அக்கலாம்பட்டி: சுடுகாடு இல்லாமல் ஒடுக்கப்படும் அருந்ததிய மக்கள்!

சுடுகாடு மட்டுமல்ல, அக்கலாம்பட்டி பகுதி  அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனை, குடிநீர் என எந்த அடிப்படை வசதியையும் முறையாக செய்து கொடுக்காமல் அரசு புறக்கணித்து வரும் அவலம் நீடிக்கிறது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட கிராமப்பகுதி அக்கலாம்பட்டி. இப்பகுதியில் ஆதிக்கசாதியினரான கவுண்டர்களும், பட்டியலின அருந்ததியர் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கவுண்டர்களைப் பொறுத்தவரை நிலவுடமையாளர்களாக, குறிப்பாக பெரும்பாலும் 10 ஏக்கருக்கு மேல் நிலம் கொண்ட விவசாயிகளாக இருக்கின்றனர். அருந்ததியர் சமூக மக்களோ இவர்களைச் சார்ந்து விவசாயக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் பண்ணையடிமைகளாக வேலை பார்த்து வந்த நிலைமாறி அன்றாட விவசாயக் கூலிக்கும், நாமகிரிப்பேட்டையில் உள்ள ஜவ்வரிசி மில்களுக்கும் சென்று வேலை பார்த்து வருகின்றனர்.

நிலவிற்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதாக பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்நாட்டில்தான் அக்கலாம்பட்டி தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களுக்கு பிணத்தைப் புதைப்பதற்கு சுடுகாடு இல்லை. ஆதிக்க சாதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மயானப் பகுதியை ஆக்கிரமித்து அதை சட்டவிரோதமாக விவசாய நிலமாகப் பயன்படுத்தி வருகிறார். இதனால் ரோட்டின் ஓரம் ஒதுக்குப்புறமாக பத்துக்குப் பத்து இடத்தில்தான் இறந்தவர்களைப் புதைக்கின்ற அவலநிலை பல பத்தாண்டுகளாக தொடர்கிறது.

அதாவது, கவுண்டர் சாதியைச் சார்ந்த சரவணன் என்பவரின் நிலத்திற்கு அருகில் அரசு புறம்போக்கு நிலம் 17 சென்ட் உள்ளது. இந்நிலத்தைத்தான் சரவணன் ஆக்கிரமித்து அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலம்தான் அருந்ததிய மக்களின் மயானத்திற்குரிய பகுதியாகும். 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் அரசு மயானம் அமைக்க முயற்சி எடுத்தபோது அதை ஆதிக்க சாதி கவுண்டர்களும், அவர்களுக்கு துணையாக அதிமுக கட்சியைச் சார்ந்தவர்களும் சேர்ந்து மயானம் அமைப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதே சமயத்தில் இந்த புறம்போக்கு நிலப்பகுதியில் அருந்ததிய மக்கள் இறந்தவரின் பிணத்தை அடக்கம் செய்ய முயற்சித்த போது அதை தடுத்து நிறுத்தியுள்ளார் சரவணனின் தந்தை கருப்பண்ணன். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்களையே குற்றவாளியாக்கி அவர்களிடம் தண்டத்தொகை (குத்தம்) பெற்றுள்ளனர் ஆதிக்க சாதியினர்.


படிக்க: மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல் | நேரடி ரிப்போர்ட்


இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கவுண்டர் சாதியினர் மொத்தமாக ஒன்று சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயானம் கிடைக்க விடமாட்டோம் என்று சவால் விட்டுள்ளனர். அப்பகுதி கவுண்டர் சாதியினர் பெரும்பாலும் அதிமுக-வில் பொறுப்புகளில் இருந்துள்ளதால் அதிமுக ஆட்சி முழுவதும் கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளனர். இதனால் தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மறியல் உள்ளிட்டு பல போராட்டங்களை பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்கள் நடத்தி வந்துள்ளனர்.  போராட்டத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சமூக நலத்துறையில் இருந்து அதிகாரிகள் வந்து பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆதிக்கசாதி நபரான சரவணனின் நிலத்தில் இருந்து புறம்போக்கு நிலம் 17 சென்ட் அல்லாமல் மேலும் 33 சென்ட்-ஐ எடுத்துக் கொள்ள அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சரவணனின் தந்தை வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு சென்றுள்ளார் சரவணன். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சர்வையர் இந்த புறம்போக்கு நிலத்தை அளக்க வந்தபோது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாகக் கூறி சர்வையரை திருப்பி அனுப்பியுள்ளார் சரவணன்.

இந்த தீர்ப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட்டாட்சியர் அனுப்பிய குறிப்பாணையில் ஆக்கிரமிக்கப்பட்ட மயானப்பகுதிக்கான சர்வே எண் 102/1F1 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பில் சர்வே எண் 113/4 என வேறொன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குளறுபடி உள்ளதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னொரு பக்கம் 1991-இல் மயானத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலத்துக்கு சதுர முட்டு (அரசின் உத்தரவின் பேரில் நிலத்தை அளந்து குறிப்பிட்ட நிலப்பகுதியை சுற்றிலும் கற்களை நட்டு வைத்து விடுவது) அடித்த பின்பும், அதையும் மீறி சட்டவிரோதமாக அந்நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார் சரவணன். அதற்கு பின்பு வந்த ராசிபுரம் தாசில்தார்கள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


படிக்க: நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!


குறிப்பாக சமூக நலத்துறையைச் சார்ந்த வருவாய் அலுவலரான பாலசுப்பிரமணி (இவர் ஓய்வு பெற்றுவிட்டார்) என்பவர்தான் ஆதிக்கசாதியினருக்கு மிகவும் சாதகமாக இருந்து வேலை செய்தார் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போதே ஊருக்கு அருகில் இருக்கும் ஏரியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 85 சென்ட்-இல் இருந்து மயானத்துக்கு இடம் ஒதுக்க கோரியுள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள். இதையும் கவுண்டர் சாதியைச் சார்ந்த 3 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள காரணத்தால் அங்கேயும் மயானத்துக்கான இடத்தை எடுக்க முடியாமல் போயுள்ளது. இதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆதிக்கசாதியினருக்கு சாதகமாகவே செயல்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறை, கலெக்டர் அலுவலகம், முன்சீப், இம்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை திமுக எம்பி இராஜேஷ்குமார் என அனைவரிடமும் மனு கொடுத்து போராட்டங்களை முன்னெடுத்த பிறகும் கூட மயான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது.

சுடுகாடு மட்டுமல்ல, மக்கள் குடியிருப்பதற்கான இடத்தையும் பெறுவதற்கு இப்பகுதி ஆதிக்கசாதியினர் தடையாக இருந்து வந்துள்ளனர். அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் வீடுகள் கட்டிக் கொள்வதற்காக அரசால் புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆதிக்கசாதியைச் சேர்ந்த நபர் தனது நிலம் என்று ஏமாற்றி அருந்ததிய மக்களிடமே அதிகாரிகளின் துணையோடு ஏமாற்றி விற்றுள்ளார். அதிகாரிகள் ஆதிக்கசாதியினருக்கு சாதகமாக நடந்து கொண்டு செயல்பட்டதே தங்களுக்கான உரிமை கிடைக்கப் பெறாததற்கு முதன்மைக் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

சுடுகாடு மட்டுமல்ல, அக்கலாம்பட்டி பகுதி  அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனை, குடிநீர் என எந்த அடிப்படை வசதியையும் முறையாக செய்து கொடுக்காமல் அரசு புறக்கணித்து வரும் அவலம் நீடிக்கிறது.

எந்த ஒரு பிரச்சினையிலும் எக்காலத்திலும் அதிகார வர்க்கம் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக துணை நின்றதில்லை என்பதே வரலாறு. இடைவிடாத போராட்டங்களின் மூலமாகத்தான் தங்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளைக் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் பெற முடிகிறது. குறிப்பாக கொங்கு மண்டலப் பகுதியில் வாழும் அருந்ததிய மக்களின் நிலை மிக மோசமானதாகவே இருக்கிறது.

பார்ப்பனிய சாதி ஏற்றத்தாழ்வைப் பாதுகாக்கும் அதிகார வர்க்கத்திடமிருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளும், சுயமரியாதையும் எப்படிக் கிடைக்கும்?

எக்காலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கான உரிமையை ஆதிக்கசாதியினரும், அதிகாரிகளும் மறுத்து வருகின்றனர். ஆனாலும் தங்களின் உரிமையைப் பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர் அக்கலாம்பட்டி கிராம அருந்ததிய மக்கள். அவர்களுக்கு துணை நிற்க வேண்டியது ஜனநாயகத்தை விரும்புவோர் அனைவரின் கடமையாகும்.


வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க