எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்! நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

அனிதா முதல் ஜெகதீசன் வரை நம்மிடம் இரங்கல் அஞ்சலியைக் கோரவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் அநீதிக்கு எதிராக, நம் மீது நீட்டை திணித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, கொஞ்சமாவது சுரணை கொள்ளுங்கள் என்பதைதான்!

எங்களை மன்னித்துவிடு ஜெகதீஸ்வரன்!
நாங்கள் சுரணையற்றவர்களாக இருக்கிறோம்!

னிதா தொடங்கி ஜெகதீசன்வரை இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொலைகார நீட் தேர்வுக்கு பலிகொடுத்துள்ளோம். ஆனால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறது. இரண்டுமுறை சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறோம். இனி நமது கையில் என்ன இருக்கிறது, ஜனாதிபதி இறுதி முடிவு அறிவிக்கும்வரை சாவுகளை எண்ணிக் கொண்டிருப்போம் என்று சுரணையற்று இருக்கிறது தமிழ்நாடு.

நீட் தேர்வை விரும்பாவிட்டாலும், “வேறுவழியில்லை, நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கேற்ப நம்மை தகவமைத்துக் கொள்வோம்” என்று ஒருபிரிவு நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தயாராகிவிட்டார்கள். நீட்டை ஒழித்துக் கட்டவேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த நம்மில் பலர், “அரசு கொடுக்கும் நீட் தேர்வு பயிற்சியில் அதிக மாணவர்களைச் சேர்க்க வேண்டும்; 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு விரிவுபடுத்த வேண்டும்” என்று இடைக்கால கோரிக்கைகளை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் நிலைமைகளுக்கேற்ப சமயோசிதமாக செயல்படுவதாக நாம் கருதிக் கொள்ளலாம். ஆனால், இது நமது சுரணையற்ற நிலையையே காட்டுகிறது என்பதை நீட் தேர்வால் கொல்லப்படும் ஒவ்வொரு மாணவனின் மரணமும் காட்டுகிறது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீசனின் தற்கொலையைத் தொடர்ந்து, துயரம் தாங்காத அவரது தந்தை செல்வசேகரனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று மகன், அடுத்த நாள் தந்தையும் உயிரிழந்துள்ளார்கள்.

படிக்க : மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!

“என்ன இருந்தாலும், தற்கொலை தீர்வாகாது, ஜெகதீசன் செய்தது தவறு” என்று நம்மில் பலர் கருதக்கூடும். மாணவி அனிதாவின் தற்கொலையை ஒட்டியும் இதேபோன்ற கருத்துகள் பேசப்பட்டதுதான். இத்தகைய கருத்துகள் எல்லாம் “சுரணையற்றவர்களின் புத்திசாலித்தனமான வாதங்கள்” என்றே சொல்லவேண்டும். வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால், ஜெகதீசன் போன்ற மாணவர்களின் தற்கொலைக்கு நீட் மட்டுமே காரணமல்ல, இதுபோன்று நியாயவாதங்களைப் பேசும் நாமும்தான் காரணம். “இந்த கொலைகார நீட்டை இன்னமும் அனுமதித்து வருகிறீர்களே, என் சாவுக்குப் பிறகாவது உங்களுக்கு சுரணைவரட்டும்” என்று தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அனைத்து மாணவர்களுமே கருதியிருக்கக் கூடும்.

ஒன்றியத்தின் ஆதிக்கம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதை தமிழ்நாடு எதிர்த்து நிற்கும் என்று பார்க்கப்படுகிறது. அது இந்தி எதிர்ப்பில் மட்டுமல்ல, நீட் எதிர்ப்பிலும் உறுதி குலையாது என்று எதிரிகளும் கருதுகிறார்கள். ஆனால், “அந்த நம்பிக்கையை ஏன் பொய்யாக்குகிறீர்கள், ஆதிக்க நீட்டை விரட்டியடிக்காமல் இன்னமும் ஏன் அமைதி காக்கிறீர்கள்?” – நீட் தேர்வால் ஒவ்வொரு மாணவர் தற்கொலைசெய்துகொள்ளும் போதும், அந்தத் தற்கொலை, தமிழ்நாட்டைப் பார்த்து எழுப்பும் கேள்வி இதுதான்!

“நேற்று அனிதா, இன்று என் நண்பன் ஜெகதீசன், நாளை உங்களுடன் இருக்கும் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். அனிதாவின் வலி இப்போதுதான் எங்களுக்குப் புரிகிறது” என்று கதறியழுகிறார் ஜெகதீசனை இழந்த அவரது நண்பர் ஃபயாஸ்.

ஜெகதீசனின் தந்தை செல்வசேகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட ஜெகதீசனின் நண்பர்கள் பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளனர். “இன்னும் எத்தனை ஜெகதீசனை, எத்தனை அனிதாவை இழக்கப்போகிறோம்?” இவை நம்மை நோக்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் நோக்கியும் எழுப்பும் கேள்விகள்தானே!

ஜெகதீசனுக்காக வாதாடும் அவனது நண்பர், சி.பி.எஸ்.சி பள்ளியில் படித்தவர், நீட் தேர்வுக்காக கோச்சிங் செண்டருக்குப் போய் படித்தும், 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால், 25 லட்சம் செலவுசெய்து ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கியிருக்கிறார். “எனது அப்பா பொருளாதாரத்தில் கொஞ்சம் மேலே இருந்ததால், நான் எம்.பி.பி.எஸ். சேர்ந்துவிட்டேன். ஆனால் அந்த பணம் இல்லாததால் என் நண்பன் ஜெகதீசனை நாங்கள் இழந்துவிட்டோம்” என்று கதறியழுகிறார் ஃபயாஸ்.

ஜெகதீசனின் தற்கொலைக்கு ஒருநாள் முன்பு, ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பார்த்து ஜெகதீசனின் நண்பர் ஃபயாஸைப் போன்றே ஒரு கேள்வியை எழுப்பினார் ஒரு மாணவரின் தந்தை.

“நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கொடுப்பீர்கள்” என்று அவர் எழுப்பிய கேள்விக்கு “நானாக இருந்தால், ஒருபோதும் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க மாட்டேன்” என்று திமிராகப் பதிலளித்துள்ளார் ஆர்.என்.ரவி. “நான் ஒன்றிய அரசு ஊழியராக இருந்ததால், என் மகளைப் படிக்கவைக்க முடிந்தது; நீட் தேர்வால் பணம் இருப்பவர்கள் மட்டுமே படிக்க முடிகிறது என்றும், கோச்சிங் செண்டர்களுக்குதான் லாபம்” என்றும் அவர் அடுத்தடுத்த கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும்போதே அவரிடமிருந்த மைக் பறிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேவந்து பேட்டியளித்த அம்மாசையப்பன் என்ற அந்த தந்தை அளித்த பேட்டியில், “அங்கிருந்த அதிகாரிகள் கூட ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அங்கு வந்திருந்த ஏதோ ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தினர்தான் என்னை சுற்றிவளைத்துக் கொண்டனர். அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் உங்க பசங்கள டாக்டருக்கு படிக்க வைக்கிறீங்க? ஆளுநரிடம் கேள்வி கேட்கிற அளவுக்கு தைரியமா? என்றெல்லாம் என்னைக் கேட்டார்கள்” என்றார்.

படிக்க : நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!

லட்சங்களை கட்டி நீட் பயிற்சிவகுப்புச் செல்ல முடிந்த, ஓரளவு பொருளாதார வசதி படைத்தவர்கள்கூட, இந்த கொள்ளைக்கார தேர்வை ஏன் அனுமதிக்க வேண்டும் என்று கேள்வியெழுப்பும் வகையில், மாணவர்களின் தொடர் தற்கொலைகள் நமக்கு ஆத்திரமூட்டுகின்றன. அப்படியிருக்க, இனியும் இந்த அநீதியை எப்படி தமிழ்நாடு சகித்துக் கொண்டிருக்க முடியும்?

மாணவர் ஜெகதீசனின் தற்கொலை தொடர்பாக, “குழுந்தைகளைக் கல்வி, மதிப்பெண்களை வைத்து ஒருவரோடு ஒருவர் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், குழந்தைகளிடம் நேர்மறையான எண்ணங்களை விதைப்போம்” என்று உபதேசம் செய்து அறிக்கைவிட்டிருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

அப்பட்டமாக கொலைகார நீட் தேர்வை நியாயப்படுத்தியும், மாணவர்களின் தற்கொலையை கொச்சைப்படுத்தியும் வரும் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட காவிக் கும்பலை, தமிழ்நாட்டில் நிம்மதியாக இருக்க அனுமதிக்கிறோம் என்றால் அது ஜெகதீசனுக்குச் செய்கின்ற துரோகம் அல்லவா! எத்தனை பேர் செத்தாலும் நமக்கு சுரணை வரவில்லை என்று பொருளல்லவா!

அனிதா முதல் ஜெகதீசன் வரை நம்மிடம் இரங்கல் அஞ்சலியைக் கோரவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் அநீதிக்கு எதிராக, நம் மீது நீட்டை திணித்துவரும் பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, கொஞ்சமாவது சுரணை கொள்ளுங்கள் என்பதைதான்!

வாசு

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க