பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் “ஸ்டண்ட்” பலிக்காது!

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியிலும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் பேரணியும்  நடத்திகொண்டிருக்கும் எதிர்கட்சிகளுக்கு பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்திற்குள் “ஸ்டண்ட்” அடிக்க முடியாது என்பது நன்றாக தெரியும்.

டந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றோடு நிறைவடைந்தது. நாடாளுமன்றத்திற்கு வராத எம்.பி.க்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் மோடி இந்த கூட்டத்தொடரிலும் கலந்துகொள்ளவில்லை. முதல் நாள் மட்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்து சென்ற மோடி அதற்கு பிறகு நாடாளுமன்றம் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை.

ஆனால், இந்தியாவின் ஓர் மாநிலமான மணிப்பூர் மூன்று மாதங்களுக்கும் மேலாக பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது நாட்டின் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து தார்மீக விளக்கம் அளிக்காமல் இருந்தது நாட்டு மக்களை முகம் சுளிக்க வைத்தது. மோடி எவ்வளவு பெரிய “கல்லுளி மங்கன்” என்பதை மணிப்பூர் சம்பவம் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியது. இதற்கு ‘தீர்வாக’ மோடியை நாடாளுமன்றத்திற்கு வர வைக்க மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தன, எதிர்க்கட்சிகள்.

நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசுக்கு இருக்கும் பெரும்பான்மை காரணமாக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிச்சயம் தோல்வி அடையும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்திருந்தபோதிலும், மோடியின் திருவாயால் மணிப்பூரைப் பற்றி பேச வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சிகளால் விளக்கம் தரப்பட்டது.

ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குப் பதிலளிக்காமலேயே வாக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் அப்படியே பேசினாலும் கூட எதிர்க்கட்சிகளின் முயற்சியைக் கோமாளித்தனமாக மாற்றும் வகையில் மோடியின் உரை அமையும் என்றும் நாம் முன்பே கூறியிருந்தோம்.


படிக்க: அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!


மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கான தேதி கூட்டத்தொடரின் கடைசி நாட்களிலேயே ஒதுக்கப்படும் என்பதும்; அதில் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி பேசாமல் எதிர்க்கட்சிகளை விமர்சித்து நெஞ்சு புடைக்க உரையாற்றுவார் என்பதும் முன்பே கணிக்கப்பட்டது தான். அதற்கு ஏற்றவாறே ஆகஸ்ட் 11 ஆம் தேதியோடு (நேற்றோடு) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் நிலையில், ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய கடைசி நாட்களே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே ராகுல் காந்திக்கு பறிக்கப்பட்ட எம்.பி. பதவி திரும்பக் கிடைக்கவே நம்பிக்கையில்லாத்தீர்மானம் மீதான விவாதம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.  காங்கிரஸ் கட்சி முதலில் ராகுலைப் பேச வைத்து விவாதத்தைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டது. ராகுல் எதிர் மோடி (Rahul Vs Modi) என்று ஊடகங்களால் இவ்விவாதம் ஊதிப் பெருக்கப்பட்டது ஆனால், ஆகஸ்ட் 8 ஆம் தேதி மோடியின் வருகைக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் காத்துக்கொண்டிருக்க. நாடாளுமன்றத்திற்கே வராமல் எதிர்க்கட்சிகளின் தலையில் இடியை இறக்கினார், மோடி.

நாடளுமன்றதிற்கு வராத மோடியை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட அத்தனை பிரயத்தனங்களும் பாழாய்ப் போனது. அதிலும், விவாதம் நடக்கும் அவைக்குப் பக்கத்து அறைகளுக்கு வந்து பா.ஜ.க எம்.பி.க்களை சந்தித்து பேசிவிட்டு சென்ற மோடி, விவாதம் நடக்கும் மக்களவைக்கு மட்டும் வராமல் தவிர்த்தது மோடியின் பாசிச தன்மையையும் அதனை நாடாளுமன்ற முறைப்படியே வென்றுவிடலாம் என்று எண்ணிய எதிர்க்கட்சிகளின் பரிதாப நிலைமையையும் வெளிப்படுத்தியது.

மோடி அவைக்கு வராத நிலையில் வேறுவழியின்றி எதிர்க்கட்சிகள் விவாதத்தை தொடங்கின. இந்தியாவில் நடந்த 20க்கும் மேற்பட்ட நம்பிக்கையில்லாத்த் தீர்மானங்களில் நாட்டின் பிரதமர் இல்லாமல் விவாதம் நடந்தது இதுவே முதன்முறை. இதில் வி.சி.க எம்.பி தொல்.திருமாவளவன், தி.மு.க எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன்  சவுத்ரி மற்றும் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மௌவா மொய்த்ரா போன்றோரின் உரைகள் முக்கியத்துவமுடையதாக ஊடகங்களால் விவாதிக்கப்பட்டன.

ஆனால், அவர்கள் பேசி முடித்த உடனேயே அவர்கள் பேசியதில் பல கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக, விவாதத்தின் இரண்டாவது நாளில் பேசிய ராகுலின் உரை அனைவராலும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அவரது உரையிலிருந்து 23 பகுதிகள் நீக்கப்பட்டு, உரை வெட்டி சுருக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் (அடிமை) தொலைக்காட்சியான சன்சத் டி.வி  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசிய போது அவர்களைக் காட்டாமல் அவைத் தலைவரையும் பா.ஜ.க எம்.பி.க்களையும் காட்டிக்கொண்டிருந்தது. சான்றாக, ராகுல் பேசிய போது 40 சதவிகிதத்திற்கும் குறைவான நேரம் மட்டுமே அவர் சன்சத் டி.வி.யால் தொலைக்காட்சியில் காட்டப்பட்டார். மற்ற நேரங்களில் அவைத்தலைவர் ஓம் பிர்லாவும், ஸ்மிருதி இராணியும் காட்டப்பட்டனர்.


படிக்க: தேர்தல் ஆணையர்கள் மசோதா: தேர்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம்!


இதையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மௌவா மொய்த்ரா மூன்றாவது நாள் அவைக்கு வருவதற்கு முன்பு ட்வீட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், ”நான் இன்று நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், நான் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற புடவை அணிந்துள்ளேன், நான் பேசும் போது சன்சத் டி.வி வேறு எதையாவது காட்டிக்கொண்டிருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, விவாதத்தின் மூன்றாவது நாளின் இறுதியில் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவருக்கு நிகரான பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மக்களைவை குழு தலைவரும் எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய போது, “மகாபாரதத்தில் திருதராஷ்டிரன் குருடனாக அமர்ந்திருந்தபோது  திரௌபதியின் ஆடைகள் பறிக்கப்பட்டன; அதே போல் இன்று நம் அரசனும் குருடனாக அமர்ந்திருக்கிறார்” என்று மோடியைக் குறிப்பிட்டுப் பேசியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய ஆளும் பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களுக்கே உரிய பாசிச நயவஞ்சகத்துடன் பொய்யையும் புரட்டையும் அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் “அதானி அதானி” என்று முழங்க, “அதானி” என்ற சொல்லை ஒருமுறை கூட பிரயோகிக்காமல் மோடி  எப்படி வீர தீர  உரை நிகழ்த்தினாரோ அதைப் போலவே பா.ஜ.க. எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்துப் பேசாமல் எதிர்க்கட்சிகள் மீது சேற்றை வாரி அடித்துக்கொண்டிருந்தனர்.

ஸ்மிருதி இராணி, நிர்மலா சீதாராமன், அமித்ஷா என அனைவருமே இந்த பாசிச அணுகுமுறையைக் கையாண்டனர். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கும் வைத்த வாதத்திற்கும் பதில் அளிக்காமல் எதிர்க்கட்சிகளைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். குறிப்பாக எம்.பி.க்கள் பலரும் திட்டமிட்டே தி.மு.க.வை தாக்கிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது நாள் மாலை 5 மணியளவில் அவைக்கு தரிசனம் தந்தார் மோடி. பா.ஜ.க எம்.பி.க்களை போலவே கொஞ்சமும் பொருத்தமின்றி மிகவும் அலட்சியத்தோடு தனது பதிலுரையை தொடங்கினார். “எதிர்க்கட்சிகள் நோ பால் போட்டுக்கொண்டிருக்கின்றனர், நாங்கள்  சிக்சர் அடித்துக்கொண்டிருக்கிறோம்”, “எனது மூன்றாவது பதவிக் காலத்தில் இந்தியா உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும்”, “ஏழைத் தாயின் மகன் பிரதமரானதை காங்கிரஸால் ஜீரணிக்க முடியவில்லை”, “எதிர்க்கட்சிகளின் பொய்களுக்கு மத்தியிலும் எல்.ஐ.சி வளர்ச்சியடைந்தது” என்று தேர்தல் பிரச்சார உரை போன்றதொரு உரையை நிகழ்த்தி தனது கொடூர பாசிச முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டிக் கொண்டார்.

இந்த உரைக்கு இடையில் பல கேலிகளும் நையாண்டிகளும் வேறு இடம்பெற்றது. மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருப்பதையொட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் பிரதமரின் உரை எதிர்க்கட்சிகளை எள்ளி நகையாடுவதிலேயே கவனம் செலுத்தியது. அவரின் உடல்மொழியும், பாவனையும், பேச்சு தொனியும், சிரிப்பும் மணிப்பூர் மக்களையும், நாட்டு மக்களையும், எதிர்க்கட்சிகளையும் ஏளனம் செய்தது.


படிக்க: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!


ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் “மணிப்பூர்” என்ற வார்த்தையை மட்டும் மோடி உச்சரிக்கவே இல்லை. கிட்டத்தட்ட ஒன்றரை மணி  நேரத்திற்கும் மேலாகப் பொறுத்துப் பார்த்த எதிர்க்கட்சிகள் “மணிப்பூர் மணிப்பூர்” என்று முழக்கமிட்டுவிட்டு அவையை விட்டு வெளிநடப்பு செய்தன.

அதன் பிறகும் மோடியின் உரை தொடர்ந்தது. கிட்டதட்ட  2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு (160 நிமிடங்கள்) மோடி உரையாற்றினார். மோடி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நீண்ட உரை என்ற ‘சாதனை’யை இவ்வுரை பெற்றது. ஆனால், அவ்வளவு நீண்ட உரையில் மோடி மணிப்பூரைப் பற்றிப் பேசியது 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரம் தான். கிட்டத்தட்ட மாலை 5 மணிக்குப் பேசத் தொடங்கிய மோடி “மணிப்பூர்” என்ற வார்த்தையை உச்சரிக்க 6:42 மணி ஆனது. அதுவும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் வேறுவழியின்றி கண்த்துடைப்புக்காக பேசினார். அந்த சொற்பமான நேரத்திலும் மணிப்பூர் வன்முறைக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என்று சொல்லி முடித்தார்.

மோடியின் இந்த ‘பதிலை’ கேட்க தான் எதிர்க்கட்சிகள் இவ்வளவு முயற்சிகளையும் செய்தன!

மோடியை நாடாளுமன்றத்திற்கு வர வைக்க வேண்டும், அவரை மணிப்பூர் குறித்துப் பேச வைக்க வேண்டும் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருங்கியவையே எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள். ஆனால், அதை செய்யக்கூட பாசிஸ்டுகள் தயாராக இல்லை. தனது உரையைத் தவிர்த்து எதிர்க்கட்சிகளின் உரைக்காக நாடாளுமன்றத்திற்கு வரவும் மோடி தயாராக இல்லை, அந்த உரையில் மணிப்பூரைப் பற்றிப் பேசவும் அவர் விரும்பவில்லை.

மோடியைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புளித்துப் போன பழைய அவதூறுகளைப் பிரசாரம் செய்ய எதிர்க்கட்சிகளால் உருவாக்கித் தரப்பட்ட ஓர் வாய்ப்பு மட்டுமே. அதனைக் கடந்து எதிர்க்கட்சிகளின் எந்த ‘விருப்பத்தையும்’ நிறைவேற்ற மோடி தயாராக இல்லை.

ஆனால் எதிர்க்கட்சிகளோ ஏற்கெனவே புளுத்து நாறிக் கொண்டிருக்கும், அதுவும் தற்போது பாசிஸ்டுகளின் கரங்களில் இருக்கும் இந்திய நாடாளுமன்ற ‘ஜனநாயக’த்திற்குள் சென்று பாசிஸ்டுகளை வழிக்கு வரவைக்கப் போகிறோம் என்று கிளம்புகின்றன, ஆனால், ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியிலும் மெழுகுவர்த்தி ஊர்வலமும் பேரணியும்  நடத்திக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பாசிஸ்டுகளின் நாடாளுமன்றத்திற்குள் “ஸ்டண்ட்” அடிக்க முடியாது என்பது நன்றாகத் தெரியும்.

எனவே, பாசிஸ்ட் மோடியை நாடாளுமன்றத்திற்குள் அழைத்துப் பேச வைக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு நாட்டிற்கு வந்து போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், கடையடைப்புகளை நடத்துங்கள். உண்மையில், அதுவே மோடியின் “கல்லுளி மங்கன்” மௌனத்தைக் கலைத்து அவரைப் பேச வைக்கும்.


துலிபா

1 மறுமொழி

  1. போலி ஜனநாயகம் பாசிஸ்டுகள் சிக்ஸர் அடிக்கும் கிரவுண்டுதான்! சிறப்பான கட்டுரை!

    “ரைட்டு!”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க