மீண்டுமொரு இனக் கலவரத்திற்கு தயாராகும் ஹரியானா!

ஆகஸ்டு 13 ஆம் தேதி, சர்வ இந்து சமாஜ் என்ற பெயரில் மகா பஞ்சாயத்து கூடியது. இக்கூட்டத்தில் அரசு அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ ஆகஸ்டு 28 ஆம் தேதி மீண்டும் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

டந்த ஜூலை 31 ஆம் தேதி ஹரியானா நூ எனும் மாவட்டத்தில் பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய இந்துத்துவ அமைப்புகள் சேர்ந்து நடத்திய பிரிஷ் மந்தல் ஜலபிக்‌ஷேக் யாத்திரையில் முஸ்லிம் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லிம்கள் வீடுகள், கடைகள் இந்துத்துவ குண்டர் படையால் சூறையாடப்பட்டன.

இது இந்துக்களின் ஊர்வலத்தில் நடத்தப்பட்ட கலவரம் என்றும் இரு பிரிவினருக்கிடையிலான கலவரம் என்றும் பொதுஜன ஊடகங்கள் திரித்து வந்தாலும் இம்மதக் கலவரத்துக்கான முன்தயாரிப்பு பணிகள் இந்துத்துவ சங்கப் பரிவாரக் கும்பலால் முன்பே மேற்கொள்ளப்பட்டதுதான்.

இக்கலவரம் இதோடு முடியவில்லை, மீண்டுமொரு யாத்திரையை நடத்தப்போவதாக இந்துத்துவா குண்டர்களின் மகா பஞ்சாயத்து அறிவித்திருக்கிறது.

படிக்க : பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!

ஜூலை 31 அன்று யாத்திரை ஊர்வலம் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, முஸ்லிம் இருவரை உயிரோடு எரித்து கொன்ற பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த மோனு மானேசர் என்பவன், “நான் அங்கே வருகிறேன்” என்று முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் வகையில் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தான்.

அதேபோல் உள்ளூர் இந்துத்துவ அமைப்பின் தலைவனான பிட்டு பஜ்ரங்கி உள்ளிட்ட குண்டர்களும் முஸ்லிம்களை வன்முறைக்கு தூண்டும் விதமாக “உங்க மாமன் (மோனு மானேசர்) வரான் டா” என்பது போன்ற வீடியோக்களை பதிவிட்டிருந்தனர்.

ஊர்வலம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கலவரம் தொடங்கியது. கலவரத்தில் காணப்பட்டவர்கள் என ரோஹிங்கியா முஸ்லிம்களை அடையாளங்காட்டும் ஹரியானா அரசு ரோஹிங்கியா முஸ்லிம்களின் முகாம்களை புல்டோசர்களை கொண்டு இடித்து தரைமட்டமாக்கியது.

ஆனால் யாத்திரை நடந்த நேரத்தில் அருகில் இருந்த மலைகளுக்கிடையில் விஷ்வ ஹிந்து பரிஷத் பனியன்கள் அணிந்தவர்களால்தான் துப்பாக்கிகளால் குறிபார்த்து சுடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

யாத்திரையில் நடத்தப்பட்ட இந்த கலவரத்திற்கு முன்பும் பின்பும் சங்கப் பரிவார அமைப்புகள் கொண்ட மகா பஞ்சாயத்து கூடி நாட்டை  ‘கைப்பற்ற வந்த’ ரோஹிங்கியா முஸ்லிம்களையும் பிற நாட்டை சேர்ந்தவர்களையும் நமது நிலத்தில் இருந்து அப்புறப்படுத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

கலவரத்திற்கு பிறகு கடந்த ஆகஸ்டு 6 ஆம் தேதி கூடிய மகா பஞ்சாயத்து குறிப்பிட்ட சில கிராமங்களில் முஸ்லிம் வியாபாரிகள் நுழைய தடை விதித்தும் தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு நிபந்தனையும் விதித்திருக்கிறது.

இது நடத்தப்பட்டு ஒருசில நாட்களில் மீண்டும் ஆகஸ்டு 13 ஆம் தேதி, சர்வ இந்து சமாஜ் என்ற பெயரில் மகா பஞ்சாயத்து கூடியது. இக்கூட்டத்தில் அரசு அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ ஆகஸ்டு 28 ஆம் தேதி மீண்டும் யாத்திரையை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் அரசுக்கு சில கோரிக்கைகளை விடுப்பதுபோல அப்பட்டமாக முஸ்லிம் விரோத அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மகா பஞ்சாயத்தின் கோரிக்கைகளில் சில.

  • நூ மாவட்டத்தில் நடத்தப்பட்ட கலவரம் குறித்தான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரிக்க வேண்டும். ஹரியானா உள்ளூர் போலீசு விசாரிக்கக் கூடாது.
  • இந்து மக்களின் வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தி அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்.
  • நூ மாவட்டத்தை பசு வதையில்லா மாவட்டமாக அதாவது பசுவளைய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
  • இந்துக்கள் அவர்களின் ‘தற்காப்பு நலனுக்காக’ ஆயுதங்களை வைத்திருக்க அனுமதியளிக்க வேண்டும்.
  • நூ மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலவரம் தொடர்பான வழக்குகளை மாவட்டத்திற்கு வெளியே உள்ள நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும். உள்ளூர் நீதிமன்றத்தில் நீதிக் கிடைக்காது.
  • நூ பகுதியில் ஆர்.ஏ.எஃப் படையை நிரந்தமாக நியமிக்கவேண்டும்.
  • கலவரத்தில் உயிரிழந்த இந்து குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். அதேபோல் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட வேண்டும்.
  • ரோஹிங்கியா முஸ்லிம் உள்ளிட்டு வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்களை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதை அமல்படுத்த அரசு சட்டம் இயற்ற வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மகா பஞ்சாயத்து கூட்டத்திற்கு எதிராக ஆகஸ்டு 11 ஆம் தேதி, ஹரியானா விவசாயிகள் 2,000 பேர் ஹிசார் காப் பஞ்சாயத்தை கூட்டியிருக்கின்றனர். இந்த கூட்டத்தில் நூ  மாவட்டத்தில் நடத்தப்பட்ட மத கலவரத்தை பற்றியும், டிக்ரி மகா பஞ்சாயத்து முடிவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நூ மாவட்டத்தில் நடத்தப்பட்ட  மத கலவரத்தை முதலில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதில், “ ஹரியானா முஸ்லிம்களை காப்பது காப் பஞ்சாயத்து உறுப்பினர்களான அனைத்து விவசாயிகளின் கடமை. இவர்களை மீறி, நூவில் எந்தவொரு முஸ்லிம் மீது யாரும் கைகூட வைக்க முடியாது.

படிக்க : பாசிஸ்டுகளின் பஜனை மடத்தை விட்டு வெளியே வாருங்கள்!

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு காப் பஞ்சாயத்தே பொறுப்பு. சில கிராமங்களில் முஸ்லிம் வியாபாரிகளை நுழைய தடை விதித்திருப்பது சட்ட விரோதமானது. இதுபோன்ற பஞ்சாயத்துகளில் எந்த விவசாயியும் கலந்து கொள்ளக் கூடாது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த காப் பஞ்சாயத்துகளில் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்த விவசாயிகள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் குக்கி இன மக்களை ஒடுக்க கஞ்சாவை ஒழிக்கப்போவதாகவும், ஹரியானாவில் வெளிநாடுகளில் இருந்து தஞ்சம் புகுந்தவர்களால் நாட்டிற்கு ஆபத்து என்றும், கோவாவில் போர்ச்சுக்கீஸ் கலாச்சாரத்தை ஒழிக்கப் போவதாகவும் கூறிக்கொண்டு ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் தன்மை கேற்ப அடித்தளத்தில் ஊடுருவி வரும் இந்துத்துவ சங்கப் பரிவார அமைப்பு, இதன்மூலம் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான இனபடுகொலையை திட்டமிட்டு நடத்திவருக்கிறது. இதனை முறியடிக்க வேண்டுமானால் பாசிச எதிர்ப்பு சக்திகள் களத்தில் இறங்க வேண்டும்.

  • ஆதினி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க