அவரை எதற்கு உள்ளே அழைக்கிறீர்கள்!

"நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம்" என்பதெல்லாம், பழைய காலம். நாடாளுமன்றத்தை பஜனை மடமாக மாற்றுவதுதான் மோடி காலம். அதற்கேற்ப அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கே மோடி மீதான பா.ஜ.க.வினரின் பஜனை கோசத்தைத் தாண்டி, எதிர்க்கட்சிகளின் கதறல்கள் எதுவும் ஒலிக்கப்போவதில்லை.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்குவார்கள் என்று மோடிக்கு நன்கு தெரியும்.

கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே மணிப்பூரில் குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வன்முறைக் காணொளி வெளியானதை அடுத்து, 78 நாட்களாக மவுன விரதமிருந்த பிரதமர் மோடி வாய் திறந்து பேசிவிட்டார். அவரது கருத்துக்களும் உடல்மொழியும் இந்தப் பிரச்சினையை எந்த அளவிற்கு அலட்சியப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அலட்சியப்படுத்திவிட்டது.

அவரது உரை குறித்து அனைத்து தரப்பினரும் தத்தமது கண்டனங்களைப் பதிவு செய்திருப்பதால் அதற்குள் சென்று மீண்டும் நாம் பேச வேண்டியதில்லை. எதிர்க்கட்சிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று அவருக்குத் தெரியும். எப்படியும் மணிப்பூர் விசயம் தொடர்பாக வாய் திறக்க வேண்டியதாகிவிட்டது.

நாடாளுமன்றத்திற்குள்ளே பேசினால், விவாதம் நடத்த வேண்டிவரும் என்றுணர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே அவர் பேட்டியளித்துவிட்டு கடமையை முடித்துக் கொண்டார். பிரதமர் மோடியின் இச்செயல், “நாடாளுமன்ற மரபு மீறிய செயல், நாடாளுமன்றத்திற்குள் பேச வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்புகின்றனர்.


படிக்க: ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார்


குக்கி இன மக்களுக்கு எதிராக அரசு, அதிகாரவர்க்கத்தின் துணையுடன் திட்டமிட்டு இந்த வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்படுகிறது. அவரது கட்சி ஆளும் மாநில அரசுதான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் விவாதத்திற்குள்ளாகும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? ஆகவே அவர் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகளோ, “மோடி, உள்ளே வாருங்கள்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் ஜுலை 26-ஆம் தேதி, மோடியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்திருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. பெரும்பான்மை பலத்துடன் அமர்ந்திருப்பதால், எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள இத்தீர்மானம் நிச்சயம் தோல்வியடையும். இதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டும் மோடி மீது எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்திருக்கிறது.

எனினும் நாடாளுமன்றத்திற்கு வந்து பேசமாட்டேன் என்று வம்படியாக நிற்கும் மோடியை நாடாளுமன்றத்திற்கு இழுத்துவந்து பேசவைப்பதற்கு இது ஒரு வாய்ப்பு என்று எதிர்க்கட்சிகளால் நம்பப்படுகிறது. ஆனால், அவர்கள் ஏமாறுவது நிச்சயம்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டுமெனக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். மோடி என்ன செய்தார்! குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தனது உரையில், சம்பந்தமே இல்லாமல் இந்திராகாந்தியின் அவசரநிலை ஆட்சிபற்றி ஒன்றரை மணிநேரம் நெஞ்சுபுடைக்க உரையாற்றினார். மோடிக்கு எதிராக “அதானி” “அதானி” என்று முழக்கமெழுப்பிய எதிர்க்கட்சிகளைப் பார்த்து, “மோடி” “மோடி” என்று முழக்கமிட்டனர் பா.ஜ.க.வினர்.


படிக்க: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: உங்களுக்கும் நம்பிக்கையில்லை, எங்களுக்கும் நம்பிக்கையில்லை!


ஒருவேளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவைத்தலைவரால் விவாதத்திற்கு கொண்டுவரப்படுமாயின், அதேதான் மீண்டும் நடக்கப்போகிறது. ஆகஸ்டு 10 வரை நடக்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் உச்சக்காட்சியாக (கிளைமாக்ஸ்) அது இருக்கும்.

“நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், அங்கே விவாதிப்போம்” என்பதெல்லாம், பழைய காலம். நாடாளுமன்றத்தை பஜனை மடமாக மாற்றுவதுதான் மோடி காலம். அதற்கேற்ப அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அங்கே மோடி மீதான பா.ஜ.க.வினரின் பஜனை கோசத்தைத் தாண்டி, எதிர்க்கட்சிகளின் கதறல்கள் எதுவும் ஒலிக்கப்போவதில்லை.

நாட்டு மக்களின் எதிரியான மோடியை தூக்கியெறிவதுதான் தேவையே ஒழிய, அவரை பேசவைத்து அழகுபார்ப்பது அல்ல. அதற்கு நாடாளுமன்றத்தை முடக்குவது வழிமுறையல்ல. மக்கள் போராட்டங்களால் நாட்டை முடக்குவதே வழி!


வாசு

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க