Monday, April 12, 2021
முகப்பு செய்தி இந்தியா “காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

கடந்த 10 நாட்களாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரிசர்வ் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ள காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கும் உண்மையறிவும் குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

-

370-வது பிரிவை நீக்கும் மோடி அரசின் முடிவால் காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டதாக உண்மையறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, ரிசர்வ் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ள காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்திருக்கும் உண்மையறிவும் குழு புதன்கிழமை டெல்லியின் தனது அறிக்கை வெளியிட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா. லெ) லிபரேசன் கட்சியைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணன், பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரீஸ், அனைத்திந்திய ஜனநாயக பெண்கள் கூட்டமைப்பின் மைமூனா முல்லா, மக்கள் இயக்கத்துக்கான தேசிய கூட்டணியின் விமல் பாய் ஆகியோர் அடங்கிய குழு, ஸ்ரீநகர், சோபூர், பண்டிபுரா, அனந்த்நாக், புல்வாமா, பாம்போர் போன்ற பகுதிகளுக்கு ஆகஸ்டு 9-ம் தேதி முதல் ஆகஸ்டு 13-ம் தேதி வரை சென்று வந்தது.

Kashmir Fact Finding Team
பத்திரிக்கையாளர்களிடம் பேசும் உன்மை அறியும் குழு.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஜீன் ட்ரீஸ், “மக்கள் அமைதியாக இருக்க நினைத்தாலும்கூட, எங்கே போராடிவிடுவார்களோ என அவர்களை கட்டுப்படுத்த கடுமையான இராணுவ கெடுபிடி அங்கே உள்ளது” என்றார்.

“எங்களுடைய கணக்கீட்டின்படி காஷ்மீரின் பத்து வீடுகளுக்கு ஒரு இராணுவ வீரர் நிறுத்தப்பட்டிருக்கிறார். எந்தவிதத்திலும் மக்கள் போராட்டம் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற அதிக அளவிலான இராணுவம் நிறுத்தப்பட்டிருக்கிறது” என்று மேலும் கூறினார். தங்களுடைய களப்பணியின்போது பாஜகவின் ஜம்மு காஷ்மீர் செய்தி தொடர்பாளர் தேச விரோதச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என அச்சுறுத்தியதையும் பகிர்ந்துகொண்டார்.

படிக்க:
காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !
♦ காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !

“மக்கள் கடுமையான சினத்தில் உள்ளனர். 370 பிரிவு நீக்கப்பட்ட பின், காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்த முக்கிய தொடர்பு அறுந்துவிட்டது எனவும் அவர்கள் உணர்ந்துள்ளனர். காங்கிரஸ் எங்களை பின்னாளில் இருந்து குத்தியது. பாஜக எங்களை நேரடியாக தாக்கியிருக்கிறது என நாங்கள் பேசிய ஒருவர் தெரிவித்தார்” எனவும் சொன்னார்.

கவிதா கிருஷ்ணன், காஷ்மீரில் அமைதி நிலவுவதாக இந்திய ஊடகங்கள் சொல்வது முற்றிலும் பொய் என்கிறார். ஏற்கெனவே காயம்பட்டுள்ள காஷ்மீர் மக்களை அவமானப்படுத்துவதுபோல தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

தாங்கள் எடுத்த வீடியோவை, பத்திரிகையாளர் சந்திப்பில் திரையிட டெல்லி பிரஸ் கிளப் மறுத்துவிட்டதாக உண்மையறியும் குழு குற்றம்சாட்டியுள்ளது.

“நாங்கள் சென்ற அனைத்து கிராமங்களிலும் ஏராளமான இளைஞர்கள் காரணமே இல்லாமல் போலீசால் கைது செய்யப்பட்டிருந்தனர்” என்றார் கவிதா. பலர் பயத்தின் காரணமாக கேமரா முன் வர மறுத்ததையும் கவிதா குறிப்பிட்டார்.

பல பெண்கள் சில இந்திய தலைவர்கள் சொன்ன கீழ்தரமான, ‘காஷ்மீர் பெண்களை மணந்துகொள்ளலாம்’ என்ற கருத்து குறித்து கண்டனம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார். “தங்களை யாரும் காப்பாற்ற வேண்டிய தேவை இல்லை. அவர்கள் எங்களிடம் இந்திய ஆண்களை மணப்பது பற்றி கேட்டார்களா? எனவும் பலர் கேட்டனர்” என்கிறார் கவிதா.

காஷ்மீரின் பொருளாதாரமும்கூட முடங்கியுள்ளதாக இந்தக் குழு தெரிவிக்கிறது. கடைகள் மூடப்பட்டு, வர்த்தகம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவது பீதி நிலவுவதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

“நாங்கள் செல்லும் இடமெல்லாம், இந்திய மக்கள் எங்களுக்கு எதிரிகள் இல்லை, தங்களுடைய போராட்டம் இந்திய அரசை எதிர்த்துதான் என பலர் தெரிவித்தனர். பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பது காஷ்மீரின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் மீது விழுந்த அடியாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இங்குள்ள முசுலீம்களைப் போலவே, இந்துக்களையும் அது பாதிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்” என்றார் உண்மையறியும் குழுவைச் சேர்ந்த விமல் பாய்.

ஏறக்குறைய 100 அரசியல் செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெரும்பாலான மக்கள் ‘சாத்தான் மோடி’ என சொன்னதையும் உண்மையறியும் குழு கூறியது.

“இந்தக் கணத்தில் காஷ்மீர், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சிறை. மோடி அரசின் முடிவு அறமற்றது, அரசியலமைப்புக்கு எதிரானது; சட்ட விரோதமானது” என தெரிவித்த ஜீன் ட்ரீஸ் உடனடியாக பிரிவு 370 மற்றும் 35 ஏ மீண்டும் ஜம்மு காஷ்மீரில் அமலாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தகவல் தொடர்பு துண்டிப்பும் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

வினவு செய்திப் பிரிவு
அனிதா
நன்றி
: தி வயர்

  1. காஷ்மீர் மக்கள் அமைதியாக இருக்க நினைத்தாலும் நீங்கள் பொய்களை பரப்பி அவர்களை வன்முறையில் இறங்க வைத்து விட்டு தான் மறுவேலை பார்ப்பீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களின் சதி திட்டத்தால் மக்கள் செத்தால் அதை வைத்து நீங்கள் மேலும் வன்முறை பயங்கரவாதத்தை தூண்டலாம் அதை வைத்து ஹிந்துத்துவா ஒழிக மோடி ஒழிக என்று நாட்டின் பல பகுதிகளிலும் வெறுப்பை தூண்டலாம்.

    உங்களின் சதிகள் எல்லாம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது, யாருமே கம்யூனிஸ்ட்களை நம்புவதில்லை, கம்யூனிஸ்ட்களும் பாம்பும் ஒன்று.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க