நாங்குநேரி கொடூரம்: மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி!

சாதி என்ற ஒன்று மாணவர்கள் மத்தியிலேயே எவ்வளவு தீவிரமடைந்து வருகிறது என்பதற்கும் மாணவர்கள் மத்தியில் இத்தகைய ஆதிக்கச்சாதி வெறி என்ற கொடூர மனநிலை விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

நாங்குநேரி சாதிவெறி தாக்குதல்:
மாணவர்களிடையே அதிகரித்துவரும் சாதிவெறி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியலின பள்ளி மாணவன், சாதி ரீதியான தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறான். 17 வயது பட்டியலின மாணவன் சின்னதுரையும் அவனது தங்கையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் ஆதிக்கச்சாதி வெறிபிடித்த சக மாணவர்களாலேயே சரமாரியாக வெட்டப்பட்டிருக்கிறார்கள்.

அனைத்து மாணவர்களிடமும் “சின்னதுரையைப் போல இருக்க வேண்டும்” என்று ஆசிரியர்களிடமிருந்து பாராட்டு பெறும் அளவுக்கு சின்னதுரை பள்ளியில் முன்னுதாரணமிக்க மாணவனாக விளங்கினான். “இவன் எல்லாம் நமக்கு மேலயா” என்று பெருந்தெரு ஆதிக்க சாதிவெறிப் பிடித்த மாணவர்கள் மாணவன் சின்னதுரையை துன்புறுத்தியும் மிரட்டியும் வந்துள்ளனர். பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் வரை ஆதிக்க சாதிவெறிப் பிடித்த மாணவர்களால் சின்னதுரை சந்தித்து வந்த கொடுமைகள் ஏராளம்.

படிக்க : நாங்குநேரி: தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் | மக்கள் அதிகாரம்

பள்ளிக்கு வழக்கமாக அரசு பேருந்தில் செல்லும் ஆதிக்கச்சாதி மாணவர்களுக்கும் சேர்த்து சின்னதுரையைப் பயணச்சீட்டு வாங்கவைப்பதும், பள்ளி வரை தங்களின் பள்ளி பைகளை சின்னதுரையைச் சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தியும் வேலைவாங்கி வந்துள்ளார்கள்.

ஆதிக்கச்சாதி வெறிபிடித்த மாணவர்களின் செயலை யாரிடமும் சொல்ல முடியாது தவித்துவந்த சின்னதுரை இனி பள்ளிக்குப் போகவேண்டாம் எனத் தனது தாயிடம் சொல்லி அழுதிருக்கிறான். அவனின் தாய் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் புகார் அளித்திருக்கிறார். “எங்க மேலேயே புகார் கொடுப்பியா” என ஆத்திரம் தலைக்கேறிய ஆதிக்கச்சாதி வெறிபிடித்த மாணவர்கள் புகார் கொடுத்த அன்று இரவே சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார்கள்.

தலை முதல் பாதம் வரை சின்னதுரைக்கு வெட்டுக் காயங்கள் படாத இடங்களே இல்லை. அதனைத் தடுக்க வந்த சின்னதுரையின் தங்கையும் வெட்டப்பட்டாள். மாணவர்கள் சின்னதுரையை வெட்டுவதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த சின்னதுரையின் தாத்தா அங்கேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பட்டியலின மாணவன் ஒருவன் நன்றாகப் படிக்கிறான் என்பதைக் கூட இத்தகைய ஆதிக்க சாதிவெறி மனநிலைக் கொண்ட மாணவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சூழலில் சாதி இல்லவே இல்லை என்று பேசுபவர்களுக்கிடையே, சாதி என்ற ஒன்று மாணவர்கள் மத்தியிலேயே எவ்வளவு தீவிரமடைந்து வருகிறது என்பதற்கும் மாணவர்கள் மத்தியில் இத்தகைய ஆதிக்கச்சாதி வெறி என்ற கொடூர மனநிலை விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கும் இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

படிக்க : ஆதிக்க சாதி சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் | மக்கள் அதிகாரம் மருது

சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தின் ஆதிக்கச்சாதி வெறிபிடித்த ரத்னவேல் கதாபாத்திரம் பெரும்பான்மை இளைஞர்களால் கொண்டாடப்பட்டது இதற்கு மற்றொரு சான்று. கூடுதலாக இத்தகைய இளைஞர்களை ஆட்கொள்ளும் சாதிய சங்கங்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் தாங்கள் காலூன்றுவதற்குத் தகுந்த களமாக இதனை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சங்கப் பரிவாரக் கும்பல் பயன்படுத்தி வருகின்றன. எனவே ஆதிக்கச்சாதி சங்கங்களையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வையும் தடை செய்வதே தற்போது உடனடியாக செய்யவேண்டிய பணியாகும்.

வாணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க