செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் நியூயார்க் நகர வீதிகளில் போராட்டத்தில் குவிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமா உலகமே ஸ்தம்பித்துள்ளது. நேற்றோடு (09/08/2023) இப்போராட்டம் நூறு நாட்களைக் கடந்துவிட்டது.
ஹாலிவுட்டில் பணிபுரியும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அங்கம் வகிக்கும் தொழிலாளர் சங்கமான ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவின் (WGA) உறுப்பினர்கள், மோஷன் பிக்சர் மற்றும் டெலிவிஷன் தயாரிப்பாளர்களின் கூட்டமைப்புக்கு (Alliance of Motion Picture and Television Producers – AMPTP) எதிராக வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். வேலைநிறுத்தம் முடிவு பெறும்வரை WGA-இன் எந்த உறுப்பினரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கு புதிய ஸ்கிரிப்ட்களை எழுதப் போவதில்லை என்று கூறியுள்ளனர். WGA-வில் கிட்டத்தட்ட 11,500 எழுத்தாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாறிவரும் இந்த உலகச் சூழலில் ரசிகர்களின் மனநிலைக்கு ஏற்ப அவர்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களங்களை உருவாக்கும் வேலை கடுமையான பணிச்சுமையை கோரும் நிலையில், இதுவரை அவர்களுக்கான வேலை நேரங்கள் முறைப்படுத்தபடவில்லை. இத்துறையில் மற்ற கலைஞர்களைக் காட்டிலும் தங்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது எனவும் போதிய மதிப்பும் கிடைப்பதில்லை என்றும் சில ஆண்டுகளாகவே கதை ஆசிரியர்கள் கூறி வருகின்றனர்.
இதனையொட்டி தயாரிப்பு நிறுவனங்களிடமும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர். அதனை தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடந்த 100 நாட்களைக் கடந்து போராடி வருகின்றனர். ஆனால், தயாரிப்பு நிறுவனங்களோ இவர்களின் கோரிக்கையை மதிக்காமல் கதை ஆசிரியர்களே இனித்தேவையில்லை என்ற விதத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கிவிட்டன. உதாரணமாக, அண்மையில் மார்வெல் நிறுவனம் வெளியிட்ட “சீக்ரெட் இன்வேஷன்” (Secret Invasion) சீரிஸின் தொடக்கத்தில் வரும் காமிக் வரைபடங்கள் AI மூலமாக வரையப்பட்டதே.
படிக்க: ஏ.ஐ. லிசாக்களும் வேலையை இழக்கும் ஹென்றிக்களும்
இது போன்ற காரணங்களாலேயே 100 நாட்களைக் கடந்து போராட்டம் தொடர்கிறது. ஆனால், ஊதியம் போன்ற கோரிக்கைகளில் தற்காலிகமாக உடன்பட்டாலும் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை நிறுத்த முடியாது என்று தயாரிப்பு நிறுவனங்கள் உறுதியாக உள்ளன. பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் AI அபாயம் குறித்து பல விழிப்புணர்வு வேலைகளிலும் ரைட்டர் கில்ட் அமைப்பு தொடர்ச்சியாக பிரச்சாரப் பணியை செய்து வந்துள்ளது. இதன் விளைவாக சாக் ஆஃப்ட்ரா (SAG-AFTRA) என அழைக்கப்படும் 1,60,000 உறுப்பினர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் சங்கமும் ரைட்டர் கில்ட்-க்கு ஆதரவாக களம் இறங்கியது.
நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் முன்பு ஆயிரக்கணக்கில் கூடி பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தப்படுகிறது. இதை நியூயார்க் நகர சபை ஆதரிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல சிறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக டிஸ்னி, நெட்ஃபிளிக்ஸ், வார்னர் ப்ரோஸ், டிஸ்கவரி, அமேசான், பாரமவுண்ட் மற்றும் என்.டி.சி.யு, யுனிவர்சல் உள்ளிட்ட அலுவலகங்கள் முன்பு முற்றுகையிட்டு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
நூறு நாட்களைக் கடந்து போராடும் கதை ஆசிரியர்களால் ஏற்கெனவே எழுதிய கதைகளில் திருத்தம் செய்ய முடியாமல் ஹாலிவுட் சினிமா நெருக்கடியில் இருக்கிறது. எழுத்தாளர்களை ஆதரித்து நடிகர்களும் களத்தில் இறங்கி உள்ளதால் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆன்லைன் வெப் சீரியல் உள்ளிட்ட எந்த நிகழ்வும் வெளிவராமல் ஹாலிவுட்டே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
படிக்க: செயற்கை நுண்ணறிவு : அறிவியல் உலகில் அறம் சார்ந்த கேள்விகள் !
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், தயாரிப்பு நிறுவனங்கள் தற்காலிகமாக பின்வாங்க கூடும் என்று பலரும் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியை எப்படி புறக்கணிப்பது என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிகழ்வையொட்டி சன் டி.வி வெளியிட்ட செய்தி தொகுப்பில், “ஆரம்ப காலம் தொட்டே அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் ஹாலிவுட் சினிமா இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. அதை எப்படி புறக்கணிப்பது?” என்று கூறி தயாரிப்பாளருக்கான வர்க்க பாசத்தை காட்டிக்கொண்டது.
ஆனால், தகவல் தொழில்நுட்பம், பத்திரிக்கை, வணிகவியல் துறை, சினிமா என அனைத்திலும் ஊடுருவிவரும் AI தொழில் நுட்பத்தின் விளைவால் கோடிக்கணக்கில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் நிலையிலிருந்து இதைப் பார்க்க வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தான் மனித குலத்தை இடையறாது முன்னேற்றியுள்ளது என்ற போதிலும், இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த நவீன சமுதாயத்தில் பெருமுதலாளிகளின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த முதலாளித்துவ அமைப்பு முறையை மாற்றி ஒரு சோசியலிச சமுதாயத்தை அமைப்பதன் மூலம் தான் அறிவியல் தொழில்நுட்பங்களை மக்களின் நலனுக்காக பயன்படுத்த முடியும்.
கலை