“தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதை கண்காணிக்க வேண்டும்; அவ்வாறு கண்டறியும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்; பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான குறிப்பிட்ட வண்ணக் கயிறுகளையோ, வளையங்களையோ, மாணவர்கள் அணிந்துவரக் கூடாது; குறிப்பாக, சாதிய அடையாளத்தோடு நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு வருவதை அனுமதிக்கக்கூடாது” என கடந்த ஜூலை 31-ம் தேதியன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்.

இதற்கு முன்னதாக, 2018 பேட்ச் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் தமிழகப் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்ட போது, பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளத்தை குறிக்கும் வகையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதையும் வகுப்பறைகளில், மதிய உணவு இடைவேளையில், விளையாட்டில் இந்த பாகுபாடு கடைபிடிக்கப்படுவதையும் கண்டறிந்த இவர்கள் இதனை தவிர்க்க வழிவகை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்கண்ட சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியிருக்கிறது.

இந்நிலையில், ”கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் எச்.ராஜா. செய்தியாளர்கள் சந்திப்பிலும் பொங்கினார் அவர்.

படிக்க:
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
♦  2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

எச்.ராஜாவின் டிவிட்டர் பதிவுக்கே அடிபணிந்த அடிமை எடப்பாடி அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ”இந்த சுற்றறிக்கை எனது கவனத்துக்கு வராமலேயே அனுப்பபட்டிருக்கிறது. பள்ளிகளில் பழைய நிலையே தொடரும்” என சுற்றறிக்கை அனுப்பி பதினைந்து நாள் கழிந்த நிலையில் ஆக-15 அன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அரசாங்கத்திலோ, இந்த அரசு இயந்திரத்திலோ எந்த ஒரு அதிகாரத்திலும் இல்லாத ஒரு நபர் மிரட்டுவதற்கு ஒரு அரசாங்கமே பணிந்து தாம் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுகிறது என்றால் இங்கு நடப்பது என்ன சட்டத்தின் ஆட்சியா ? இல்லை சங்கிகளின் ஆட்சியா?

பள்ளி மாணவர்களிடையே சாதிய பாகுபாடு கடைபிடிக்கப்படுவதும்; குறிப்பாக மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வண்ணக் கயிறுகள் அணிந்து வருவதும் இதுவரை தமிழகம் அறிந்திராத அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றுமில்லை.

h raja tweetகாப்புக் கயிறுகளோ, மந்திரித்துக் கட்டப்படும் கயிறுகளோ மஞ்சள், கருப்பு, சிகப்பு, பச்சை என்று தனித்தனி கயிறுகளாகத்தான் கட்டியிருப்பார்கள். எடப்பாடி, ஓ.பி.எஸ். தொடங்கி, பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள், சினிமா பிரபலங்கள் சிலரின் கைகளிலும் இத்தகையக் கயிறுகளைக் காண முடியும். ஆனால், பள்ளி மாணவர்கள் அப்பட்டமாக சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் இரண்டு வண்ணக் கயிறுகளைச் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

தேவர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பும் மஞ்சளும்; நாடார் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பும் நீலமும்; தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பச்சையும் சிவப்பும் மற்றும் நீலம்; வன்னியர் என்றால் மஞ்சள் கயிறு என்று ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு சாதிய அடையாளம் உண்டு.

இந்த சாதியக் கயிறுகளைத்தான், மத நம்பிக்கை தொடர்பான விசயம் என்றும் இதில் அரசு தலையிட உரிமையில்லை என்றும் கயிறு திரிக்கிறார் எச்.ராஜா.

”மாணவர்கள் கயிறு கட்டிவருவதால் என்ன பிரச்சினை வந்துவிட்டது? சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? கலவரம் நடந்துவிட்டதா?” என நியூஸ்18 தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றுப்பேசிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த சசிரேகா என்பவர் கேள்வியெழுப்புகிறார். ஏதோ, தேவையில்லாமல் இவ்விசயத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்பதுதான் இத்தரப்பின் வாதமாக இருக்கிறது.

இவர்களின் வாதப்படி, விதிவிலக்காகவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலவும் நடைமுறை என ஒதுக்கித்தள்ளிவிட முடியுமா?

Sengottaiyan
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

”மாணவர்களிடையே சாதிய பாகுபாடு கடைபிடிக்கும் போக்கு அங்கன்வாடி அளவிலேயே ஆரம்பித்துவிடுகிறது” என்கிறார் எவிடன்ஸ் கதிர். மதுரை மாவட்டங்களில் அங்கன்வாடிகளில் மாணவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்படுவதாகவும்; அங்கன்வாடியில் வழங்கப்படும் தட்டுக்களை பயன்படுத்த மறுத்து ஆதிக்கசாதியினர் வீட்டு பிள்ளைகளுக்கு கிண்ணம் கொடுத்து அனுப்புவதையும்; திருநெல்வேலியில் அங்கன்வாடி ஒன்றில் இரட்டைக்குடம் வைக்கப்பட்டிருந்ததும், ஆதிக்கச்சாதியினருக்கான குடத்தில் தாழ்த்தப்பட்டசாதியைச் சேர்ந்த சிறுவன் தண்ணீர் எடுத்துக் குடித்ததற்காக அங்கன்வாடி ஊழியர்களால் தாக்கப்பட்டதையும் இவ்விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதையும் ஆதாரங்களோடு குறிப்பிடுகிறார். மேலும், தென்மாவட்டங்களில் சாதிரீதியாக மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்பாக ஆண்டுக்கு சராசரியாக 60 வழக்குகள் பதிவாகிறது என்கிறார், அவர்.

படிக்க:
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
♦ “காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

இதுபோன்று தென் மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள் சாதிரீதியாக மோதிக்கொள்ளும் போக்கு தொடர்பாக, கடந்த 2017-ம் ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணையம் இப்பிரச்சினையை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்ததோடு, இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸும் அனுப்பியிருந்தது.

அப்போதைய, நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அழைத்து, ”சாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகளை கட்டி வரும் மாணவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன் பின்னரும் கயிறு கட்டிவந்தாலோ, சாதிவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டாலோ பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட மாணவரை நீக்கவும்” அறிவுரை வழங்கியிருந்தார்.

தாக்கப்பட்ட மாணவன் மாரிமுத்து

சமீபத்தில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேநிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் நட்புரீதியில் பேசியதற்காக 11-ம் வகுப்பு மாணவன் மாரிமுத்துவை அவரது செவித்திறன் பாதிக்கும் அளவிற்குத் தாக்கியிருக்கிறார்கள் அவருடன் பயிலும் சக ‘உயர்’சாதி மாணவர்கள்.

விழுப்புரம் சேந்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பா.ம.க. கொடி நிறத்தில் வளையம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வண்ணத்தில் வளையம் அணிந்து வந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஊடகங்களில் வெளியான செய்திகள். ஊடக வெளிச்சத்துக்கு வராமல், போலீசு நிலையங்களில் வழக்காகக்கூடப் பதிவாகாமல் புதைக்கப்பட்ட சம்பவங்கள் பல உண்டு.

இரத்து செய்யப்பட்ட அரசாணையின் நகல்

மாணவர்களிடையே நிலவும் இத்தகைய சாதிய பாகுபாட்டை களையும் முயற்சிக்கு பதிலாக சாதிவெறிபிடித்த ஆசிரியர்கள் சிலரும் சாதிய பாகுபாட்டோடுதான் மாணவர்களை நடத்துகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. பொதுவில் பள்ளிச் சூழலே சாதியின்பால் பாழ்பட்டிருக்கிறது என்பதாகத்தான் இதனை பார்க்க முடியும்.

பொள்ளாச்சி அருகேயுள்ள பள்ளியொன்றில் சாதிவெறிபிடித்த ஆசிரியர் ஒருவர், உயர்சாதி மாணவர்களை பிளஸ் என்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களை மைனஸ் என்றும் அழைத்தது பிரச்சினையாகியிருக்கிறது.

தருமபுரி பள்ளியொன்றில், ”பறபசங்களுக்கெல்லாம் படிப்பு வராது. டி.சி.-ய வாங்கிட்டு கிளம்பு”ன்னு சொல்லி தாழ்த்தப்பட்ட மாணவர் ஒருவரை சக மாணவர்கள் முன்பு அடித்து அவமானப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் ஒருவர். இதனால் மனமுடைந்த அம்மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூரில் தனியார் பள்ளியொன்றில் 12-ம் வகுப்பு மாணவரை சாதிரீதியாக ஆசிரியரே இழிவுபடுத்தியதால்; மாணவர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த பிப்-12, 2019 அன்று கடலூர் மாவட்டம் காரைக்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் சாதிய பாகுபாட்டோடு ஆசிரியர்கள் தங்களை இழிவாக நடத்துவதாகக் கூறி போலீசிடமும் முதன்மை கல்வி அலுவலரிடமும் முறையிட்டிருக்கின்றனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிவன்மத்திற்கு பலியான ரோஹித் வெமூலாவும், மருத்துவ மாணவி பாயலும் சந்திக்க நேர்ந்த கொடுமைகளை இந்த சம்பவங்கள் நினைவுபடுத்தவில்லையா?

கடந்த நவம்பர்-20, 2018 அன்று திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி சங்கர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதை மறந்திருக்க மாட்டீர்கள். கோனார் சாதியைச் சேர்ந்த இசக்கி சங்கரும், அகமுடையர் சாதியைச் சேர்ந்த சத்தியபாமாவும் காதலர்கள். இசக்கி சங்கர் வங்கி ஊழியர் என்பதாலும் இருவரும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இரு குடும்பத்தினரும் கலந்துபேசி சம்பந்தம் வரை பேசியிருக்கின்றனர்.

சாதி பெருசுகளே சமாதானம் ஆனபின்னரும், ”அக்காவை கீழ்சாதிகாரனுக்கு கட்டிவைக்கிறியே” என ஊரார் இழிவாகப் பேசியதாகவும் சாதியின் கௌரவத்தை காக்கவே கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறான் பத்தாம் வகுப்பு மாணவனான அய்யப்பன். சக பள்ளி மாணவர்கள் 5 பேரோடு சேர்ந்து இந்தக் கொலையை செய்திருக்கிறான். இப்பொழுது சொல்லுங்கள்… இதுவேறு அதுவேறு என்று ஒதுங்கி சென்றுவிட முடியுமா?

இதே தென்மாவட்டங்களில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு, சாதியப் பிரச்சினைகளின் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பகுதியில் உள்ள கிணற்றில் விசத்தைக் கலந்தனர் ஆதிக்க சாதிக் கிரிமினல்கள்.

அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் விழுந்த போதும், முகத்தில் தெரிக்கும் இரத்தத்தை துடைத்தெறிந்துவிட்டு கடந்து செல்வதைத்தான் “சமூகத்தின் இயல்பு” என்கிறார்கள். ”கயிறுகளால் என்ன பிரச்சினை? கலவரமா வந்துவிட்டது, சட்டம் ஒழுங்கா சீர்கெட்டது?” எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்களே அதுபோல, தீண்டாமையினால் என்ன பிரச்சினை, அறுவா எடுத்து வெட்டிகொள்ளட்டும் என்று அதுவரையில் காத்திருப்பார்களா?

பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியிருந்த சரியான உத்தரவு அறிக்கையை சாதிவெறிக்கு துணை போகும் எடப்பாடி அரசு ரத்து செய்திருக்கிறது, அதுவும் இந்துமதவெறியை வாயில் கக்கும் எச்.ராஜாவின் வேண்டுகோளின் பெயரில்.

தமிழகத்தை ஆளும் அடிமைக் கும்பல், தமிழகத்தின் நிலையை 70 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் சென்றுள்ளது. இச்சூழலை அப்படியே கடந்து செல்ல முடியுமா ? தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிவெறிதான் இந்துமதவெறியின் அடித்தளம் என்பதால் நாம் இரண்டு வெறியர்களையும் வேரறுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

– இளங்கதிர்

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!