நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!

பாசிசம் என்ற கருநாகம் குடிபுகுவதற்கான கரையான் புற்றுதான் அரசியல்சாசனமும் அதன் அடிப்படையிலான நாடாளுமன்றமும். இந்த கரையான் புற்றைப் பாதுகாப்போம் என்று முழங்குவதன் பொருள் என்ன?

ன்று (ஜூலை 20) காலை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கூட இருக்கிறது. தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களின் விலையேற்றம், மணிப்பூர் பற்றியெறிவது, எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை சட்டவிரோதமாக ஏவுவது, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் ஆளுநர்களின் சர்வாதிகாரப் போக்குகள் போன்ற பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்ப இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் முறையாக விவாதிக்கப்படும் என்ற நம்பிக்கை எந்தக் கட்சிகளுக்கும் இல்லை.

பொதுசிவில் சட்டத்தை இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், வழக்கம் போல அதை திசைத்திருப்புவதற்கான அனைத்து வேலைகளிலும் பா.ஜ.க. ஈடுபடும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்புகின்றன. இதுதான் நடக்கும் என்று நாட்டுமக்களுக்கும் தெரியும்.

பிரதமர் எனப்படுபவர் எந்தப் பிரச்சினைக்கும் வாயைத் திறக்கமாட்டார். 2004-2014 வரை நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் போன்ற ஒரு “கல்லுளி மங்கன்” மட்டுமல்ல, அவர் நாடாளுமன்றத்திற்கே வராத “ஊர்சுற்றி” என்பதும் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.


படிக்க : விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்


அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் “அம்மா” ஆட்சியை போல, மோடியின் ஆட்சி. மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், எங்களை வாழவைத்த தெய்வம் என்ற பல்லவியை பேரவையில் ஜெயலலிதா முன்னிலையில் சுதிதப்பாமல் பாடிவிட்டு அமைச்சர்கள் பேசத் தொடங்கினர்; எதிர்க்கட்சிகள் பேசும் போதெல்லாம், சம்பந்தமே இல்லாமல், அம்மா புகழைப் பாடி நேரத்தை வீணடித்தனர்; அந்தக் காட்சிகளுக்கு சற்றும் குறையாமல்தான், தற்போது நாடாளுமன்றக் கூட்டங்கள் நடக்கின்றன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் போதோ, பேசும் போதே, பா.ஜ.க.வினர் எழுந்து நின்று “மோடி, மோடி”, “ஜெய்ஸ்ரீராம்” என்று எந்த சம்பந்தமும் இல்லாமல் கூச்சலிடுவார்கள்.

நாட்டின் சொத்துக்களை எல்லாம் அம்பானிக்கும் அதானிக்கும் தாரை வார்க்கிறார் பிரதமர். இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், சட்டப்படிதான் நடக்கின்றன. இந்த அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அதிகாரப்படிதான் நடக்கிறது என்றாலும் மோடி மீது மட்டும்தான் எதிர்க்கட்சிகளுக்கு கோபம் வருகிறது.

பாசிச பா.ஜ.க.வின் சதிராட்டங்களை அங்கீகரித்து அதன் பாசிச நடவடிக்கைகளுக்கு இடம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சட்டபூர்வமாக இந்துராஷ்டிரத்தை அரங்கேற்றுவதே இந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் நடக்கிறது.

தனக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றும் வழிமுறை, மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருக்கும் “கல்லுளி மங்கன்” வழிமுறை, நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை “டிராய்” போன்ற தீர்ப்பாயங்களுக்கு மாற்றிவிட்ட சர்வாதிகாரப் போக்கு போன்றவை அனைத்தும் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியிலேயே நடைமுறைக்கு வந்துவிட்ட சர்வாதிகாரப் போக்குகள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க பாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசியல் சாசனத்தையும் இந்த அரசு கட்டமைப்பையும் மறுவார்ப்புச் செய்து, கார்ப்பரேட் அரசு என்று சொல்லப்படுகின்ற புதியவகையான பாசிச அரசை உருவாக்கிய கட்சிகள்தான் பா.ஜ.க., காங்கிரசு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்.

இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, தில்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத் திருத்த மசோதா, தொல்பொருள் துறை தளப்பாதுகாப்பு மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா, தபால் சேவை மசோதா, தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மசோதா, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவும் மசோதா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களின் பட்டியலின, பழங்குடியின மக்கள் தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா உள்ளிட்ட 32 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதா இந்த கூட்டத் தொடரில் உத்தேசிக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெறவில்லை.

இவையன்றி, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழு அறிக்கை பெறப்பட்ட உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா 2022, எளிதில் வணிகம் செய்யவும் சிறிய குற்ற நடவடிக்கைகள் தொடர்பான விதிகளை மாற்றும் ஜன் விஸ்வாஸ் சட்டத் திருத்த மசோதா, நிலைக்குழு கூட்டுக்குழு பரிசீலனையில் இருக்கும் வனப்பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்ட இரு மசோதாக்கள், மத்தியஸ்த மசோதா போன்றவையும் நிறைவேற்றப்படுவதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த சட்டங்கள் குறித்தும் இவற்றின் சரத்துகள் குறித்தும் நாமறிந்தவரை எந்த ஊடகங்களும் விவாதிக்கவில்லை; எதிர்க்கட்சிகள் இவை குறித்து எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. மற்றொருபுறம், பாசிச மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து திசைத்திருப்பும் வகையிலும், தனது இந்துராஷ்டிரத்தை நிறுவும் வகையிலும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை பா.ஜ.க., சங்கப் பரிவார கும்பல் மேற்கொள்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என்பதைப் பொருத்தவரை, எதிர்க்கட்சிகள் ஒப்பாரி வைப்பது போல, மீண்டும் ஒருமுறை ‘ஜனநாயக கேலிக்கூத்தாக’த்தான் அமையப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அமைதியாக நடக்க வேண்டும் என்பதற்காக தினமணி, தினமலர் உள்ளிட்ட பத்திகைகள் எதிர்க்கட்சிகளுக்கு அறிவுரை வழங்கியும், சில நடுநிலைப் பத்திரிகைகள் இரண்டு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கியும், எதிர்க்கட்சி ஆதரவு பத்திரிகைகள் பா.ஜ.க.வின் அணுகுமுறைக்கு எதிராக கண்டனங்களையும் பதிவு செய்தும் வருகின்றன.

இன்றைக்கு தொடங்கி ஆகஸ்டு 11-ஆம் தேதி வரை என்ன நடக்கப்போகிறது என அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த கோரிக்கையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க பா.ஜ.க. அனுமதிக்கப் போவதில்லை. வழக்கம் போல வெளிநடப்பு, அமைதி ஊர்வலம் போன்ற மொன்னையான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவார்கள். மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் எந்த விவாதமும் இல்லாமல் அரங்கேறும்.

ஆனால், இவர்கள் யாருக்கும் நாடாளுமன்றக் கூட்டங்கள் அமைதியாக நடக்கப் போவதில்லை என்று நன்கு தெரியும். அமைதியாக நடக்காத இந்த போக்கு என்பதே, சொல்லிக்கொள்ளப்படும் நாடாளுமன்ற மரபுகளைத் தூக்கியெறிந்து கார்ப்பரேட் அரசு அரங்கேற்றத்தின் ஒரு அங்கம். இந்த கார்ப்பரேட் அரசு அரங்கேற்றத்தை இந்துராஷ்டிர அரங்கேற்றமாக பாசிச பா.ஜ.க. மாற்றிவிட்டதைத்தான் எதிர்க்கட்சிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. “அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம்”, “ஜனநாயகத்தை மீட்போம்” என்று முழங்குகின்றன.

ஆகையால், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் எல்லாம் வெற்றுக்கூச்சல்களே; நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு மறுக்கப்படும் ஜனநாயகத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எல்லாம் மொன்னையானவையே.


படிக்க : காஷ்மீர் தடுப்பு மையம்: தீவிரமாகப் போராடும் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்!


முக்கியமாக, சொல்லிக்கொள்ளப்படும் நாடாளுமன்ற மரபின் மீது எதிர்க்கட்சிகளுக்கும் நம்பிக்கையில்லை, மக்களுக்கும் நம்பிக்கையில்லை. பா.ஜ.க. இந்த மரபை தூக்கியெறிந்து இந்துராஷ்டிரத்தைக் கொண்டுவருவதைத்தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த பாசிச அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.விற்கு ஜனநாயகத்தை வழங்குகின்றதே இந்த நாடாளுமன்றம், அதனை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனவா? ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தடைசெய்ய வேண்டும் என்று இவர்கள் முழங்குவார்களா?

பாசிசம் என்ற கருநாகம் குடிபுகுவதற்கான கரையான் புற்றுதான் அரசியல்சாசனமும் அதன் அடிப்படையிலான நாடாளுமன்றமும். இந்த கரையான் புற்றைப் பாதுகாப்போம் என்று முழங்குவதன் பொருள் என்ன?

ஆகையால், இந்த கரையான் புற்றைப் பாதுகாப்பது மக்களின் பிரச்சினை அல்ல. கருநாகங்களான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. போன்ற பாசிசக் கட்சிகளுக்கு ஜனநாயகம் அளிப்பதைவிட கொடியது எதுவும் இல்லை. அக்கட்சிகளைத் தடை செய்து, மக்கள் பிரச்சினைகளை முறையாக விவாதித்து, மக்கள் தீர்ப்பளிக்கும் வகையிலான, மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் மக்களுக்கு வாய்ப்பளிக்கின்ற ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுதான் நாம் முழங்கவேண்டிய தருணமாகும். முழங்குவோமாக!

 


தங்கம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க