நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!

நேதாஜி சுபாஷ் சேனை போன்ற ஆதிக்க சாதி சங்கங்களையும், பா.ஜ.க மற்றும் அதன் கைக்கூலிக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என நாம் முழங்க வேண்டிய தேவை இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி நெடுந்தெருவில் கடந்த ஒன்பதாம் தேதி சின்னத்துரை என்கிற பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவனை அவனுடன் ஒரே பள்ளியில் படிக்கும் தேவர் சாதி மாணவர்கள் மூவர் வீடு புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

கழுத்தை நோக்கி வீசிய அரிவாளை கையால் தடுத்ததால் வலது கையிலும், தோள்பட்டை, தொடை, கால் என உடலில் சுமார் 10 இடங்களில் வெட்டுப்பட்ட சின்னத்துரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறான்.

அண்ணனை வெட்டுவதை தடுக்க வந்த சின்னத்துரையின் தங்கையின் கைகளிலும் வெட்டி இருக்கிறார்கள். இதை பார்த்து  சின்னத்துரையின் தாத்தா அதிர்ச்சியில் இறந்து போனார்.

இந்தக் கொடூரத்தை கேள்விப்பட்டு தமிழகமே பதறியது. நெல்லை மாவட்டம் அதிர்ந்து போனது. தொடர்ந்து சில தினங்களாக அடுத்தடுத்து கொலைகள் மற்றும் கொலைவெறித் தாக்குதல்கள் நெல்லையை சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் பள்ளி மாணவர்கள் கைகளில் அரிவாள் ஏந்தி சக மாணவனை சாதியின் பெயரால் அரிவாளால் வெட்டியது, எல்லோர் மனதிலும் பேரதிர்ச்சியையும், அச்சத்தையும் உண்டு பன்னியது.

படிக்க : நாடாளுமன்றம் பஜனை மடம்: எதிர் கட்சிகளே மக்களிடம் செல்லுங்கள்! | தோழர் வெற்றிவேல்செழியன்

இந்த விசயத்தில் நாங்குநேரி பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் பயத்தில் உறைந்து கிடக்க தேவர் சாதி அமைப்புகள் தொலைக்காட்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும்  திமுக,  மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் ஆறு பேரை கைது செய்த போலீஸ் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தது.

மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வித குற்ற உணர்ச்சியோ பயமோ இன்றி இதில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டவர்கள் நடந்து கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே பெருந்தெருவை சுற்றியுள்ள மூன்று ஊர்களை சேர்ந்த  தாழ்த்தப்பட்ட  மக்கள்  சாதியின் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் வாழவும் வழி தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து போயிருக்கிறார்கள். தேவர் சாதி வெறியர்களால் உழைக்கும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்  என்றால் தேவர் சாதி மாணவர்களால் சின்னத்துரை  கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறான்.

பள்ளிக்கூடம் போகும்போது பேருந்தில் தங்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க சொல்லி தேவர் சாதி மாணவர்கள் மிரட்டுவது,  தங்களுடைய புத்தகப் பையை சுமக்க வைப்பது, சிகரெட் வாங்கி வரச் சொல்வது என தொடர்ந்து சின்னத்துரையை சாதியக் கண்ணோட்டத்தில் வேலை வாங்கி இருக்கிறார்கள்.

சின்னத்துரையிடமே அவனது அம்மாவை பற்றியும் அவதூறாக பேசியிருக்கிறார்கள். இதனால் மனம் உடைந்த சின்னத்துரை  பள்ளிக்கூடம் போகக் கூடாது என முடிவு எடுத்திருக்கிறான்.  ஊரை விட்டு செல்லவும் தயாராயிருக்கிறான்.  உறவினர் அழுத்தி கேட்கவே நடந்த கொடுமைகளை அவர்களிடம் கூறியிருக்கிறான்.

விசயம் பள்ளிக்கு தெரிய, சம்பந்தப்பட்ட மாணவர்களை விசாரிக்க முடிவு எடுத்திருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால் இந்த விசயம் கேள்விப்பட்டு, எங்கள் மீது புகார் கொடுக்க உனக்கு எவ்வளவு தைரியம் என ஆத்திரமடைந்த மாணவர்கள் சின்னத்துரையை வீடு புகுந்து வெட்டி உள்ளனர்.

சக மாணவனை உடன் படிக்கும் மாணவர்களே எவ்வாறு சாதிய வன்மத்தோடு வெட்டிக் கொலை செய்யும் அளவிற்கு போக முடிகிறது? எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு தைரியம் வருகிறது?  தேவர் சாதி அமைப்பான நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த மகாராஜன் மற்றும் சில தேவர் சாதி அமைப்புகள் தாக்குதலை கண்டிப்பதாக பேசிவிட்டு தேவர் சாதியினர் பாதிக்கப்படும்போது வராமல் இப்போது ஏன் வருகிறது என போராடுபவர்களையும், திமுகவையும் கேள்வி கேட்கிறார்கள்.

இதன் மூலம் ஒட்டுமொத்த தேவரின மக்களுக்கும் தாங்கள்தான் அத்தாரிட்டி என்பதாகவும் மேற்கொண்டு இம்மாதிரியான செயலை செய்யத் தூண்டும் விதமாக தார்மீக ரீதியான ஆதரவையும் கொடுக்கிறார்கள்.

“நாங்குநேரியில் பாண்டி பய கம்பெடுத்தா சங்கரன்கோவில் வரை சர்க்கார் வண்டி ஓடாதாம்..”, “போற்றிப் பாடடி பொண்ணே..” போன்ற பாடல்கள் தென் மாவட்டங்களில் ஒவ்வொரு தேவர் சாதி நிகழ்ச்சிகளிலும் போடப்படும்.  இது போன்ற பாடல்கள் தூபம் போட சாதிய அமைப்புகள் உடன் இருந்து வழிநடத்த மாணவர்கள் கையில் அரிவாள் ஏந்தும் நிலை இன்று வந்துள்ளது.

இதுவே போதுமானதாக இருக்கிறது. மேலும் புகார் அளித்த சின்னத்துரையை வெட்டிய மாணவர்களின் ஒருவரின் பாட்டி  கண்டித்ததாகவும், உரிய நேரத்தில் வராத போலீசை கண்டித்து மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் செய்த போது வெட்டிய மாணவர்களின் உறவினர்கள் வந்து விரட்டி விட்டதாகவும் நேரில் பார்த்தோர் கூறுகிறார்கள்.  புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இதற்கு காரணம் மாமன்னன் திரைப்படம் தான் என்று கூறுகிறார்.

நெல்லை பகுதி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனோ, இது சாதிய தாக்குதல் அல்ல, சாதாரணமாக மாணவர்களுக்கு இடையில் நடக்கும் ஈகோ பிரச்சனை தான் என்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட சின்னத்துரை, எது நடக்கக்கூடாது என்று நான் நினைத்து பயந்தேனோ அது  நடந்துவிட்டது என்று பிபிசிக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறான். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு  சிறுவன் அறிந்திருந்த சாதிய வன்மத்தை இவர்கள் அறியாதது போல நடிப்பது கேவலமானது.

படிக்க : நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆதரவாக ஜனநாயக முற்போக்கு சக்திகள் களத்தில் இறங்க தேவர் சாதி அமைப்புகளும், பா.ஜ.க.வும், அதன் கைக்கூலிக்  கட்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக களம் இறங்குகின்றன. இதை இணைத்துப் பார்க்கும்போது ஏதோ மிகப்பெரிய சதி திட்டம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தை கைப்பற்ற துடிக்கும் காவி கும்பலுக்கு இம்மாதிரியான சாதிய அமைப்புகளை வைத்துக்கொண்டு கலவரத்தை ஏற்படுத்துவது கைவந்த கலை. இதை எழுதிக் கொண்டிருந்த வேளையில் நெல்லை பகுதி பாளையங்கோட்டை அருகில் உள்ள கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த ஒருவரை கூலிப்படையினர் வெட்டி கொலை செய்ததாக மேலும் ஒரு தகவல் வந்திருக்கிறது.

பெரியார் மண், சமூக நீதி என்று பேசும் தமிழ்நாட்டில் தான் இத்தகைய சாதி படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்குள்ளாகவே திருநெல்வேலி பகுதியை சுற்றி பல்வேறு சாதிய கொலைகளும், தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில்  முத்தையா என்ற அருந்ததிய இளைஞர் காதல் பிரச்சினையால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் இதை மூடிமறைத்த போலீசு ஒரே சாதியை சேர்ந்தவர்களுக்கு இடையிலான பிரச்சனை எனக்கூறி இந்த குற்ற செயலில் ஈடுபடாத சிலரை கைது செய்து வழக்கை திசை மாற்றியது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இதை கண்டித்து முத்தையாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர். பத்து நாட்களாக நடந்த போராட்டத்தின் இறுதியில் முத்தையாவின் உடலை வாங்கவில்லை எனில் போலீசே அவரது உடலை எரித்து விடும் என  நீதிமன்றம் எச்சரித்தது.

முத்தையாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல அமைப்பின் தலைவர்கள் வந்திருந்த போதிலும் யாருக்கும் அமர்வதற்கு இருக்கை போடுவதற்கு கூட போலீசு அனுமதிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதிய படுகொலைகளை மூடிமறைப்பது, திசை மாற்றிவிடுவது, நீர்த்துப்போகச் செய்வது ஆகியவற்றை  இந்த அரசு கட்டமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது. இதை முத்தையாவின் படுகொலையின் மீதான அரசின் நடவடிக்கையின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இதன் அடுத்த கட்டமாக சின்னதுரையின் மீதான இந்த கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மென்மேலும் நடக்காமல் இருக்க இந்த அரசு கட்டமைப்பிடமே நாம் தீர்வை  தேட முடியுமா?

தாழ்த்தப்பட்ட மாணவரான சின்னதுரையின் மீதான இந்த தாக்குதலை கண்டித்து 12- 8- 2023 அன்று நெல்லை ரயில் நிலையம் அருகில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லை மண்டல இணைச் செயலாளர் தோழர் கின்ஷன் கலந்துகொண்டு தன்னுடைய கண்டன உரையை பதிவு செய்தார்.

அவரது பேச்சில், கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதையும், ஆதிக்க சாதிப்பிரிவில்  இருக்கும் ஜனநாயக சக்திகளையும் பிற உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைத்து எடுத்துச் செல்லும்போதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதையும் பதிவு செய்தார்.

ஜனநாயகப்படுத்தப்படாமல் பிற்போக்குத்தனமாக இருக்கும் இந்த சமூக அமைப்பே சாதிய சங்கங்கள் வளர்வதற்கு ஒரு விளைநிலமாக இருக்கிறது. சட்டத்தின் வழியாக மட்டுமே இதை மாற்ற இயலுமா? ஆதிக்க சாதிகள் பெரும்பாலும் சட்டத்தின் வழி நடப்போம், ஜனநாயகத்தை காப்போம் என கூறுவதில்லை. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும், இயக்கங்களுமே சட்டத்தின் வழி தீர்வு சட்டத்தை நடைமுறைப்படுத்து எஸ்.சி, எஸ்.டி ஆக்ட்டில் கைது செய்!  போன்ற முழக்கங்களை முன் வைக்கின்றன.

இதன் மூலம் இந்த சட்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்றாலும் வேறு மாற்று வழி தெரியாததால் இதையே கடைபிடிக்க வேண்டியதாக உள்ளது. ஆனால் இந்த சட்டத்தின் வழி இது சாத்தியமா? விதிவிலக்காக  ஒரு சில சம்பவங்களில் இந்த சட்டம் குற்றவாளிகளை தண்டித்து இருக்கிறது.

படிக்க : ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!

ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க இந்த சட்டம் உதவுமா? அப்படி இல்லையெனில் இந்த சட்டத்தின் வழியாக நிவாரணம் தேடுவது சரிதானா?  சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கு என்ன வழிமுறையை முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் கையில் எடுக்க வேண்டும் என்பதை ஆழமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.

நேதாஜி சுபாஷ் சேனை போன்ற ஆதிக்க சாதி சங்கங்களையும், பா.ஜ.க மற்றும் அதன் கைக்கூலிக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என நாம் முழங்க வேண்டிய தேவை இருக்கிறது. இக்கட்டுரையை படித்து தேவர் சாதியை சேர்ந்த யாரேனும் அனைத்து தேவர்சாதி மக்களும் சாதி வெறியர்களல்ல என சீறினால்  நம்மீது அவர்கள் கோபம் கொள்ள வேண்டியதில்லை.

மாறாக  அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த சாதி சங்கங்களை எதிர்த்து முறியடிப்பதும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடுவதுமே சரியான வழிமுறையாக இருக்கும்.

செங்குரல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க