வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!

போலீசு, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் பார்ப்பனிய - சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாகவே உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் தெருவில் சுமார் 50-ற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி, அவர்களின் பயன்பாட்டிற்காக உள்ள மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் ஆதிக்க சாதி வெறியர்களால் மனித மலம் கலக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிகழ்வானது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இதயமுள்ள ஒவ்வொரு மனிதரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதைவிட அதிர்ச்சிக்கு உரியது, இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட ஆதிக்க சாதிவெறி நாய்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதும், ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் சேர்ந்து பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க சதி செய்துக்கொண்டிருப்பதும் தான்.

படிக்க : வேங்கைவயல் சம்பவம்: எது தேசிய அவமானம்?

இறையூர் என்பது சிறிய கிராமம். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஆனால் தமிழக போலீசு குற்றவாளிகளை இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை. மாறாக, குற்றவாளி யாரெனத் தெரிந்து பாதுகாத்து வருகிறது.

வேங்கைவயல் பிரச்சனை வெளியான சில தினங்களில், சமூக அக்கறை கொண்ட சுதந்திர பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தங்களுடைய கள ஆய்வின் மூலமாக யார் இத்தகைய மனிதத் தன்மையற்ற செயலை செய்திருக்கக் கூடும் என்பதை அடையாளப்படுத்தினர்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதுள்ள சாதிய வன்மம் காரணமாக, முத்தரையர் சாதியைச் சேர்ந்த முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மாவின் கணவர் முத்தையாதான் இதை செய்திருக்கக்கூடும் என்று வெளிக்கொண்டு வந்தனர். மேலும் வேங்கைவயல் மக்களும் முத்தையாதான் மலத்தை கலந்திருக்கக்கூடும் எனக் குற்றம் சாட்டினர்.

மேற்கூறியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், இவ்வழக்கில் பெயரளவிற்கு ஆதிக்க சாதி தரப்பிலிருந்து ஒன்றிரண்டு பேரை விசாரித்துவிட்டு தாழ்த்தப்பட்ட இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதுடன், மலம் எப்படி இருந்தது என வரைந்து காட்ட சொல்லியெல்லாம் சித்ரவதை செய்தது தமிழ்நாடு போலீசு.

தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் தமிழக போலீசின் அக்கிரமங்கள் அம்பலமாகி, அதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற பிறகுதான் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி யும் ஆதிக்க சாதி வெறியர்களை காப்பாற்றும் நோக்கில் தான் செயல்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க சதி வேலையில் ஈடுபட்டு வருகிறது. சி.பி.சி.ஐ.டி -யானது விசாரணை செய்த 147 பேரில் 119 பேர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர் என்றும், குறிப்பாக 11 பேர் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பார்கள் என்றும் சந்தேகித்துள்ளதாக கூறியுள்ளது. இந்த 11 பேரில் 9 பேர் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களாவர்.

சி.பி.சி.ஐ.டி குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளும் விசாரணை முறை மிகவும் கவனிக்கத்தக்கது. முதலில் குடிநீர்த் தொட்டியில் கலக்கப்பட்ட மலத்தின் மாதிரியை எடுத்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலமானது ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என்று கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த மாதிரியுடன், விசாரணையின் மூலம் சந்தேகப்படும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 11 பேரின் டி.என்.ஏ மாதிரியை ஒப்பிட்டு இவர்களில் யாருடைய மலம் குடிநீர்த்தொட்டியில் கலக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க போகிறார்களாம்.

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம் யாருடையது என்பதை கண்டறிவதற்கும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கண்டறிவதற்கும் என்ன தொடர்பு? யாருடைய மலம் குடிநீர்த்தொட்டியில் இருக்கிறதோ அவர்கள் தான் குற்றவாளிகள் என்பதுதான் சி.பி.சி.ஐ.டி மற்றும் நீதிமன்றத்தின் வாதம். குற்றவாளிகள் தங்களுடைய மலத்தை தான் குடிநீர் தொட்டியில் கலந்து இருக்க வேண்டுமா? பிறருடைய மலத்தை  கலந்திருக்கலாமே? என்ற சாதாரண கேள்வி கூட நீதிமன்றத்துக்கும், போலீசுக்கும் எழவில்லை.

இது அப்பட்டமாக பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் நடவடிக்கை. இதை பாதிக்கப்பட்ட மக்களே அம்பலப்படுத்தி வருகின்றனர். டி.என்.ஏ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்ட 11 பேரில், தாழ்த்தப்பட்ட மக்களைச் சேர்ந்த எட்டு பேர், இது பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் நடவடிக்கை என்று கூறி சோதனை முறையை புறக்கணித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது தமிழக போலீசு.

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் வேங்கைவயல் மக்கள், சி.பி.சி.ஐ.டி விசாரணைக் குழு பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக மாற்றப்பார்க்கிறது; சி.பி.சி.ஐ.டி விசாரணைக் குழுவையும் மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

படிக்க : வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்கி, ஆதிக்க சாதிவெறியர்களை காப்பாற்றுவதற்காக அப்பட்டமாக சதி செய்துக் கொண்டிருக்கிறது அரசு. இந்த பிரச்சனையில் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்கள் நடத்தும் சாதிவெறியாட்டங்களை பாதுகாப்பதுதான் இந்த அரசின் பணியாக இருந்துள்ளது. போலீசு, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் பார்ப்பனிய – சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாகவே உள்ளன.

இந்த சாதிய அரசிடம் நாம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும். சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தையும், தொடர்ச்சியான களப்போராட்டங்களை மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே இத்தகைய சாதிவெறியர்களை தண்டிக்கவும் சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டவும் முடியும்.

குயிலி