பிரதமர் மோடி பிரான்சுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரங்களைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மணிப்பூரில் கலவரங்களை அடக்கத் தவறியதற்காகப் பிரதமர், உள்துறை அமைச்சரை அதுவரை கண்டித்து வந்த ‘நடுநிலை’ ஊடகங்கள் சில (ஆனந்த விகடன்) ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட வார்த்தைகளில் தமது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. இது மேற்கத்திய நாடுகளின் காலனியாதிக்க மனநிலை என்றும் விமர்சனங்களைச் செய்திருந்தனர்.
இத்துடன், “ஆனந்த விகடன்” இதழ், “மணிப்பூரின் உண்மை நிலவரத்தை உணராமல் கற்பனையாக ஒரு கோணத்தில் சித்தரிக்க முயன்றதாக விமர்சனம் செய்துள்ளது. குறிப்பாக, மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினரான குக்கி சமூகத்தினருக்கும் மோதல் நிலவிவருகிறது. நில உரிமை தொடர்பான முரண்பாடு நீண்டகாலமாக இரண்டு சமூகங்களுக்கு இடையில் இருந்து வருகிறது. இந்நிலையில், மெய்தி இன மக்களைப் பழங்குடியினராக அங்கீகரிப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பே, இந்த முரண்பாட்டைக் கூர்மையாக்கி மோதலுக்கு வித்திட்டது. ஆனால், மணிப்பூர் கலவரத்துக்கு மதச்சாயம் பூசுகிறது ஐரோப்பிய நாடாளுமன்றம்” என்று குறிப்பிடுகிறது.
இக்கருத்து, மணிப்பூர் கலவரங்கள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றம், இந்தியாவைக் கண்டிக்கும் போக்கில் இப்பிரச்சினை குறித்து ஆனந்த விகடன் தெரிவித்திருந்தது என்றாலும், மணிப்பூர் கலவரத்திற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மணிப்பூர் கலவரத்திற்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கருத்தின் வேறுவடிவமாகும்.
படிக்க: மோடி தனது வாயைத் திறக்காமலேயே இருந்திருக்கலாம்!
விகடன் குழுமம் மட்டுமல்ல, மணிப்பூர் கலவர விவகாரத்தில் பிரதமரையும் அமித்ஷாவையும் கண்டிக்கும், மிகவும் நடுநிலையாளர்கள் போல நடிக்கும் பல பார்ப்பன, கார்ப்பரேட் ஊடகங்களில் கருத்துகள் இத்தகையவையே. இதன் மூலம், இனவெறி, மதவெறி படுகொலை குற்றவாளிகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வைக் காப்பாற்றுகின்றன.
கிருத்தவர்களும் பழங்குடி இனத்தினருமான குக்கி மக்களுக்கு எதிராக மதரீதியாக வெறுப்புப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு திட்டமிட்டு அவர்களுக்கு எதிரான கலவரங்களை அரங்கேற்றியது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான்.
மணிப்பூர் முதல்வரும் பா.ஜ.க. கும்பலும் இந்தக் கலவரங்களை நியாயப்படுத்தியும் இவற்றை தடுப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். மோடிக்கு குஜராத் என்றால், பைரன் சிங்கிற்கு மணிப்பூர். தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் இந்து மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஏற்றார் போல பல்வேறு பிரித்தாளும் அணுகுமுறைகளை மேற்கொண்டுவருகிறது என்பதற்கு மணிப்பூர் துலக்கமான சாட்சியாகும்.
இதனால்தான் இதுநாள் வரை பிரதமர் இந்தப் பிரச்சினையில் வாயைத் திறக்கவில்லை. குக்கி இன மக்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட போது கூட உள்துறை அமைச்சகம் இதனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கண் துடைப்புக்காக அமித்ஷா கும்பல் ஒரு விசாரணை நாடகத்தை அரங்கேற்றியது. பிரதமரை விமர்சிக்கும் சாதாரண பத்திரிகையாளர்களை மோப்பம்பிடிக்கும் இந்திய புலனாய்வு முகமை குக்கி இன மக்கள் மீதான மெய்தி வன்முறையாளர்களை அடையாளம் காட்டவில்லை. இதுமட்டுமல்ல, கலவரத்திற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரலெழுப்பிய போது, முதல்வர் பைரன் சிங், பதவி விலகுவதாக அப்பட்டமான ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். தனது கட்சியினர் வலியுறுத்துவதால் பதவியில் தொடர்வதாகக் கூறி, எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தினார்.
படிக்க: போலீசின் துணையுடன் நடந்த குக்கி பெண்கள் மீதான பாலியல் வெறியாட்டம்!
தற்போது இரண்டு நாட்களாக உலகையே உலுக்கி வருகிறது, குக்கி இனப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் கொடுமையான வீடியோ. இந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களில் ஒருவர், “எங்கள் கிராமத்தை அந்தக் கும்பல் தாக்கியபோது போலீஸாரும் அங்கிருந்தனர். கிராமத்திலிருந்து எங்களை அழைத்துச் சென்ற போலீஸார், அந்தக் கும்பலிடம் எங்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்” என்று பேட்டியளித்துள்ளார்.
இந்த ஒரு வன்முறையில் மட்டுமல்ல, இதுவரையிலான அனைத்து வன்முறைகளிலும் குக்கி இன மக்களுக்கு எதிராக மெய்தி இனவெறி கும்பலுடன் போலீசும் அரசு அதிகாரமும் சேர்ந்து கொண்டுதான் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவதைப் பற்றிப் பேசிய மணிப்பூர் முதல்வர் பைரன்சிங், இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடப்பதாக மிகவும் அலட்சியமாகக் கூறியிருப்பது என்பது, பா.ஜ.க. அரசின் ஆசியுடன் தான் இந்த வன்முறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை உணர்த்துகின்றன.
ஆனால், ‘நடுநிலை’ போர்வையில் இருக்கும் பல ஊடகங்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பல ஊடகங்கள்கூட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அரசு கூட்டாக நடத்தும் வன்முறை வெறியாட்டம் என்பதை திட்டமிட்டே மறைத்து வருகின்றன.
ஆகையால், மணிப்பூர் குக்கி இன மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான குரல்கள் அனைத்தும் பா.ஜ.க.விற்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிராக திருப்பப்பட வேண்டும்.
“ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வைத் தடை செய்” என்பதுதான் மணிப்பூர் பிரச்சினையில் மக்களின் முழக்கமாகும்!
தங்கம்