சென்னை லயோலா கல்லூரியும், மாற்று ஊடக மையமும் இணைந்து ”வீதி விருது வழங்கும் விழா” என்கிற நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த ஜனவரி 19 மற்றும் 20-ம் தேதிகளில் இதன் ஆறாம் ஆண்டு விழா சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் “கருத்துரிமை ஓவியங்கள்” எனும் தலைப்பில் சில ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இதற்காக லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் சார்பில் காவல் துறையினரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (ஜனவரி 21ம் தேதி) காலை 11:30 மணிக்கு காவல் துறையில் தான் ஒரு புகார் அளிக்கவிருப்பதாகவும், இதற்கு இந்து உணர்வாளர்கள் மற்றும் தேசபக்தர்கள் காவல்துறை அலுவலகத்திற்கு திரளாக திரண்டு வர வேண்டும் எனவும் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டிவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது லயோலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி உள்ளார். பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளரான இழிபுகழ் நாராயணன் தரப்பில் இருந்தும் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சங்கி கும்பலோடு (சொல்வதெல்லாம் உண்மை புகழ்) லஷ்மி ராமகிருஷ்ணன், (குத்துவிளக்கு குத்துப் பாட்டு புகழ்) நடிகை கஸ்தூரி உள்ளிட்ட மாமிகளும் கைகோர்த்து லயோலா கல்லூரிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக இந்துத்துவ கும்பலின் சார்பாக கூலிக்கு அமர்த்தப்பட்ட இணையப் பொறுக்கிகள் சிலர் #loyolacollage, #BanAntiHinduLoyola எனும் ஹேஷ்டேகின் கீழ் களமிறக்கி விடப்பட்டுள்ளனர். ”லயோலா கல்லூரியைத் தடை செய்ய வேண்டும்” “லயோலா கல்லூரியை மத்திய அரசின் யு.ஜி.சி தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்” “லயோலா கல்லூரி தமிழகத்தின் ஜே.என்.யூ” என்பதில் துவங்கி “லயோலா கல்லூரி நக்சல்களின் புகலிடம்” என்பது வரை விதவிதமாக வெறுப்புப் பிரச்சாரத்தைக் கையிலெடுத்துள்ளது இந்துத்துவாவின் இணைய கூலி கும்பல்.

இந்தப் பிரச்சாரத்திற்கு தமிழகத்தின் பொதுவான முற்போக்காளர்களும், பெரியாரிய மற்றும் திமுக ஆதரவு செயல்பாட்டாளர்களும் சமூக வலைத்தளத்தில் தன்னிச்சையான முறையில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தை சங்கிகள் சமூக வலைத்தளத்தில் கிளப்பி சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் வெகுவிரைவில் அவர்களுக்கான பதிலடிகள் மேலும் கூர்மையடையும் என்பதை எதிர் பார்க்கலாம்.

பாஜகவின் தேசியச் செயலர் அறைகூவல் விடுத்ததும், ‘ஹிந்து’ உணர்வோடு ’திரளாகக்’ கலந்து கொண்ட ‘ஹிந்துக்கள்’ – மொத்தம் ஏஏஏஏஏழு பேர்

குறிப்பாக சங்கிகள் வைக்கும் குற்றச்சாட்டில் ஒன்று மேற்படி ஓவியங்கள் இந்து மதத்தை புண்படுத்துவதாக உள்ளது என்பதாகும். ஆனால், அவர்களே எடுத்துப் போடும் படங்களில் எந்த குறிப்பிட்ட கடவுளின் படங்குளும் இடம் பெறவில்லை என்பதை முதற்கட்டமாக இதற்கு எதிர்வினையாற்றுகிறவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் சூலாயுதம், உடுக்கை உள்ளிட்ட சில குறியீடுகள் உள்ளன என்றாலும், அவை எதுவும் இந்து மதத்திற்கே உரியனவாக காப்புரிமை பெறப்பட்ட குறியீடுகள் அல்ல என்பதும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அடுத்ததாக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக இருக்கின்றன என்பது சங்கிகளின் ஆதங்கம். இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால், மோடியோ மத்திய அரசோ விமர்சனத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட கடவுள்கள் என்பது தான். மோடியை விமர்சிப்பது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்றால் மோடி தான் இந்து மதமா? தங்களுடைய இந்த சிந்தனையே ”இந்து மத உணர்வை” புண்படுத்தக் கூடியது என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட சங்கிகளின் இணையக் கூலிப் படையினருக்கு மூளையில்லை என்பதை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தினமலரின் பொறுப்பான பணி – ஒவ்வொரு ஓவியங்களும் என்னென்ன சேதியைச் சொல்கின்றன என்பதை தமது பார்ப்பனக் குசும்போடு விவரித்திருக்கிறது.

கேரளாவுக்கு ஒரு சபரிமலை விவகாரம் போல் தமிழகத்திலும் வாகாக ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பி மதக் கலவரங்களைத் தூண்ட வேண்டும் என்கிற முனைப்பில் வெறியோடு செயல்பட்டு வருகிறது இந்துத்துவ கும்பல். ஒரு பக்கம் தமிழகத்தில் பெரிய கலவரங்களைத் தூண்டும் அளவுக்கான ஆள்பலம் தங்களிடம் இல்லை என்பதை உணர்ந்திருப்பதால் இதைப் போல் பகுதியளவில் சிறு சிறு பிரச்சினைகளைக் கிளப்ப திட்டமிட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவேதான் லயோலா விவகாரத்தை நேரடியாக ”கிறிஸ்தவ சதி” என்று திரும்பத் திரும்ப நிறுவ முயற்சிக்கின்றனர்.

சங்கிகளின் இரவல் மனதை ’புண்படுத்திய’ அந்த ஓவியங்கள் தோழர் முகிலனால் வரையப்பட்டவை. அவை அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்பட்டவைதான். அவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியும், காரணங்களும், நியாயங்களும் உள்ளன. அவை வெளியான போது இணைய வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டும், பகிரப்பட்டும் இருந்தன.

ரங்கராஜ் பாண்டே முதல் இதர இந்துத்துவ அறிஞர்கள் கல்லூரி கல்லூரியாக சுற்றி மோடிக்கும், பார்ப்பனியத்திற்கும் பஜனை பாடினாலும் லயோலா கல்லூரி மாணவர்கள் மோடி கும்பலை எதிர்க்கும் தமிழக மக்கள் உணர்வை வீரத்துடன் வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனவே  கல்லூரிகளில் இருக்கும் இத்தகைய இந்துத்துவ எதிர்ப்பு உணர்வை கட்டோடு தடை செய்வதே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கம். அதற்காகத்தான் லயோலாவை குறி வைத்து இவர்கள் கிளம்பியிருக்கிறார்கள்.

மோடியை வரைவது குற்றமென்றால் அந்த குற்றத்தை நாம் ஆயிரம் முறை செய்வோம். சங்கிகள் பொறுமும் வகையில் சந்து பொந்துகளிலெல்லாம் மோடியின் கேலிச்சித்தரங்களை வரைந்து தள்ளுவோம். பார்ப்பன பாசிசத்திற்கு பாடை கட்டும் வரை தமிழகம் ஓயப் போவதில்லை.

கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்களில் சில …

நானும் பாதிக்கப்பட்டேன் என்று பெண்கள் ஆணாதிக்கக் கிரிமினல்களின் மீது குற்றச்சாட்டு வைக்கையில், பாய்ந்து வரும் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட பாரதமாதா #MeToo சொல்வதில் இந்துத்துவ கும்பலுக்கு என்ன பிரச்சினை ? இந்துத்துவக் கிரிமினல்களுக்கு பெண்களை ஒடுக்கித் தானே பழக்கம். பாரத மாதாவாகவே இருந்தாலும், #MeToo என்று சொன்னால் கோவம் வராதா என்ன ?

அரியலூர் நந்தினியைக் கொன்ற மணிகண்டனும் ராஜசேகரும், அரியலூரின்  இந்து முன்னணி பொறுப்பாளர்கள். ராஜசேகரின் ரவுடிப் படையிலும் இந்து முன்னணியிலும் முக்கிய தளபதியாக செயல்பட்டதே மணிகண்டனுக்கு அத்தனை கொடூரமாக நந்தினியை கொல்லும் வெறியை வழங்கியுள்ளது. (மேலும்)

காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிஃபா-வைக் கடத்தி கோவிலில் அடைத்து வைத்துக் கொன்றவனைப் பாதுகாத்த பாஜக (மேலும்)

படுகொலை செய்யப்படும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் !

வினவு செய்திப் பிரிவு

7 மறுமொழிகள்

 1. மதவெறியற்ற ‘மனிதர்கள்’ இந்த பார்ப்ப்பனீய பாசிச மட(த)வெறியர்களை இந்தியாவிலிருந்தே துரத்தியடிப்போம்,தமிழகத்தை பார்ப்பனீய பாசிசத்தின் கல்லறையாக்குவோம்!

 2. முகிலனின் ஓவியங்கள் எல்லாம் சரிதான். ஆனால் எதற்காக ஒரு கிறிஸ்தவ மத கல்லூரியில் இவை கண்காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். இதில் இருக்கும் உள்நோக்கத்தை ஏன் கேள்வி கேட்கக்கூடாது. கிறிஸ்தவ மதத்தை ‌‌‌‌‌‌ பூடகமாக‌ தாக்கும் ஓவியங்களை லயோலா கல்லூரியில் வைக்க விடுவார்களா. இந்த கட்டுரையில் நேர்மை என்பது சிறிதும் கிடையாது. மொத்தத்தில் இந்துமதமோ கிறிஸ்தவ மதமோ எந்த மதமாக இருந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. மதம் சார்ந்த மதிப்பீடுகளையும் வெறித்தனத்தையும் மாணவர்களிடம் விதைப்பதை இதன் மூலம் தடுக்கலாம்.

 3. மோடியை பற்றி பாராட்டி எழுதினாலும் அதுவும் மோடியை கிண்டல் பண்ணுகவதாகத்தான் முடியும்.

  உதாரணம் – மோடியின் ஆட்சியில் கருப்பு பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
  மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்
  மோடியின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக பயமின்றி வெளியில் செல்லலாம்
  மோடியின் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.
  மோடியின் ஆட்சியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்
  தாக்கப்படுவதில்லை.

  போதும் இதற்கே என்னால் சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை

 4. நான் கிறிஸ்துவர்களை பற்றி சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு மேலும் ஒரு ஆதாரம் இந்த லயோலா கல்லூரி விவகாரம்.

  இதே லயோலா கல்லூரியில் கிறிஸ்துவமதத்தை இழிவு படுத்தியோ அல்லது இஸ்ரேல் நாட்டை இதே போல் அசிங்கப்படுத்தியோ ஓவியம் வரைந்து வைத்தால் விட்டு விடுவார்களா ?

  லயோலா கல்லூரி தேசவிரோத சக்திகளின் கூடாரமாக இருக்கிறது. #BanAntiHinduLoyola

 5. எங்களுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று சொல்லும் லயோலா கல்லூரி இதேபோல் கிறிஸ்துவமதத்தை பற்றி ஒரு ஓவியம் வரைந்து வைத்தால் விட்டு விடுவார்களா ? எவ்வுளவு அலட்சியம்…. #BanAntiHinduLoyola #BanAntiHinduCommunist

 6. இதுல ’இந்து’ மதம் எப்படி புண் பட்டுச்சுன்னு மட்டும் சொல்லவே மாட்டீங்களா? புகார் கொடுத்ததும் கல்லூரி மன்னிப்பு கோருகிறது. காவல்துறை படங்களை அகற்றுகிறது.

  சங்கிகளுக்கு எதிராக எங்கள் மனம் புண்படுகிறது என்று புகார் கொடுத்தால் காவல்துறை இது போல் நடவடிக்கை எடுக்குமா?

  அதில் பொந்து மதத்தை புண்படுத்தும் எந்த விசயமும் இல்லை என எதிர்மனு கொடுத்தால் போராடினால் என்ன?

 7. மோடி அரசின் தோல்வி, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார தேக்கம் ஆகியவை பெரும்பாண்மையான மக்கள் மத்தியில் விவாத பொருளாககூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் பா.ஜ.கவினர். அவர்களுக்கு கிடைத்த அல்வா இது போன்ற விசயங்கள். இதை ஊதி பெரிதாக்குவார்கள். இந்து மத பிரச்சணையாக்குவார்கள்.

  விவசாயிகள் பிரச்சணைகள் என அவர்களுக்கு பலவீனமான பிரச்சனையை விடுத்து ஒரு அல்வா எடுத்து அவர்களுக்கு ஊட்டிவிட்டிருக்கிறார்கள் முற்போக்காளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க