ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!

சாதிவெறி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலும் தடைசெய்யப்படாத வரை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் குறையப்போவதில்லை.

0

தீண்டாமை ஒரு பாவச்செயல்; பெருங்குற்றம்; மனிதத்தன்மையற்ற செயல்” என்று கற்றுக்கொள்ள வேண்டிய பள்ளி மாணவர்களின் நெஞ்சில் “சாதிவெறி” எனும் நஞ்சை விதைத்து தீண்டாமையை ‘புனித’ செயலாக கருதக்கூடிய நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆதிக்கசாதி வெறியர்கள். அதன் வெளிப்பாடுதான், தாழ்த்தப்பட்ட மாணவர் சின்னத்துரை மீது ஆதிக்கசாதி வெறி பிடித்த மாணவர்கள் நடத்தியிருக்கும் கொலைவெறித் தாக்குதல்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கிராமத்தில் தலித் பறையர் சமூகத்தைச் சேர்ந்த அம்பிகாபதி தனது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திராசெல்வியுடன் வசித்துவருகிறார். வீட்டு வேலைகளுக்கு சென்றுதான் தன் பிள்ளைகளை படிக்க வைக்கிறார். அவரின் மகன் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஒன்பதாம் தேதி இரவு பத்து மணியளவில் சின்னத்துரையுடன் படிக்கும் சக மாணவர்களான சுப்பையா, செல்வரமேஷ், மற்றொரு மாணவர் என மூன்று பேர் சின்னத்துரையின் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கூர்முனையைக் கொண்டு குத்தியும் தாக்கியுள்ளனர். சின்னத்துரைக்கு தோள்பட்டை, கால் பாதம், கைகள் என 15 இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இரு கை எலும்புகளும் நொறுங்கியுள்ளன. தன் அண்ணன் மீதான தாக்குதலை தடுக்க முயன்ற சந்திராசெல்வியையும் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.

படிக்க : எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

அம்பிகாபதி மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும்  பாத்திமா ஆகிய இருவரும் கூச்சலிட்டதால், தாக்கிய மூவரும் தப்பித்து சென்றுவிட்டனர். தன் பேரன் தன் கண்முன்னாலேயே கொடூரமாக தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்த சின்னத்துரையின் தாத்தாவான கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சின்னத்துரையின் ரத்தம் அவரது வீட்டுக் கதவிலும், படிகளிலும், பாத்திரங்களிலும் மற்றும் தெருக்களிலும் படிந்து கிடப்பதை பார்க்கும் போதே நம் நெஞ்சம் பதறுகிறது. ஆதிக்கசாதி வெறி பிடித்த மாணவர்கள் சின்னத்துரையை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனே இக்கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். சின்னத்துரையின் கழுத்தையும் தலையும் குறிவைத்தே தாக்கியுள்ளனர். ஆனால் சின்னத்துரை அத்தாக்குதல்களை தன்னுடைய கைகளைக் கொண்டு தடுத்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்பிழைத்துள்ளார்.

தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சின்னத்துரையும் அவனது தங்கையும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய கொலைவெறித் தாக்குதலில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டிருப்பதும் அதற்கான காரணமும் தமிழ்நாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடம் சின்னத்துரை, தன் மீது சாதிய வன்கொடுமை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுப்பையா மற்றும் செல்வரமேஷ் ஆகிய இருவர் மீதும் புகார் அளித்ததே இத்தாக்குதலுக்கான காரணம் ஆகும்.

சுப்பையா மற்றும் செல்வரமேஷ் ஆகிய இருவரும் சின்னத்துரையை சாதிரீதியாக ஆபாசமாக பேசியும், இழிவாக நடத்தியும் உள்ளனர்; பணத்தை மிரட்டிப் பிடுங்கியுள்ளனர்; சிகரெட் வாங்கிவரச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்து பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த சின்னத்துரையை, அவனது ஆசிரியர்கள் அழைத்து நடந்ததை விசாரித்து ஆறுதல் கூறி சின்னத்துரையிடம் புகார் கடிதத்தை எழுதி வாங்கியுள்ளனர்.

“பறையர் சாதியைச் சேர்ந்த நீ ஆதிக்கசாதியைச் சேர்ந்த எங்கள் மீதே புகார் கொடுக்க துணிந்து விட்டாயா?” என்ற சாதிவெறித் திமிரிலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர், சுப்பையாவும் செல்வரமேசும். “பறத் தேவடியா பயலே எங்களுக்கு எதிராக புகார் கொடுப்பியா” என்று கத்திக் கொண்டே தலையிலும் கழுத்திலும் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அந்த அளவிற்கு ஆதிக்கசாதி வெறியர்களால் அவர்களின் நெஞ்சில் “சாதி வெறி” எனும் நஞ்சு விதைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களான இவர்கள், இத்தாக்குதலை ஒரு கூலிப்படையைப் போல திட்டமிட்டு நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து செல்வதற்கான வழிகளை குறித்து வைத்துக் கொள்வதற்காக மாலை 6 மணி அளவில் செல்வரமேஷ், தன் பாட்டி மற்றும் சித்தப்பாவை அழைத்துக்கொண்டு சின்னத்துரை வீட்டிற்கு சென்றுள்ளார்.

கடந்த பத்தாம் தேதி போலீசு, சின்னத்துரையின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மூன்றுபேர் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த செல்வதுரை, வான்முத்து, கல்யாணி ஆகிய மூவர் என ஆறு பேரை கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பதினேழு வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். தற்போது மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொடூர தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் காவல்நிலையத்தில் சிறிதளவும் குற்றவுணர்ச்சி இல்லாமல் சிரித்து விளையாடிக் கொண்டிருந்ததாய் தன்னுடைய ஆதங்கத்தை முகநூல் வீடியோவில் வெளிப்படுத்துகிறார், சமூக செயற்பாட்டாளரான எவிடென்ஸ் கதிர். இச்சிறுவர்கள் மட்டுமல்ல, மாமன்னன் படத்தில் வரும் ரத்தினவேலு கதாபாத்திரத்தை கொண்டாடும் ஆதிக்கசாதி வெறியர்கள் இக்கொடூர தாக்குதலுக்காகத் துளியும் வருத்தப்படப் போவதில்லை.

திருநெல்வேலி மாவட்டமே ஆதிக்கசாதி வெறியர்களின் கோட்டையாகத் தான் உள்ளது. சின்னத்துரை மீது நடந்த தாக்குதல், கடந்த மூன்று மாதத்தில் நாங்குநேரியில் நடந்த மூன்றாவது தாக்குதல் என்று கூறுகிறார், சின்னத்துரையின் பெரியப்பா தளவாய் மணி. இக்கொடுமைகளை சகித்துக்கொள்ள முடியாமல் 50 குடும்பங்கள் கிராமத்தை விட்டு வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டதாக வருத்தத்துடன் கூறுகிறார்.

மேலும், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் மட்டுமல்லாமல், திருநெல்வேலி மாவட்டத்தில் பத்து பள்ளிகளில் இதுபோன்ற சாதிரீதியிலான வன்கொடுமைகள் நடந்துவருவதைப் பற்றி கண்காணித்து வருவதாக கூறுகிறார், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்.

படிக்க : வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தது, மதுரை திருமோகூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது எனத் தமிழ்நாடு முழுவதும் கொட்டமடித்து வருகிறார்கள், ஆதிக்கசாதி வெறியர்கள். தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதிரீதியான மோதல்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த மூன்று மாதங்களில் 500 மோதல்கள் அதிகரித்து இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார், எவிடென்ஸ் கதிர்.

இந்த மோதல்களில் பெரும்பாலானவை ஆதிக்கசாதி வெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊருடுவி உள்ளதன் விளைவே ஆகும். தமிழ்நாட்டில் மதக்கலவரத்தின் மூலம் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்க முடியாத ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரக் கும்பல், மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்துவதன் மூலம் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிக் கொள்ள விழைகிறது.

எனவே, மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களிடமும் சாதி வெறியை விதைத்து, சாதிவெறி தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலும் தடைசெய்யப்படாத வரை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் குறையப்போவதில்லை.

ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் சமூகப் புறக்கணிப்பு செய்வோம்! ஆதிக்கசாதி வெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் தடை செய் என வீதிதோறும் முழங்குவோம்!

பிரவீன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க