நாங்குநேரி: தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீது கொலைவெறி தாக்குதல் | மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும். சமூகநீதி, சமத்துவ நீதியை நிலை நாட்ட கூடிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

11.08.2023

நாங்குநேரி : பெருந்தெரு,
தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீது தாக்குதல், முதியவர் இறப்பு !
இனியும் இதை அனுமதிக்க முடியாது!

பத்திரிகை செய்தி

நெல்லை மாவட்டம், நாங்குநேரி, பெருந்தெருவைச்சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பட்டியலினத்தைச்  சேர்ந்த மாணவன் சின்னதுரை. அவருடன் படித்து வரும் ஆதிக்க சாதிவெறி கொண்ட மாணவர்கள் தொடர்ச்சியாக சின்னத்துரை மீது  வன்கொடுமை செயல்கள் செய்து வந்துள்ளனர்.

இதனால் பாதிப்படைந்த அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை கண்டறிந்த அந்த மாணவனின் தாய்,  பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். பள்ளி ஆசிரியர் சம்பந்தப்பட்ட ஆதிக்க சாதிவெறி மாணவர்களை கண்டித்துள்ளார்.

ஆதிக்க சாதிவெறி மாணவர்களோ இரவு 10 மணிக்கு சின்னதுரையின்  வீட்டுக்குள்  புகுந்து  சின்னதுரையையும் அவரது தங்கையையும் கொடூரமாக வெட்டி சாய்த்துள்ளனர். இதை தடுக்க வந்த ஒரு முதியவரும் இறந்து போய் உள்ளார். சின்னத்துரை உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

படிக்க : 100 நாட்களைக் கடந்து தொடரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்!

இது வழக்கமாக நடைபெற்ற  கொலை முயற்சி அல்லது கொலை சம்பவம் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆதிக்க சாதி வெறி நோய் எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.

தங்களுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் பள்ளி மாணவர்கள் இந்த படுகொலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆதிக்க சாதிவெறியிலும் வன்கொடுமை சம்பவங்களிலும் ஈடுபடும் மாணவர்களை கைது செய்வது என்றால் தமிழ்நாட்டில் எத்தனை பேரை கைது செய்வது? பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைப்போரை ஒழித்துக் கட்டாமல் ஆதிக்க சாதி வெறியை முடிவுக்கு கொண்டு வர முடியாது.

ஆதிக்க சாதி சங்கங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. அந்த ஆதிக்க சாதி சங்கங்களின் நச்சு கருத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள் கைகளில் சாதிக் கயிறு கட்டிக் கொள்வதும் இருசக்கர வாகனங்களில் சாதிய வண்ணம் பூசிக் கொள்வதும் சாதாரண செயல்களாகி விட்டன.

படிக்க : பா.ஜ.க ஆட்சியில் மாபெரும் வங்கிக் கொள்ளை! | புஜதொமு

தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பாடப்புத்தகங்களில்  அச்சடித்து இருந்தாலும் கூட தீண்டாமையை ஒரு புனிதமான செயலாகவே  ஆதிக்க சாதி வெறியர்கள் கருதி  அதை நிலைநாட்டவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும். சமூகநீதி, சமத்துவ நீதியை நிலை நாட்ட கூடிய பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தீண்டாமையை பின்பற்றுவதும் தீண்டாமையை அனுமதிப்பதும் சமூகக் குற்றமாக இனங்காணப்பட வேண்டும். தீண்டாமை குற்றங்களில் ஈடுபடுவோரை மக்களே  சமூகப் புறக்கணிப்பு செய்யும் வகையில் தொடர்ச்சியான பிரச்சாரங்களையும் செயல்களையும் நாம் முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க