படுவது வழக்கமாக போலீசு கையாளும் உத்தியாக உள்ளது. சமீபத்தில் நியூஸ் க்ளிக் இணையதளத்தில் வெளியான செய்தியில், மகாராஷ்டிராவின் பீட் நகரில், ஒரு தலித் பெண் உடல் மற்றும் பாலியல் அத்துமீறல் செய்ததாக ஒரு வழக்கறிஞருக்கு எதிராக புகார் அளித்தார். பாதிக்கப்பட்டவருக்கு எதிராக சில மணி நேரங்களுக்குள் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.
மூன்று ஆண்களுடன் இந்த தலித் பெண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வழக்கறிஞரின் மனைவி குற்றம் சாட்டினார். எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்ட மூன்று ஆண்களில் ஒருவர் உள்ளூர் பத்திரிகையாளர், தலித் பெண் தனது புகாரை பதிவு செய்ய உதவியவர்கள். “இந்த எதிர் எஃப்.ஐ.ஆர் நாங்கள் பெண்ணுக்கு அளித்த உதவிக்காக எங்களை துன்புறுத்துவதற்காக போடப்பட்டது” என அந்த பத்திரிகையாளர் கூறுகிறார்.
நகரத்தில் உள்ள ஒரு ‘செல்வாக்கு மிக்க மனிதரான’ அந்த வழக்கறிஞர் தன்னைப் பற்றிய புகாரை திரும்பப் பெற்றால் இந்த பொய்ப் புகாரைத் திரும்பப் பெற முன்வருவதாக தலித் பெண் கூறுகிறார். தனக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
சமீபத்தில், தலித்துகளுக்கு எதிரான பல வன்முறை சம்பவங்கள் ஊடகங்களில் பதிவாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, குஜராத்தில் 27 வயது தலித், ஆறு உயர் சாதியினரால் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனஸ்கந்தா மாவட்டத்தின் தனேரா ஒன்றியத்தில் உள்ள ராவி கிராமத்தில் வசிக்கும் பிண்டு கால்ச்சர், ஜூலை 16 ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஆறு பேர் கொண்ட கும்பலால் அவரது வீட்டிற்கு வெளியே இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் இறந்து கிடந்தார், அவரது உடலில் பயங்கரமான காயங்கள் இருந்தன.
மத்திய பிரதேசத்தின் குணாவில், ‘ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி காவல்துறையினர் தங்கள் பயிர்களை அழித்தபோது, ஒரு தலித் தம்பதி தற்கொலை செய்து கொண்டது. அவர்களுடைய குழந்தைகள் இறந்த உடல்களைப் பிடித்து அழுத காட்சிகள் நாடு முழுவதும் தொலைக்காட்சி திரைகளில் ஒளிபரப்பப்பட்டன, இதனால் கொந்தளிப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தில், சாதி அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக ஜூன் மாதம் ஒரு அறிக்கை கூறியது. கடந்த வாரம் தர்மபுரியில் ஒரு தலித் சிறுவனை மலம் அள்ள வைத்த கொடுமையும் நடந்தது.
ஒரு பெருநோய்த் தொற்று காலத்திலும் சாதிவெறிச்செயல்கள் அரங்கேறுவது, இந்திய சமூகத்தில் அழிக்க முடியாத நோய்க்கிருமியாக சாதி ஆழமாக வேறூன்றி இருப்பதைக் காட்டுகிறது. சாதிபடிநிலையை ஊக்குவிக்கும் கொள்கையாகக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் ஆளும்வரை சாதியை ஒழிப்பது குறித்து சிந்திக்கக்கூட முடியாது.
கலைமதி
நன்றி: த வயர்.
The wire news only stated that dalit couples are died but in other news stating that they are stable. Pls check it
மாந்தோப்பும் மருத்துவர், மன்னார்குடி மாஃபியா மற்றும் வகையறா அல்லது எதிர் தரப்பு தான் எதற்கும் சலைத்ததா..பார்ப்பனிய பண்பாட்டை வலிய சுமந்து உசுப்புதலாள் மதிகெட்டு திரியும் ஜாதி வெறி கொண்ட பார்வையானது,எரியும் கொள்ளியை பிடுங்கி முதுகை சொறிந்து புண்படுத்தும் வேதனைக்கு ஒப்பாகும்