14.02.2023

வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு!
இது ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் அரசு!

பத்திரிகை செய்தி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை திட்டமிட்டு கொட்டியவர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தாங்களே மனிதக் கழிவைக் கொட்டியதாக ஒப்புக் கொள்ளச் சொல்லி தாழ்த்தப்பட்ட மக்களை  போலீஸ் தொடர்ச்சியாக சித்திரவதை செய்தது.

இதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் குரல் கொடுத்ததன் விளைவாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இப்பொழுதும் கூட குடிநீரில் மனிதக் கழிவு கொட்டிய விவகாரத்தில், தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சிபிசிஐடி போலீசு வற்புறுத்துவதாக தாழ்த்தப்பட்ட மக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மனு அளித்திருக்கிறார்கள்.

மனித சமூகம் உருவாகி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆன பிறகும் சாதி ரீதியாக இழிவுப்படுத்துவதற்காக மனிதக் கழிவை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் கொட்டிய விவகாரம் உலகை உலுக்கினாலும் அது ஒருபோதும் சாதி வெறியர்களையும் தமிழ்நாடு போலீசையும் கொஞ்சம் கூட அசைத்துப் பார்க்கவில்லை என்பதே உண்மை. அவர்கள் இதை பெருமையாகவும் மனு நீதியாகவே கருதுகிறார்கள்.

படிக்க : மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

மனிதக் கழிவை கொட்டிய விவகாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுட்டிக் காட்டும் நபரை விசாரிக்காத போலீசு, ஆதிக்க சாதி வெறியர்களை விசாரிக்காத போலீசு, தாழ்த்தப்பட்ட மக்களையே குற்றத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது ஆக மிகவும் கொடூரமான விஷயமாகும்.

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியும் ஆளும் வர்க்கமும் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அனாதைகளாக நிற்கிறார்கள் என்பதே உண்மை. அவர்களுக்கு ஆதரவாக மட்டுமல்ல நீதிக்காக நம்முடைய போராட்டம் தொடர வேண்டும்.

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவான போலீசின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் இச்செயலில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

ஆதிக்க சாதி வெறியர்களின் கூடாரமான இந்த அரசுக் கட்டமைப்பை இனி ஒரு போதும் பயன்படுத்த முடியாது. ஆதிக்க சாதி வெறி சங்கங்களை தடை செய்யவும் ஆதிக்க சாதி வெறியர்களை சமூகமே புறக்கணிக்கவும் சாதி என்பது இழிவு என்ற கருத்தினை மக்கள் மத்தியில் தொடர்ந்து விதைக்கவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க