மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி: குக்கி மக்களை ஒடுக்குவதற்கான சூழ்ச்சி!

மீண்டும் குக்கி மக்களை நிராயுதபாணியாக்க வேண்டுமென்பதற்காகவே ‘அனைத்து’ சமூகக் குழுக்களும் ஆயுதம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற அறிவிப்பும் அரம்பை தெங்கோல் ஆயுதம் சமர்ப்பித்துவிட்டது என்பது போன்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

2024 டிசம்பரில் தனிநிர்வாக அதிகாரம் கோரி பா.ஜ.க-வின் குக்கி எம்.எல்.ஏ-க்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.

ணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலால் தொடங்கப்பட்ட குக்கி பழங்குடியின மக்கள் மீதான இனவெறி கலவரத்தால், இன்றுவரை ஒட்டுமொத்த மணிப்பூரும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 9 அன்று, இக்கலவரத்தை முன்னின்று நடத்திவந்த மெய்தி இனவெறியாளனும் மணிப்பூர் முதல்வருமான பைரன் சிங் பதவி விலகியுள்ளார்.

இதனையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டதை வரவேற்கும் பலரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இதுவே சரியான சூழல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், குக்கி பழங்குடியின மக்களை மணிப்பூரின் காடுகளை விட்டு விரட்டியடித்துவிட்டு அங்குள்ள வளங்களை அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடும் சதித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலால் இக்கலவரம் தூண்டிவிடப்பட்டது. அந்த பாசிச சதித்திட்டத்தில் உறுதியாக உள்ள பாசிச கும்பல் அதன் ஓர் அங்கமாகவே தற்போது மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துள்ளது.

தீவிரமடைந்த பாசிச கும்பலின் நெருக்கடி

மணிப்பூரில் இந்த இரண்டாண்டுகளில் நூற்றுக்கணக்கான குக்கி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டு 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மெய்தி இனவெறியர்களால் இரண்டு குக்கி பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரச் சம்பவம், மணிப்பூரில் இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது. மெய்தி மக்கள் வாழும் சமவெளிக்கும் குக்கியின மக்கள் வாழும் மலைகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள பள்ளி-கல்லூரிகள்; மருந்து, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு; முகாம்களில் தொற்றுநோய் பரவல் என மணிப்பூர் மக்கள் மனிதகுல நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இது குக்கி பழங்குடியின மக்கள் மத்தியில் மட்டுமின்றி மெய்தி மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை உருவாக்கியுள்ளது.

இந்த எதிர்ப்புணர்வு காரணமாகவும், குக்கி பழங்குடியின மக்களின் ஆயுதந்தாங்கிய போராட்டம்; குக்கி மக்களின் தனிநிர்வாக அதிகாரத்திற்கான கோரிக்கை காரணமாகவும் கலவரம் தொடங்கிய சிறிது காலத்திலேயே பாசிச கும்பலின் தோல்வி முகம் தீவிரமடைந்து கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலைக்கூட நடத்த முடியாத சூழல் நிலவியதால், இக்கலவரத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்த மெய்தி மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க உத்தரவிட்ட, மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரனின் தீர்ப்பை இரத்து செய்தது. ஆனால், குக்கி அமைப்புகளும் பெரும்பாலான மக்களும் தேர்தலைப் புறக்கணித்தனர்; அத்தேர்தலில் மணிப்பூரில் உள்ள இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் காங்கிரசிடம் பா.ஜ.க. பறிக்கொடுத்தது.

இந்நிலையில்தான், கடந்த 2024 ஆகஸ்டில், மணிப்பூர் கலவரம் எவ்வாறு தனது தலைமையில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பது குறித்து முதல்வர் பைரன் சிங் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ஒலிப்பதிவு ஒன்று குக்கி மாணவர் அமைப்பால் வெளியிடப்பட்டது. இந்த குரல்பதிவு போலியானது என்று காவிக் கும்பல் கூக்குரலிட்டாலும், தனியார் ஆய்வகம் நடத்திய சோதனையில் இந்தக் குரல்பதிவானது 93 சதவிகிதம் பைரன் சிங் குரலுடன் ஒத்துப்போவதாக, இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது குக்கி மற்றும் மெய்தி மக்களிடையே கடும் எதிர்ப்பையும், பா.ஜ.க. அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் கட்டவிழ்த்துவிட்டது. இனக்கலவரம் வெடித்து 16 மாதங்கள் ஆகியும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டாத ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்து இம்பால் பள்ளத்தாக்கில் மெய்தி மாணவர்களும் மக்களும் போராட்டங்களில் இறங்கினர்.

குக்கி மக்கள் மத்தியிலும் போராட்டங்கள் வெடித்த நிலையில், நவம்பர் 2024-இல் அரம்பை தெங்கோல் இனவெறிக் கும்பலால் சோ என்ற பழங்குடியினப் பெண் வீடு புகுந்து கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியது. மேலும், குக்கி மக்களுக்கான குடிநீர், சுகாதாரம், மருந்துப்பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதில் பைரன் சிங் அரசு காட்டிய பாரபட்சம் ஆகியவை குக்கி பழங்குடியின மக்களின் தன்னாட்சி கோரிக்கையை தீவிரமடையச் செய்தது.

மறுபுறம், மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் தீவிரமடைந்தன. முன்னர் உருட்டுக்கட்டைகள், துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட வன்முறைகள், பைரன்சிங்கின் குரல் ஒலிப்பதிவு வெளியானதற்கு பிறகு டிரோன்கள், வெடிமருந்துகள் நிரப்பிய ஏவுகணைகளைக் கொண்டு மூர்க்கத்தனமாக நடத்தப்பட்டன. மக்கள் மீது மட்டுமின்றி, இம்முறை பைரன்சிங், பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்களின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டங்களின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில்தான், பிப்ரவரி 10 அன்று பைரன் சிங் அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக மணிப்பூர் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், மணிப்பூரில் அதிகாரத்தை இழக்கும் நெருக்கடி பாசிச கும்பலுக்கு உருவானது. இதனையடுத்து, பிப்ரவரி 9 அன்று பைரன் சிங் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் அவசர அவசரமாக டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்தப்பிறகு, அன்று மாலையே தான் பதவி விலகுவதாக மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவிடம் கடிதம் கொடுத்தார்.

இருப்பினும் பைரன் சிங்கிற்கு மாற்றாக வேறு யாரையும் முதல்வராக நியமிக்க முடியாத நிலையில் உள்ள பாசிச கும்பல், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்துள்ளது. இது மணிப்பூரின் ஆட்சியதிகாரத்தை பாசிஸ்டுகளின் கரங்களில் தக்கவைத்து கொள்வதற்கான ஏற்பாடே அன்றி, பாசிச கும்பல் கனவிலும் விரும்பாத, அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையல்ல. காஷ்மீரின் சிறப்புரிமையை இரத்து செய்துவிட்டு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை திணித்து காஷ்மீர் மக்களை ஒடுக்கியது போலத்தான் மணிப்பூரிலும் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ளது.

பாசிச சதித்திட்டதை முறியடிப்போம்!

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டுள்ள நிலையில், அமித்ஷாவிற்கு நெருக்கமான பாசிச அடிவருடியான ஆளுநர் அஜய் பல்லாவிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளன. இதன்மூலம் குக்கி மக்கள், குழுக்களை ஒடுக்குவதற்காக பாசிச கும்பல் சத்தமின்றி ஆயத்தமாகி வருகிறது.

மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லா பிப்ரவரி 20 அன்று, சட்டவிரோத ஆயுதங்களை அனைத்து குழுக்களும் ஏழு நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டுமென்றும் இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உத்தரவிட்டார். இதனையடுத்து, இன அழிப்புக் கலவரத்தை முன்னின்று நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட மெய்தி இனவெறி அமைப்பான அரம்பை தெங்கோல், பிப்ரவரி 28 அன்று 300 ஆயுதங்களைச் சமர்ப்பித்தது. மேலும், அரசின் உத்தரவை மதித்து பிற குழுக்களும் ஆயுதங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று குக்கி குழுக்களுக்கு ‘அறிவுரை’ வழங்கியது. இதனையடுத்து ஆயுதங்களைச் சமர்ப்பிப்பதற்கு மேலும் ஆறு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆயுதக் கிடங்குகளிலிருந்து மெய்தி இனவெறி அமைப்புகளால் கொள்ளையடிக்கப்பட்ட 6,000 ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது, அரம்பை தெங்கோல் சமர்ப்பித்திருப்பது வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே என்பதைக் குக்கி அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. மேலும், அரம்பை தெங்கோல் ஆயுதங்களைச் சமர்ப்பிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லா அரம்பை தெங்கோலின் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது, குக்கி மக்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதற்கான சதிவேலைகள் நடந்துவருவதை உறுதி செய்கிறது.

2008 ஆகஸ்ட், மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில், ஒன்றிய அரசு, மணிப்பூர் அரசு மற்றும் 25 குக்கி போராளி அமைப்புகளுக்கிடையே கையெழுத்தான முத்தரப்பு சண்டை நிறுத்த (போர் நிறுத்த) (Suspension of Operations) ஒப்பந்தம், பின்னாட்களில் குக்கி போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு வழிவகுத்தது. ஆனால், மணிப்பூர் கலவரத்திற்கான தயாரிப்புகளில் பாசிச கும்பல் ஈடுபட்டிருந்தபோது, 2023 மார்ச் மாதத்தில், குக்கி தேசிய இராணுவம் (KNA) மற்றும் சோமி புரட்சிகர முன்னணியுடனான (ZRF) அமைதி ஒப்பந்தத்திலிருந்து மணிப்பூர் அரசு திடீரென விலகியதன் மூலம், ஆயுதங்களை ஒப்படைத்து நிராயுதபாணியாகியிருந்த குக்கி போராளி குழுக்களை ஒடுக்குவதற்கு ஆயத்தமானது.

கலவரம் தொடங்கியவுடன் மணிப்பூர் அரசும், மணிப்பூர் அரசால் தாரைவார்க்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு மெய்தி இனவெறி அமைப்புகளும் இணைந்து நிராயுதபாணியாகியிருந்த குக்கி பழங்குடியின மக்கள், போராளி குழுக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்தின. இதனால் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குக்கி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து தங்கள் மீதான இனவெறித் தாக்குதல்களை எதிர்த்துப் போரிடுவதற்காக இரும்பு பட்டறைகளில் கைத்துப்பாக்கிகள், சிறு ஆயுதங்களைத் தயாரித்து குக்கி பழங்குடியின மக்கள் எதிர்த்துப் போரிட்டு வருகின்றனர். குக்கி பழங்குடியின மாணவர்கள்-இளைஞர்கள் பள்ளி-கல்லூரி படிப்பைத் துறந்துவிட்டு ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர். கிராம தன்னார்வலர்கள் (Village volunteers) என்ற பெயரில் தங்களை அமைப்பாக்கிக் கொண்டும் நாகா ஆயுதக் குழுக்களுடன் இணைந்தும் போராடுகின்றனர்.

ஒன்றிய-மாநில அரசு என்ற பிரம்மாண்ட-ஆயுதமயமாக்கப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக, தங்களது நிலத்தையும் இனத்தையும் காப்பதற்காக உறுதியுடன் போராடிவரும் குக்கி பழங்குடியின மக்களின் எழுச்சி பாசிச கும்பலுக்கு கிலியூட்டியுள்ளது. எனவே, மீண்டும் குக்கி மக்களை நிராயுதபாணியாக்க வேண்டுமென்பதற்காகவே ‘அனைத்து’ சமூகக் குழுக்களும் ஆயுதம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற அறிவிப்பும் அரம்பை தெங்கோல் ஆயுதம் சமர்ப்பித்துவிட்டது என்பது போன்ற நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2024 நவம்பரிலும் குக்கி அமைப்புகளிடமிருந்து மட்டும் சட்டவிரோத ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவுள்ளதாக மணிப்பூர் அரசு நிறைவேற்றிய தீர்மானம், குக்கி அமைப்புகளாலும் எம்.எல்.ஏ-க்களாலும் கடுமையான எதிர்ப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பாசிச கும்பலின் கோரமுகத்தை தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துள்ள குக்கி அமைப்புகள், “தனிநிர்வாக அதிகாரம்”, “குக்கி மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து மணிப்பூர் போலீசை திரும்பப்பெறுதல்”, “மெய்தி குழுக்கள் கொள்ளையடித்த ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்தல்” மற்றும் “குக்கி கிராம தன்னார்வலர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குதல்” உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் ஆயுத சமர்ப்பிப்பு செய்ய முடியும் என்று உறுதிபடக் கூறியுள்ளனர்.

குக்கி கூட்டமைப்புகளின் இந்த நிலைப்பாடு சரியானதும் வரவேற்கத்தக்கதுமாகும். எனினும், குக்கியின அமைப்பினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்து சிறையிலடைப்பது; கொன்று குவிப்பது; இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படும் துல்லியமான அதீத ஆற்றல்கொண்ட கொடூரமான ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது; ஊரடங்கு, இணைய முடக்கம் பிறப்பித்து ஒடுக்குவது என பல்வேறு வகைகளில் குக்கி இன மக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகள் மணிப்பூரில் அரங்கேறி வருகின்றன. ஆனால், மோடி அரசின் அடிமையாகிப்போன ஊடகங்கள் மக்களுக்கு இச்செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில்லை.

எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டிவிடும் என்ற ஆளும் வர்க்க ஊடகங்களின் பொய் பிரச்சாரங்களை முறியடித்துவிட்டு, குக்கியின மக்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் தனிநிர்வாக கோரிக்கையை வலியுறுத்தியும் குரல் கொடுப்பதும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள், பலதரப்பட்ட மக்களின் கடமையாகும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க