அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை தி.மு.க. அரசு மூடிமறைப்பதற்கும் திசைத்திருப்புவதற்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இச்சம்பவம் தி.மு.க. அரசின் மக்கள்விரோதத் தன்மைக்கு ஒரு சான்று மட்டுமே. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதனைப் போல பல்வேறு நிகழ்வுகளைக் குறிப்பிட முடியும்.
டிசம்பர் மாதத் தொடக்கத்தில், பெஞ்சல் புயலால் வடதமிழ்நாட்டின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது; மக்கள் தங்களது உடைமைகளை இழந்தனர். ஆனால், அரசும் அதிகாரிகளும் மிகவும் மெத்தனமாக செயல்பட்டனர். முன்னெச்சரிக்கை செய்யப்படாமல் சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது.
இதனால், பல ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல இயலாமலும் தங்களது உடைமைகளைப் பாதுகாக்க முடியாமலும் தவித்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.
மக்களுக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணமும் வழங்காததால் ஆத்திரமுற்ற மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் இறங்கினர்; பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடி, காரைவிட்டுக் கீழே இறங்கி வராமல் காரில் இருந்தபடியே மக்களிடம் விசாரித்ததைக் கண்டித்து அவர் மீது சேற்றை வீசினர். இத்துடன், செங்கம் வட்டம் தண்டராம்பட்டு பகுதியில் 16 கோடி ரூபாய் செலவில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தரைமட்டமானது தி.மு.க. அரசின் ஊழலை அம்பலப்படுத்தியது.
ஆனால், பாதிக்கப்பட்டு உடைமை இழந்த மக்களுக்கு ரூ.2,000 என்ற அற்பத்தொகையை இழப்பீடாக வழங்கிவிட்டு மக்களை நிர்கதியாகக் கைவிட்டது தி.மு.க. அரசு.
டிசம்பர் 8-ஆம் தேதி, மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில் ஒன்றிய அரசு கொண்டுவர முயற்சிக்கும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது தி.மு.க. அரசு. இதன்மூலம், டங்ஸ்டன் திட்டத்தை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டது.
ஆனால், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஆய்வுகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடந்துவருகிறது. அத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதற்கெதிராக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இது, தி.மு.க. அரசுக்கும் தெரியும். அப்படியிருந்தும் மக்கள் போராட்டம் தீவிரமடையும் வரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக தி.மு.க. அரசு தி.மு.க. வாய்திறக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் எம்.பி.க்கள் இத்திட்டத்திற்கு தெரிவித்து எதுவும் பேசவில்லை. எதிர்ப்புத் இவையெல்லாம், தி.மு.க-வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தின.
மேலும், சுற்றுச்சூழல் சீர்க்கேட்டின் மையமாக மாற்றப்பட்டிருக்கும் வடசென்னையின் எண்ணூர் பகுதியில் சீர்க்கேட்டை மேலும் அதிகரிக்கும் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான கருத்துக்கேட்புக் கூட்டத்தை டிசம்பர் 20-ஆம் தேதி தி.மு.க. அரசு நடத்தியது. இத்திட்டத்திற்கு மக்கள் ஆதரவளிப்பதாகக் காட்டுவதற்கு அனல்மின் நிலைய ஒப்பந்தகாரர்களும் அதிகாரிகளும் ஆட்களைத் திரட்டி கருத்துக்கேட்புக்கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயன்றனர்.
இதற்கு அப்பகுதி மக்களும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு போனாலும் தற்போதுவரை இத்திட்டத்தைக் கைவிடுவதாக தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.
இவை மட்டுமின்றி, கொரோனா ஊரடங்கு காலத்தில் இறந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு நான்காண்டுகளாக அரசு வேலை வழங்கப்படவில்லை; பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யும் கோரிக்கைகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை; மருத்துவக் கழிவுகள் கேரளாவின் சட்டவிரோதமாக தமிழ்நாட்டின் எல்லையோர கிராமங்களில் கொட்டப்படுவதைத் தடுக்கவில்லை; கனிமவளக் கொள்ளை, இயற்கை சுற்றுச்சூழல் அழிப்புக்கெதிராக போராடுபவர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்களும் தொடர்கின்றன; மோடியின் எஜமான் அதானிக்காக தமிழ்நாட்டை திறந்துவிடும் போக்கு தீவிரமாகிறது; கல்வித்துறை, சுகாதாரத்துறை போன்ற பல துறைகளில் மெல்ல மெல்ல கார்ப்பரேட் திட்டங்கள் புகுத்தப்படும் செய்திகள் இந்த மாதத்திலேயே பலமுறை வெளிவந்துள்ளன.
இப்பிரச்சினைகள் அனைத்தின் போதும், அமைச்சர்களும் இப்பிரச்சினையில் தொடர்புடைய அதிகாரிகளும் திமிரடியாக பதிலளிக்கும் போக்கும் பிரச்சினையை திட்டமிட்டு திசைதிருப்பும் போக்கும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, ஜனநாயக சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றது.
இவையெல்லாம், தி.மு.க. அரசின் ஆட்சியின் அவலங்களையும் அதன் செயலின்மையையும் எடுத்துக்காட்டுகின்றன. ஒருபக்கம் கார்ப்பரேட் திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது அதற்கெதிராக போராடும் மக்களை ஒடுக்குவது; இன்னொரு பக்கம், அரசு அதிகார வர்க்கத்தின் இலஞ்ச ஊழல், முறைகேடுகளால், நிர்வாகம் செயலிழந்து போயிருப்பது; அமைச்சர்களின் அதிகாரத்துவப் போக்குகள் மக்களின் கண்டனத்திற்குள்ளாவது போன்றவை தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.
பாசிச பா.ஜ.க-வையும் அடிமை அ.தி.மு.க- வையும் நிராகரித்த தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க-விற்கு வாக்களித்துள்ளனர்; பாசிசத்திற்கு எதிராகப் போராடுகின்ற ஜனநாயக சக்திகள் தி.மு.க. அரசுக்கு ஆதரவளித்துள்ளனர்.
ஆனால், தி.மு.க-வோ அதன் கார்ப்பரேட் வர்க்கப் பாசத்தையும், மக்கள் விரோத அணுகுமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சரியான கூட்டணி அமைந்துவிட்டால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் எனக் கனவு காண்கிறது.
தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைப் பயன்படுத்தி பாசிச பா.ஜ.க., அடிமை அ.தி.மு.க., பினாமி விஜயின் த.வெ.க. போன்ற கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. இந்தப் போக்கானது, தமிழ்நாட்டில் மீண்டும் பா.ஜ.க- வின் அடிமை ஆட்சி அமைவதற்கே வழிவகுக்கும்.
எனவே, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகவும் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.
ஆம், பாசிச சக்திகளையும் அதன் பினாமி கூட்டத்தையும் விரட்டியடிப்பது, பாசிசத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கு துரோகமிழைக்கும் எதிர்க்கட்சிகளை அம்பலப்படுத்துவது என்ற இருமுனைப் போராட்டமின்றி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது.
தங்கம்
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
//எனவே, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகவும் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்//
விசிக, சிபிஎம், சிபிஐ, தவாக போன்ற கூட்டணிக் கட்சிகளும், கூட்டணிக்கு வெளியில் பிஜேபியை எதிர்க்கின்ற “ஜனநாயக சக்திகளும்” திமுகவின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராக விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து தான் வருகிறார்கள். ஆகவே யாருமே திமுகவை விமர்சிப்பதில்லை என்பது போல எழுத வேண்டாம். இன்னொரு புறம் இவ்வாறு விமர்சிக்கும் போதே தேர்தல் அரசியலில் பிஜேபிக்கு எதிராக திமுகவின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்ற புரிதலோடும் ஜனநாயக சக்திகள் இயங்கி வருகிறார்கள். நீங்கள் தான் அது குறித்து எந்த ஒரு தெளிவான நிலைப்பாடும் இல்லாமல் இருக்கிறீர்கள்.
ஆகவே இது விமர்சனம் செய்ய வேண்டிய நேரமில்லை தோழர்களே. சுய விமர்சனம் செய்ய வேண்டிய நேரம். உங்கள் நிலைப்பாடுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம்.