மதுரை: தலித்துகள் மீதான ஆதிக்க சாதியினரின் கொலைவெறித் தாக்குதல்!

சாதியை வைத்து மீண்டும் மக்களை பிளப்பதின் மூலம் தங்கள் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டிர கட்டமைப்பிற்குள் சூத்திர அடிமைகளையும் நவீன கார்ப்பரேட் அடிமைகளையும் உருவாக்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல்.

0

துரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள காயாம்பட்டி கிராமத்தில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று ஆதிக்க சாதி வெறி பிடித்த கும்பல் ஒன்று தாழ்த்தப்பட்ட இளைஞர் கண்ணன் என்பவரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தி உள்ளனர். உடன் இருந்த அவருடைய மனைவியையும் சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் படுத்தியுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த கண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊரான காயம்பட்டிக்கு வந்திருந்தார்.

பக்கத்து ஊரில் இருந்த உறவினர்களை பார்க்க மனைவி குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆதிக்க சாதி வெறி கும்பல்(7 பேர்) ஒன்று கண்ணன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தை ஏன் ஊருக்குள் வேகமாக ஓட்டுகிறாய் எனக்கேட்டு தாக்கியுள்ளனர். அவர் அணிந்திருந்த துணிகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி உள்ளனர். தனது கணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் அவரை விட்டுவிடுங்கள் என கதறிய போதும் அவர்கள் நிறுத்தவில்லை. தடுத்துப் பார்த்தபோது அவர் அணிந்திருந்த சேலையையும் உருவியுள்ளனர். அருகில் உள்ள ஆடு மாடு மேய்க்கும் மக்கள் வந்த பிறகே நிறுத்தியுள்ளனர்.

இதைக் கேட்டு கொதித்துப் போன தாழ்த்தப்பட்ட மக்கள் உடனே காவல் நிலையத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அதன் பேரில் ஆதிக்க சாதி வெறியர்கள் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பிறகும் ஆதிக்க சாதி வெறியர்களின் கொட்டம் அடங்கவில்லை. மறுநாளே தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் தெருக்களை கடந்து செல்லும் போது துரத்தி அடிக்க வருவது ஆபாச வசவுகலால் திட்டுவது பெண்களை விரட்டுவது என திமிர் தனத்தை மேலும் மேலும் செய்து கொண்டிருந்தனர். கண்ணன் தாக்கப்பட்ட அன்றே கேள்விக்கு கேட்க போன மக்களை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் 26 பேர் மீது பொய் வழக்கை தொடுத்துள்ளனர். இதை போலீசும் எந்த விசாரணையும் இன்றி 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு போட்டு ஆதிக்க சாதியினரின் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குவதற்கு திட்டமிட்டு வேலை செய்கிறது போலீசு.இதே வேலையைத்தான் காயாம்பட்டிக்கு அருகில் உள்ள சிட்டம்பட்டி என்ற பக்கத்து கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் வழக்கை திரும்ப பெற சொல்லி தலித் மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறார்.


படிக்க: மதுரை: காயாம்பட்டி ஆதிக்க சாதி வெறியர்களால் தலித் இளைஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!


எந்த ஒரு தவறும் செய்யாத 26 பேர் வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் பொய் வழக்கை காண்பித்து போலீசு அச்சுறுத்துகிறது.

வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக பல்வேறு ஜனநாயக சக்திகளும் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் தான் ஆதிக்க சாதி வெறியர்கள் திமிராக இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்த அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் மீது குற்றத்தை சுமத்த முயற்சிக்கிறது.

இந்த காயாம்பட்டி கிராமத்தில் ஆதிக்க சாதியினர் குறிப்பாக கள்ளர்,அகமுடையார்,நாடார் கவுண்டர், நாயுடு போன்றோர் வசித்து வருகின்றனர். காயாம்பட்டி கிராமத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளே அதிகமாக உள்ளன. 30 வருடங்களுக்கு முன்பு ஆதிக்கசாதி வெறியர்கள் இது போன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதன் பிறகு இப்படிப்பட்ட வன்முறைகள் நடப்பது கடந்த இரண்டு வருடங்களாக தான்.

ஆதிக்க சாதியில் உள்ள சிலர் பிஜேபியில் உள்ளனர். இவர்கள் ஊரில் உள்ள பலரையும் இணைத்துக் கொண்டு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு சிறிய விநாயகர் கோவிலை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு கட்டி உள்ளனர். அந்த கோவில் அமைந்திருப்பது சாலையை ஒட்டியான இடம் அந்த வழியில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்கு போக முடியும். இந்த சாலையில் போகும் தலித் மக்களை திருவிழாக்களின் போது முறைத்துப் பார்ப்பது சீண்டுவது போன்ற வேலைகளை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்கள்.


படிக்க: மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை | களவீடியோ


கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது காயாம்பட்டி மேடு என்ற அருகில் உள்ள கிராமத்தில் இருந்த தலித் மக்கள் காயாம்பட்டி விநாயகர் கோவில் வழியில் சென்றபோது ஆதிக்க சாதி வெறியர்களால் தாக்கப்பட்டனர்.
போலீஸோ வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு போட்டுவிட்டு ஆதிக்க சாதி வெறியர்களை மென்மையாக கையாண்டது. கைது கூட செய்யவில்லை.

இதன் நீட்சிதான் பொங்கல் அன்று நடந்த தாக்குதல். மத வெறியர்களின் வருகை சாதி வெறியையும் ஊக்கப்படுத்தியுள்ளது.

இதேபோல் மதுரை அருகில் உள்ள கள்ளந்திரி, மேலூர் அருகே உள்ள பழையூர்பட்டி, திருவண்ணாமலை, சேலம் போன்ற இடங்களிலும் பொங்கல் அன்று நடந்த தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்முறைகள் வெளிவந்துள்ளன.

ஜல்லிக்கட்டு, நீட், காவிரி நதிநீர் பகிர்வு, முல்லைப் பெரியாறு, ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, மீத்தேன் ஹைட்ரோகார்பன் பிரச்சனை,அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது, தில்லை நடராசர் கோவிலில் தமிழ் பாடும் உரிமை, கோ பேக் மோடி என பல்வேறு போராட்டங்களின் ஊடாக தமிழ் மக்கள் உயர்த்திப் பிடித்த சாதி மதம் கடந்த தமிழக மரபினை ஒழித்துக் கட்ட துடிக்கிறது காவி பாசிச கும்பல். சாதியை வைத்து மீண்டும் மக்களை பிளப்பதின் மூலம் தங்கள் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டிர கட்டமைப்பிற்குள் சூத்திர அடிமைகளையும் நவீன கார்ப்பரேட் அடிமைகளையும் உருவாக்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல். இந்த சாதி மத வெறியர்களுடன் இணைந்து எட்டப்பன்களாக மாறப் போகிறோமா என்பது நம் அனைவரின் முன்னுள்ள கேள்வி?

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க