வேங்கைவயல் சம்பவம்: எது தேசிய அவமானம்?

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சனநாயக இயக்கங்கள் எவையும், சாதி அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அரசு அதிகாரத்திலும் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் யதார்த்த நிலையை கண்டுகொள்வதில்லை.

றையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தேக்கத் தொட்டில் சாதி வெறியர்களால் மலம் கலக்கப்பட்ட செய்தி பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. தமிழ்நாடு “பெரியார் மண், சமூகநீதியின் மண்” என்று பேசப்படும் சூழலில் இப்படிப்பட்ட மனிதத்தன்மையற்ற செயல் நடைப்பெற்றிருக்கிறது. இதைப்பற்றி கருத்து தெரிவித்த சனநாயக இயக்கங்கள் யாவும் இதை “மனித தன்மையற்ற செயல்” என்றும் “தேசிய அவமானம்” என்றும் கண்டித்துள்ளனர். ஆனால், இது தமிழகத்தில் நடந்த முதல் தேசிய அவமானம் இல்லை என்பதை நாம் பார்க்கத் தவறக்கூடாது.

2002 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் திண்ணியம் கிராமத்தில் முருகேசன் மற்றும் ராமசாமி ஆகிய இருவர் மனித மலத்தை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். மதுரை மேலஊரப்பனூரில் கடந்த 2003-ஆம் ஆண்டு முத்துமாரி என்ற பெண் மீது மலம் கலந்த தண்ணீர் ஊற்றப்பட்டது. 2004-ஆம் ஆண்டு சங்கன் என்ற நபரை சிறுநீர் குடிக்க வைத்தனர். 2019-ஆம் ஆண்டு, திருவாரூர் மாவட்டம் திருவாண்டுதுறை கிராமத்தைச் சேர்ந்த கொல்லிமலை என்ற நபருக்கு மனித மலத்தை வலுக்கட்டாயமாக ஊட்டி, அவரது உடலில் குற்றவாளிகள் சிறுநீர் கழித்தனர். கடந்த 10 ஆண்டுகளில், இதுபோன்ற 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் இதுபோன்ற குற்றங்களில் தண்டனை விகிதம் தமிழ்நாட்டில் 5-6% மட்டுமே.

யதார்த்த நிலை இப்படியிருக்க, “சாதி அமைப்பிற்கு எதிரான போராட்ட மரபை கொண்ட தமிழ்நாடு” என்று பெருமை பேசுவதில் எந்தப் பயனுமில்லை. சாதிக்கு எதிரான வலுவான போராட்ட மரபை கொண்ட சமூகத்தில் ஏன் தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறது என்பதுதான் கேள்வி.

சாதிய வன்கொடுமைகள் மற்றும் தீண்டாமையின் தீவிரத்தன்மை பற்றி, அது ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்கள் பற்றி இந்த ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் எந்த அக்கறையுமில்லை. அதனால் தான் தொட்டியை சுத்தம் செய்த அதிகாரிகளுக்கு குழாய்களிலும் மலம் கலந்த நீரின் பாதிப்பு இருக்கும் என்ற எளிய உண்மை தெரியவில்லை. குழாய்கள் மாற்றப்பட இரண்டு வாரங்கள் ஆயிருக்கிறது.


படிக்க: வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்


“ப்ளீச்சிங் செயல்முறையின் மூலமாக தொட்டி மற்றும் குழாய்களில் உள்ள கிருமிகளை அவர்கள் சுத்தம் செய்ததாக நினைக்கிறார்கள். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் கோப்பைத் தேநீரை என் வாயில் கொண்டு வரும்போதெல்லாம், அந்த மலம் கலந்த அசுத்தமான தொட்டியும், அதிலிருந்து நான் குடித்த தண்ணீரும் தான் நினைவுக்கு வருகிறது? இதற்கு அரசு என்ன செய்யப் போகிறது?” என்று கேட்கும் எளிய மக்களின் கேள்வி இந்த ஆட்சியாளர்களுக்கு புரிவதே இல்லை‌. அது புரிந்திருந்தால் இந்நேரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

மலம் கலந்த மனிதத்தன்மையற்ற குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்க முயற்சிக்கிறது போலீஸ். அதையும் சனநாயக இயக்கங்கள் தான் தங்களின் போராட்டங்கள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கின்றன. “தேசிய அவமானம்” என்று சொல்லக்கூடிய சம்பவம் பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்கவே இவ்வளவு போராட்டங்கள் வேண்டியிருக்கிறது. அவ்வாறெனில் நீதி கிடைக்க இன்னும் எத்தனை நாள் போராடவேண்டும்?

சமவத்துவ பூமி, சமூக நீதி ஆட்சி, பெரியார் மண் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்ச் சமூகம் இன்னும் வேர்மட்ட அளவில் சனநாயகப்படவில்லை. வெகு மக்கள் திரள் போராட்டங்கள் மூலமாக நடைமுறையில் சனநாயக உரிமைகளை சாதித்த போராட்டங்களை தமிழகம் கண்டதில்லை என்றே சொல்லலாம்.

பெரியாரின் திராவிடர் கழகத்தால் கோவில் நுழைவுப் போராட்டங்கள், தெருக்களில் செருப்பு அணிந்து செல்வது, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பது போன்ற போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்த போராட்டங்கள் எதுவும் “கோவில் நுழைவு, தெருக்களில் செருப்பு அணிவது, பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பது” போன்றவையாவும் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் என்ற சமூகநிலையை உருவாக்கவில்லை. அவை யாவும் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூட காகித சட்டங்கள் என்ற அளவில் தான் இருந்தன. ஆனால் யதார்த்தத்தில் தீண்டாமை உயிர்ப்புடனே இருந்து வந்துள்ளது.

இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தும் இட ஒதுக்கீடுகள் மூலம் இந்த அரசமைப்பின் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதற்கானவை என்ற அளவில் சுருக்கப்பட்டுவிட்டது. இப்படி சாதி அமைப்பிற்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் இந்த அரசமைப்பிலும் தேர்தல் அரசியலிலும் சாதியை நிறுவனமயபடுத்துவாதவே இருந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பெரிதும் பயன்பெற்றது இடைநிலை சூத்திர சாதியினர்தான்.


படிக்க: வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு || தோழர் மருது வீடியோ


இதற்கிடையில் பட்டியல் சமூக மேட்டுக்குடியினர் அரசு அதிகாரத்தில் தங்களின் பங்கை கேட்டு 1990-களில் ஏகாதிபத்திய கைக்கூலி அறிவுஜீவிகளின் ஆதரவுடன் அடையாள அரசியலை தொடங்கி வைத்தனர். இந்த அடையாள அரசியல் கட்சிகளும், திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டு வைத்து ஓட்டரசியலில் சாதியை நிறுவனமயப்படுத்துவதில் பங்காற்றின.

குறிப்பாக சாதி அமைப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இயக்கங்களின் தோல்வி என்பது இந்த இயக்கங்களின் கோரிக்கைகள் எதுவும் ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்நிலையில் எந்த சமூக மாற்றத்தையும் உருவாக்கிவிடவில்லை என்பது தான். இந்த இயக்கங்களால் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது உண்மையே. ஆனால் அப்படி முன்னேறியவர்களில் பெருமளவிலானவர்கள் “புதிய பார்ப்பனர்களாக” மாறி இந்த சாதி அமைப்பை பாதுகாக்கவே நினைத்தார்கள்.

இப்போதுகூட, வேங்கைவயல் சம்பவத்தை “தேசிய அவமானம்” என்று சொல்வதும், “அரசு குற்றவாளிகளை கைது செய்யவேண்டும், மலம் கலந்த குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும், அரசு இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று சொல்லி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சனநாயக இயக்கங்கள் எவையும், சாதி அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அரசு அதிகாரத்திலும் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் யதார்த்த நிலையை கண்டுகொள்வதில்லை.

அப்படி புரிந்து கொண்டிருந்தால், “தேசிய அவமானம்” அந்த தண்ணீர்த் தொட்டி அல்ல; இந்த அரசியல் அமைப்புச் சட்டமும், தேர்தல் அரசியலும், இந்த அரசதிகார அமைப்பும் தான் “தேசிய அவமானம்” என்பது புரிந்திருக்கும். ஆனால் இதனால் இந்த கட்சிகளுக்கு ஓட்டுகள் வந்து சேராது என்பதால் அதைப்பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதனால்தான் குடிநீர் தொட்டியை ” தேசிய அவமானம்” என்று பொங்கும் இவர்களால் இந்த அரசமைப்புச் சட்டம், அரசதிகாரம் ஆகியவை மக்கள் விரோதமானது என்று சொல்ல முடிவதில்லை.

இப்போது அந்த தொட்டியை இடிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அது இன்னொரு வேங்கைவயல் உருவாவதை தடுக்கப் போவதில்லை. ஏனெனில் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் அதிகாரத்தை ப்ளீச்சிங் பொடி போட்டு கழுவ முடியாது.

ராஜன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க