எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!

பிரேன் சிங் முன்னிறுத்தும் மேய்தி பெரும்பான்மைவாதமானது ஒருபக்கம், குக்கி-மேய்தி மக்களுக்கிடையிலான பிளவை ஏற்படுவத்தி காவிக்கும்பலுக்குச் சேவைசெய்வதாகவும்; மற்றொருபுறம் மணிப்பூரின் மலைவளங்களை கார்ப்பரேட்டுக்கு சூறையாடக் கொடுப்பதற்கான தரகுவேலையாகவுமே அமைந்திருக்கிறது.

டகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூர், கடந்த மே முதல் வாரத்திலிருந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழ்கின்ற மேய்தி மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்தான், அம்மாநிலம் கலவர பூமியாகியுள்ளது.

தலைநகரான இம்பாலைச் சுற்றியுள்ள சமவெளிப்பகுதிகளில் மேய்தி இனத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மாநிலத்தின் மக்கள் தொகையில் மேய்திக்கள் சுமார் 53 சதவிகிதமாக உள்ளனர். கல்வி, அரசியல், பொருளாதாரம் என பல துறைகளிலும் மேய்தி இன மக்களே செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர். மாநில அரசாங்கத்தில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை உறுப்பினர்களுள், 40 சட்டமன்ற உறுப்பினர்கள் மேய்திக்கள்.

இவ்வாறு மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்தும் மேய்திக்கள், 2013ஆம் ஆண்டு தொடங்கி தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19, 2023 அன்று, மேய்திக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் ஒன்றிய அரசிற்கு தனது பரிந்துரைகளை மாநில அரசு வழங்க வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம்.

ஏற்கெனவே, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்சாதியினர் இடஒதுக்கீடுகளை மேய்திக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, தற்போது மேய்திக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் தங்களது கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றும், அதைவிட முக்கியமாக மலைப்பகுதிகளில் தங்களுக்குள்ள உரிமைகள் பறிபோகும் என்றும் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியினர் எதிர்த்து வருகின்றனர்.


படிக்க: மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!


மேய்திக்களுக்கு சாதகமாக அமைந்த உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை எதிர்த்து, பழங்குடி அமைப்புகள் போராடத் தொடங்கினர். பழங்குடியினரின் போராட்டங்களை மேய்திக்களும் எதிர்க்கத் தொடங்கினர். இப்படி இருதரப்புக்கு இடையில் மோதல் போக்கு மூண்டெழுந்துள்ளது.

மேய்திக்களில் ஆகப்பெரும்பான்மையோர் இந்துக்கள். நாகா, குக்கி போன்ற பழங்குடியினரில் ஆகப் பெரும்பான்மையினர் கிறித்தவர்கள். ஆகவே, மேய்திக்களுக்கும் குக்கிகளுக்குமான மோதல் இந்து, கிறித்தவ மோதலாகவும் மாற்றப்பட்டுவருகிறது.

சிதைந்து கிடக்கும் மணிப்பூர்!

பல்வேறு பழங்குடியினங்களைச் சேர்ந்த மாணவர் அமைப்பான “அனைத்து மணிப்பூர் பழங்குடி மாணவர் சங்கம்” சார்பாக கடந்த மே 3 அன்று பேரணி நடத்தப்பட்டது.  தலைநகர் இம்பால் உள்ளிட்டு சுரசந்த்பூர், தெங்னௌபால், சந்தல், கங்போக்பி, நோனி, உக்ருள் ஆகிய பகுதிகளில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து, குக்கிகள் அதிகம் வசிக்கும் சுரசந்த்பூர் மாவட்டம் மற்றும் தலைநகர் இம்பால் போன்ற இடங்களில் வன்முறை வெடித்தது. இவ்வன்முறையில் குக்கிக்களும் மேய்திக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இம்பாலில் மெய்தி மக்களின் மதக்கொடிகள் உள்ள வீடுகளை விட்டுவிட்டு குக்கிகளின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன.

சுரசந்த்பூரில் சிறுபான்மையாக உள்ள மேய்திகளின் வீடுகள் தாக்கப்பட்டன. அதேவேளையில், குக்கிகளைச் சேர்ந்த சிலர் மேய்திகள் மீது தாக்குதல் தொடுத்தபோது, அங்கிருந்த குக்கி இனப் பெண்கள் மேய்தி மக்களை அரணாக சூழ்ந்து நின்று அவர்களைக் காப்பாற்றிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தொடர்ச்சியான வன்முறைக் கலவரங்களால், வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. பள்ளிக் கூடங்கள், அங்கன்வாடிகள், கடைகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. குக்கி இனத்தைச் சேர்ந்தவரின் மருத்துவமனையும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. குக்கிகள் கிறித்தவர்கள் என்பதால், இதுவரை 120க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன; அவற்றுள் சில தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மேலும், சுரசந்த்பூர் பகுதியில் அமைந்திருந்த, குக்கி பழங்குடிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர் நடத்திய வரலாற்றுப் புகழ்பெற்ற நூற்றாண்டு நினைவுச் சின்னமும் வன்முறைக் கும்பலால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.


படிக்க: இந்து ராஷ்டிரமாக உருவெடுத்து வருகிறது உத்தரகாண்ட்!


மே 3-இல் நடைபெற்ற வன்முறையால், 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கின்றனர் மற்றும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு புலம்பெயர்ந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கையை மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை.

இவ்வன்முறையால் போதிய உணவோ, மருந்துகளோ இன்றி சுகாதாரமற்ற முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளிகள், கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. இணைய வசதி முடக்கப்பட்டிருக்கிறது. இராணுவமும், துணை இராணுவமும் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. “மணிப்பூரின் நிலைமை, ஒரு உள்நாட்டுப் போர் நடந்ததைப் போல இருக்கிறது” என்கிறார் சுரசந்த்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும் தன்னார்வலருமான ஜான் மாமாங்க். மேலும், இம்பால் மற்றும் இதர பகுதிகளில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட கும்பலை போலீசார் தடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் உள்ளூர் மக்கள்.

மேலும், மணிப்பூரில் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றபோது, மோடியால் தேசத்தின் பெருமையாகப் புகழப்பட்ட மல்யுத்த வீராங்கனை மேரிகோம், “எனது மாநிலம் பற்றி எரிகிறது; உதவுங்கள்!” என்று பிரதமர் மோடிக்கு டிவிட்டர் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், மோடியோ கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பஜ்ரங் பலி அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். “இது ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை” என்று பல பத்திரிகையாளர்களும் மோடியை விமர்சித்திருந்தனர்.

காவி பயங்கரவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை

அரம்பை தெங்கால் மற்றும் மேய்தி லீபன் போன்ற மேய்தி இனத்தைச் சார்ந்த இனவெறி அமைப்புகளே குக்கிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளன என்பதற்கான சான்றுகள் தற்போது வெளிவந்துள்ளன. இக்குண்டர் படை அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவையாகும்.

“அரம்பை தெங்காலும் மேய்தி லீபனும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைப் போன்றவை. கருப்பை உடையில் இருந்த இக்கும்பல்கள், துப்பாக்கி ஏந்தியபடி நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் கும்பலாகச் சென்றனர். காவல் நிலையங்களுக்குள் நுழைந்து ஆயுதங்களை சூறையாடினர். அதுனூடாக தேவலாயங்களை எரித்தனர். கிராமங்களை சூறையாடினர்” – என்று மணிப்பூரில் நடைபெற்ற திட்டமிட்ட வன்முறையைப் பற்றி விவரிக்கிறார் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

மன்னர் காலத்திய மணிப்பூரின் பெருமையையும், மெய்திக்களின் பண்பாடான சனமகி (Sanamahi) பண்பாட்டை மீட்டமைக்க வேண்டும் என்ற கொள்கையையும் உடைய கருஞ்சட்டை அணிந்த இனவெறிக் கும்பல்தான் அரம்பை தெங்கால் மற்றும் மேய்தி லீபன் கும்பல்களாகும்.

மேய்திக்களின் கொடியான சனமகி கொடிதான் மணிப்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இவ்வன்முறைக் கும்பலுக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் உள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடியும்.

கடந்த 300 வருடங்களுக்கும் மேலாக, மேய்திகளின் பண்பாடான சனமகி பண்பாடும், பார்ப்பன இந்துப் பண்பாடும் ஒன்றுகலந்திருக்கிறது. மேய்திக்களின் பண்பாட்டில் இந்துமதப் பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் மேலோங்கி இருக்கின்றன. மேய்திகளின் பண்பாட்டை இந்துத்துவமயமாக்கி, அவர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று, குக்கிகளுக்கும் மேய்திகளுக்கும் இடையேயான இன வன்முறையை தூண்டிவிட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவிக் கும்பல்.

நிலம் யாருக்கான பிரச்சினை?

சமவெளிப் பகுதிகளில் உள்ள மேய்திக்களுக்கும், மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கும் இடையிலான இன மோதல்களுக்கு அடிப்படையாக இருப்பது நிலம்தான் என்று பல்வேறு முதலாளித்துவ அறிவுஜீவிகளும், ஊடகங்களும் முன்வைக்கிறார்கள். மேய்திக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோருவதற்குக் காரணம், மலைப்பகுதிகளில், பழங்குடியினர் அல்லாதவர் நிலம் வாங்க முடியாது என்பதாலும், தங்களை பழங்குடியினராக வகைப்படுத்தினால் மலைப்பகுதிகளில் தங்களால் நிலம் வாங்க முடியும் என மேய்திக்கள் கருதிகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

கூடுதலாக, எல்லைப்பகுதி மாநிலமான மணிப்பூரில், வங்கதேசம், மியான்மர் ஆகிய அண்டைநாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக குடியேறுகின்றனர். இதனால், சமவெளிப்பகுதிகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

“மெய்தி-குக்கி மற்றும் இதர இன மக்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களுக்கு நிலம்தான் அடிப்படையாக இருக்கிறது. இடப்பெயர்வு, காலநிலை மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவற்றால் நிலத்தின் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது” என்று மனித உரிமை வழக்கறிஞரும், வடகிழக்கு மாநிலங்கள் குறித்து எழுதியும் பேசியும் வருபவரான நந்திதா ஹஸ்கர் நியூஸ்கிளிக் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இவையெல்லாம் பிரச்சினையின் ஒருபகுதான். உண்மை என்னவெனில் மலைப்பகுதி நிலப்பரப்பில் சொத்து வாங்குவது, அனைத்து மேய்தி இன மக்களது கோரிக்கை அல்ல. மேய்தி இனத்தைச் சேர்ந்த ஆதிக்க வர்க்கங்களது கோரிக்கையாகும். எப்படி, தலித்துகளது இடஒதுக்கீட்டால்தான், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று ஆண்டசாதிப் பெருமை பேசும் சாதிவெறியர்கள் பிரச்சாரம் செய்கிறார்களோ, அதைப் போன்றதொரு பிரச்சாரமே மேய்திக்களின் பழங்குடியினர் பட்டியல் கோரிக்கையாகும்.


படிக்க: அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !


மேய்திக்களிலேயே அதிகாரத்தில் உள்ள, பணம் படைத்த வர்க்கம் சொத்து வாங்கிக் கொழுப்பதற்காகவும் கார்ப்பரேட்டுகளுக்கு தரகுவேலை பார்ப்பதற்காகவும் எழுப்பும் கோரிக்கை, இனவெறியால் ஒட்டுமொத்த மேய்திக்களின் கோரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த அடிப்படையை புரிந்துகொண்ட சங்கப்பரிவாரக் கும்பல், மேய்தி இனவெறி அமைப்புகளுடன் கூட்டுவைத்துக் கொண்டு செயல்படுவதன் மூலம் தனது இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலை மணிப்பூரில் மிக லாவகமாக அமல்படுத்திவருகிறது.

தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி பட்டியலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கிருஷ்ணசாமி போன்றவர்கள் எழுப்பிய கோரிக்கையை ஆதரித்து, அவரை கோடாரிக்காம்பாக வைத்தே அச்சமுதாய மக்களை ஆர்.எஸ்.எஸ்-இன் அடியாட்படையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அதைப் போன்ற ஒன்றாகவே மணிப்பூர் விவகாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.

காவி பயங்கரவாதம் மட்டுமல்ல, கார்ப்பரேட் சதியும்கூட!

ஆளும் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு, இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததிலிருந்து, பெரும்பான்மை மேய்திக்களுக்கு ஆதரவாகவும், சிறுபான்மை பழங்குடியினருக்கு எதிராகவும் செயல்படுவதாக குக்கி இனத்தைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே குற்றஞ்சாட்டுகிறார்கள்.

குக்கிகள் பெரும்பாலும், சமையலுக்குப் பயன்படுத்தும் கசகசாவைப் பயிரிடுகின்றனர். இதிலிருந்து அபின் என்ற போதைப் பொருள் தயாரிக்க முடியும். இதைவைத்துக் கொண்டு, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளை ஆக்கிரமிப்பு, போதைப் பொருள் தடுப்பு என்ற பெயரில் குக்கிகளுக்கு எதிரான அரச வன்முறையைக் கட்டவிழித்திருக்கிறது பிரேன் சிங் அரசு.

மேலும், குக்கி-மேய்தி மோதல் அரங்கேறிய பிறகு, ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “குக்கிகள் அனைத்து பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் வனவிலங்கு வாழ்விடங்களையும் ஆக்கிரமித்து கசகசா பயிரிடுகின்றனர் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் செய்கின்றனர்” என ஒட்டுமொத்த குக்கி இன மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கியிருக்கிறார் பிரேன் சிங். இது குக்கிகள் மத்தியில்கூடுதல் பதற்றத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் 2022-இல் சுரசந்த்பூர் மாவட்டத்தில் அமைந்திருந்த 38 கிராமங்களை வனப்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று கூறி வெளியேற்றியுள்ளது பிரேன் சிங் அரசு. மேலும், இந்த ஆண்டு பிப்ரவரி 20 அன்று சுரசந்த்பூரில் உள்ள சாங்ஜாங் என்ற கிராமத்தையும் காலி செய்திருக்கிறது. இக்கிராமங்கள் 50-60 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வரும் பகுதிகள் என்கிறார், பழங்குடியின அமைப்புத் தலைவரான முவன் டாம்பிங்.

குக்கிகளுக்கு எதிரான பிரேன் சிங் அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த மார்ச் 10-இல், சுரசந்த்பூர், உக்ருள், காங்போக்பி, தெங்னௌபால், ஜிரிபம் மற்றும் தமீங்லாங் போன்ற மலைப் பகுதியிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த குக்கிகள் மாபெரும் பேரணி நடத்தியிருக்கின்றனர். இந்தப் பேரணியில் பங்கேற்ற குக்கிகள் மீது போலீசார் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

பிரேன் சிங் முன்னிறுத்தும் மேய்தி பெரும்பான்மைவாதமானது ஒருபக்கம், குக்கி-மேய்தி மக்களுக்கிடையிலான பிளவை ஏற்படுவத்தி காவிக்கும்பலுக்குச் சேவைசெய்வதாகவும்; மற்றொருபுறம் மணிப்பூரின் மலைவளங்களை கார்ப்பரேட்டுக்கு சூறையாடக் கொடுப்பதற்கான தரகுவேலையாகவுமே அமைந்திருக்கிறது.

கடந்த மார்ச் 29-ஆம் தேதியன்று, வனப்பாதுகாப்புச் சட்டம் 1980-இல் திருத்தம் கொண்டுவந்திருக்கிறது ஒன்றிய மோடி அரசு. இத்திருத்தத்தின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு – இராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு (Strategic and security projects of national importance) வனப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணப்பயிர் வேளாண்மை செய்யவும், காடுகளுக்கு அடியில் உள்ள வளங்களைக் கொள்ளையிடவும் அனுமதியளித்திருக்கிறது. இத்திருத்தத்தின் மூலம், வனப்பாதுகாப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டி, வனங்களை கார்ப்பரேட்டு கொள்ளைக்குத் திறந்துவிடுவதற்கானதாக மாற்றியமைத்திருக்கிறது மோடி அரசு.

இந்தப் பின்னனியில்தான், பல்வேறு மாநிலங்களுடைய பழங்குடிகளும் அவர்கள் வாழ்விடமான காடுகள் – மலைகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்தீஸ்கரின் வனப்பகுதிகளில் அரசே டிரோன்களை வைத்து குண்டுவீசி, பழங்குடி மக்களை அச்சுறுத்தி விரட்டும் விசயம் அண்மையில் அம்பலமாகியிருக்கிறது. சத்தீஸ்கருக்கு டிரோன் என்றால், மணிப்பூருக்கு இனச் சண்டை.

சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஒழித்ததன் மூலம், காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும் என்று தம்பட்டமடித்தது காவிக் கும்பல். ஆனால், இன்று காஷ்மீரில் ஜக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனமானது பெரிய மால் தொடங்குவதற்கு அனுமதி பெற்றிருக்கிறது என்று தனது பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் நந்திதா.காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அக்கனிம வளத்தைக் கொள்ளையிட காத்திருக்கின்றன அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கழுகுகள். காஷ்மீரின் நிலைதான் நாளை மணிப்பூருக்கும்.

இனவெறிக் கும்பலும், மதவெறிக் கும்பலும், கார்ப்பரேட் கழுகுகளும் சுரண்டிக் கொழுப்பதற்காக அப்பாவி மேய்தி இன மக்களும், குக்கி இன மக்களும் பகையாளிகளாக்கப் பட்டிருக்கிறார்கள்.


அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க