ஆமாம், அவர் பிரதமராக இருக்கிறார். ஆகையால், நாம் கண்ணியமாக பேசவேண்டும். பிரதமரை கண்ணியமாக விமர்சித்தாலும் உங்கள் மீது “ஊபா” போன்ற கருப்புச் சட்டங்கள் பாயும். ஆண்டுக்கணக்கில் எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் வைக்கப்படுவீர்கள். இருப்பினும், கண்ணியமாக விமர்சிக்க நீங்கள் கற்றுக்கொண்டாக வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என்று ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கெல்லாம் தடைவிதிக்கப்பட்டிருப்பதால், நீங்கள் கண்ணியமாக விமர்சிக்க வேண்டும்.
பிரதமரை அவதூறு செய்துவிட்டார் என்று எதிர்க்கட்சி தலைவர் மீது பொய்வழக்குப் பதிவு செய்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டிருப்பதை நினைத்துப் பாருங்கள், ஆனாலும் நீங்கள் கண்ணியமாக விமர்சிக்க வேண்டும்.
மணிப்பூர் பற்றி எரிகிறது என்று ஊடகங்கள் எல்லாம் சொல்லி வந்தன. 77 நாட்களாக அந்த நபர் வாயைத் திறக்கவில்லை. குக்கி இனப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வன்முறைக் காட்சி வீடியோ வெளியானதை அடுத்து அவர் வாயைத் திறந்துவிட்டார். 78-வது நாளில் அவர் வாயைத் திறந்து பேசியதை, தி டெலகிராப் இதழ் தனது முதல்பக்கத்தில் 77 சிறிய முதலைகளைப் போட்டு 78-வது முதலை கண்ணீர் வடிப்பது போல படத்தை வெளியிட்டிருக்கிறது. மிகவும் கண்ணியமான விமர்சனம்.
படிக்க: மணிப்பூர்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தான் குற்றவாளிகள்!
“அவமானத்தால் உடலே நடுங்கிறது…” என்று “மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்க, ‘உலகத்தின் சக்திவாய்ந்த தலைவர்’ எனச் சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடிக்கு சுமார் 78 நாள்கள் ஆகியிருக்கின்றன. நம் சகோதரிகள் சிலர் நிர்வாணமாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட செய்தி வெளியான பிறகே, வேறு வழியில்லாமல் மௌனம் களைந்திருக்கிறார் மோடி… இதைவிடக் கொடுமை வேறென்ன இருக்கப் போகிறது?” மிகவும் கண்ணியமாகவே விமர்சனம் செய்திருக்கிறது ஜூனியர் விகடன்.
தினகரனை எடுத்துக் கொள்வோம்.
“இந்நிலையில் தான் பழங்குடியின பெண்கள் இருவரை மெய்தி சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்வது போன்று சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கொடூரத்தின் உச்சமாக கருதப்படும் இச்சம்பவம் கடந்த மே மாதம் நடந்த பேரணியின் போது அரங்கேறியுள்ளது. இதில் இரு பெண்களையும் வயல்வெளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர். இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு உச்சநீதிமன்றம் உள்பட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி முதன்முறையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மணிப்பூரில் நடக்கும் கலவரங்கள் குறித்து வெளியே பரவாமல் தடுக்க ஒன்றிய பாஜ அரசு அம்மாநிலத்தில் இணைய சேவையை துண்டித்தது. இருந்தாலும் விளையாட்டு வீராங்கனை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆகியோர் இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டு மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்று கதறி கெஞ்சினர்.
உண்மை நிலவரத்தை எப்போதும் மறைக்கமுடியாது என்பது போன்று தற்போது பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கொடுமைக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்றே தீர வேண்டும்.” என்று விரிவாக தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இதனைவிட கண்ணியமாக பிரதமரை விமர்சிக்க முடியாதுதான்.
இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் “மணிப்பூர் சம்பவம் வேறு மாதிரியானது. அதுகுறித்துப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சத்தீஸ்கரையும் ராஜஸ்தானையும் இதோடு இணைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? சத்தீஸ்கர் மாநிலத்தை அவதூறு செய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி துரதிர்ஷ்டவசமானது. முதலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிறகு மணிப்பூர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் முதன்முறையாக ஊடகங்கள் முன்பு வந்த பிரதமர் மோடி பொய் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். பிரதமரே இந்தப் பேச்சுகளை நிறுத்துங்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்” என்று மோடி உரையின் திசைதிருப்பும் வேலையை அம்பலப்படுத்தியுள்ளார்.
படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!
“உங்களது குரல் (Articulation) உங்களது மவுனத்தைவிட வெட்ககரமானது” என்றார் காங்கிரசின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா சிரினட்.
“இரண்டு பெண்கள் மீதான தாக்குதலுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் தெரிவிப்பதற்குப் பதிலாக, பிரதமர் அற்ப அரசியலில் ஈடுபடுவதை குறிப்பிட்டு காங்கிரசின் ஊடகத்துறைத் தலைவர் பவன் கேரா, “இந்தியாவுக்கு இதயம் கொண்ட பிரதமர் தேவை” என்று கூறினார்” என டெலிகிராஃப் ஆங்கில ஏடு தெரிவிக்கிறது.
“மணிப்பூரில் மனிதத்தன்மை மடிந்துவிட்டது. மோடி அரசாங்கமும் பா.ஜ.க.வும் ஜனநாயகத்தை மாற்றிவிட்டனர். சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக கும்பலாதிகத்தைக் கொண்டுவந்து மாநிலத்தின் மிகவும் நேர்த்தியான சமூகக் கட்டமைப்பை அழித்துள்ளனர். மோடிஜி, உங்களது மவுனத்தை இந்தியா மன்னிக்காது. உங்கள் அரசாங்கத்திற்கு மனசாட்சி ஒரு சிறு துளி மீதம் இருந்தால், நீங்கள் மணிப்பூரைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி, மத்தியிலும் மாநிலத்திலும் உங்கள் இரட்டை இயலாமைக்கு மற்றவர்களைக் குற்றம் சொல்லாமல், என்ன நடந்தது என்பதை தேசத்திற்குச் சொல்லுங்கள். நீங்கள் உங்களது அரசியலமைப்பு பொறுப்பை கைவிட்டுவீட்டீர்கள்.” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவரான கார்க்கே.
காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “1,800 மணி நேரத்திற்கும் மேலாக புரிந்து கொள்ள முடியாத மற்றும் மன்னிக்க முடியாத அமைதிக்குப் பிறகு, இறுதியாக மொத்தம் 30 வினாடிகள் மணிப்பூரைப் பற்றி பிரதமர் பேசினார். அதன்பிறகு, குறிப்பாக எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்களில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் சமப்படுத்தி, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தவிர்த்ததன் மூலம் மணிப்பூரில் நடந்த மாபெரும் நிர்வாகத் தோல்விகள் மற்றும் மனிதாபிமான துயரங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப பிரதமர் முயன்றார்.” என்றார்.
மேலும் அவர் பேசும் போது, “முதலாவதாக, நடந்து கொண்டிருக்கும் இனக்கலவரத்தின் பிரச்சினையை அவர் முற்றாக ஒதுக்கிவிட்டார். அவர் அமைதிக்காக எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை. மணிப்பூர் முதல்வரை பதவி விலகுமாறு கேட்கவில்லை. தற்போது வெளிவந்துள்ள இந்த காணொளி ஒன்று குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் நூற்றுக்கணக்கான காட்டுமிராண்டித்தனமான வன்முறை சம்பவங்களுக்கு இது ஒரு சான்று மட்டுமே. இரண்டாவதாக, மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளுடன் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளை சமப்படுத்த முயற்சிக்கிறார். அங்கெல்லாம் இந்தக் குற்றங்களைச் செய்துள்ளவர்கள் 24 மணி நேரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
படிக்க: எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!
தீக்கதிர் நாளிதழில், “பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலும் பிரிவினை அரசியலும் தான் குக்கி பழங்குடியின மக்கள் மீது, மெய்தி மக்கள் குழுவினர் இத்தகைய தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என்பதும் அதனால் பா.ஜ.க. மாநில அரசு கடும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதும் ஒன்றிய அரசும் கண்டு கொள்ளாமல் இருந்தது என்பதும் தெளிவானது. மொத்தத்தில், நாட்டின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஆட்சியில் இருப்பது துரியோதனாதியர்களின் கவுரவர்கள் கூட்டம். இது கவுரவமான ஆட்சியல்ல!” என்று குறிப்பிட்டுள்ளது.
மொத்தத்தில், மணிப்பூர் விசயத்தில் பிரதமர் மோடியும் அவரது கட்சியான பா.ஜ.க.வும் செய்தது என்ன?
மோடிக்கு குஜராத் என்றால், பைரன் சிங்கிற்கு மணிப்பூர்!
2002-ஆம் ஆண்டில் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது என்ன செய்தாரோ அதை அப்படியே அச்சுப்பிசகாமல் பைரன் சிங் மணிப்பூரில் செய்துள்ளார். அங்கே நடந்த இனப்படுகொலைக்கு பலியானவர்கள் முசுலீம்கள். இங்கே இனப்படுகொலைக்கு பலியானவர்கள் குக்கி பழங்குடியின மக்கள்.
அங்கேயும் இங்கேயும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியது பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்.சும்தான். பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு பலத்தை பயன்படுத்தி, குக்கி இன மக்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
குஜராத் படுகொலையின் குற்றவாளிகள் இன்று வெளியில் சுதந்திரமாகத் திரிகின்றனர். அந்த படுகொலையில் தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்தான் இன்று நாட்டின் பிரதமராகவும் உள்துறை அமைச்சர்களாகவும் உள்ளனர். இவர்கள் மீது குற்றஞ்சுமத்தியவர்கள், தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்கள் வழக்கை எதிர்கொண்டிருக்கின்றனர்.
இதுதான், இந்துராஷ்டிரம்.
“அப்போது படுகொலைக்கான குற்றவாளி, மரண வியாபாரி இன்று பிரதமர்” (சோனியா காந்தி சொன்னது). குற்றவாளியிடம் வாயைத்திற, கலவரத்தைக் கட்டுப்படுத்து என்று கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். 78 நாட்கள் கழித்து அவர் 30 விநாடிகளில் பேசிய பேச்சுக்கள், குற்றவாளிக்குரிய தண்டனையைவிட கொடிய தண்டனையை வழங்கக் கோருகிறது.
இருப்பினும், அவர் பிரதமராக இருக்கிறார்.
அதிகாரமும் அரசியல் பலமும் அவரது பரிவாரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
நீதி கேட்டுப் போராடுபவர்கள், வெளியே வீதிகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறோம்.
“பிரதமரே, வாயைத் திறந்து பேசுங்கள், கலவரத்தைக் கட்டுப்படுத்துங்கள்” என்று இனியும் கவுரவமாக முழக்கமிடுவதற்கான வாய்ப்பையும் அவர் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார்.
அவர் நடந்து கொள்வதையெல்லாம் பார்த்தால், யோக்கியர்கள் யாரும் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகிறது.
என்ன செய்யப் போகிறோம்?
தங்கம்