Friday, June 2, 2023
முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !

காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !

“இந்த இடமே அன்னியமாகப்படுகிறது, மூச்சே நின்றுவிடுவதுபோல் உணர்கிறேன். முடிந்த அளவிற்கு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோம்.”

-

இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள்
– இதுதான் அமித்ஷாவின்  ‘ அமைதி காஷ்மீர் ’ !

 ஸ்ரீநகர் லால் டெட் மகப்பேறு மருத்துவமனையின் நடைபாதையின் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் பிலால் மாண்டோ, வலது பக்கம் இருக்கும் அந்த அட்டைப்பெட்டியின் பக்கம் தனது பார்வையை செலுத்திய வண்ணம் இருக்கிறார். திருத்தப்படாத தனது தலைமுடியை கோதியவாறு, பெருமூச்சு விட்டுக் கொண்டே, அட்டைப்பெட்டியை தனது வலுவிழந்த கைகளால் மெல்ல தடவிக் கொண்டிருக்கிறார்.

“எங்களது கனவுகள் அனைத்தும் நொறுங்கிவிட்டது. இது அல்லாவின் விருப்பம். ஆனால் நாங்கள் இதனை எதிர்ப்பார்க்கவில்லை” என்கிறார் பிலால்.

ஆகஸ்டு 5-ம் தேதி காஷ்மீரின் சிறப்புச் சட்டமான 370-ஐ நீக்கி ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாக அறிவித்த மதவெறி பாஜக அரசு, காஷ்மீரில் தொலைத்தொடர்பு, இணையம் ஆகியவற்றை முடக்கிவைத்தது. மேலும், 144 தடை உத்தரவும் பிறப்பித்து ஜம்மு – காஷ்மீரை தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது.

திருத்தப்படாத தனது தலைமுடியை கோதியவாறு, பெருமூச்சு விட்டுக் கொண்டே, அட்டைப்பெட்டியை தனது வலுவிழந்த கைகளால் மெல்ல தடவிக் கொண்டிருக்கிறார்.

“ஆகஸ்டு 8-ம் தேதி ரஸியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வண்டிக்காக நாங்கள் 12 மணி நேரம் காத்திருந்தோம். ஆம்புலன்சோ வேறு வாகனங்களோ இல்லாததால், நானும் ரஸியாவும் எங்கள் வீட்டில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குப்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு நடந்தே சென்றோம்” என்கிறார் பிலால் மாண்டோ.

மாவட்ட மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால், முன் பரிசோதனைக்கு பிறகு ஸ்ரீநகரில் உள்ள லால் டெட் மகப்பேறு மருத்துவமனைக்கு ரஸியாவை அழைத்து செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

லால் டெட் மருத்துவமனையில் ரஸியா அனுமதிக்கப்பட்டார், பலனில்லை. குழந்தை இறந்துவிட்டது. “அவர்கள் இங்கு வந்து சேர்ந்த நேரம் மிகவும் தாமதம்” என்கிறார் மருத்துவர் ஒருவர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளும், உதவியாளர்களும் வீடு திரும்புவதற்கான ஒரே வழி ஆம்புலன்ஸ் மட்டும்தான். இறந்தவர்களை கொண்டு செல்வதற்கும் இதுதான் வழி. ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இருந்து நோயாளிகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற ஆம்புலன்சில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த மற்ற நோயாளிகள் ஏறிக்கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு மருத்துவமனையில் கொடுக்கப்படும். ஆம்புலன்சில் ஏறுவதற்கு நோயாளிகளுக்குள் தள்ளுமுள்ளு ஏற்படும். இடம் கிடைக்காதவர்கள், அடுத்த ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

ரஸியாவும் பிலாலும், ஆம்புலன்ஸ் பற்றிய மருத்துவமனையின் பொது அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

“இந்த இடமே எனக்கு அன்னியமாகப்படுகிறது, மூச்சே நின்றுவிடுவதுபோல் உணர்கிறேன். முடிந்த அளவிற்கு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோம். எங்களது பெற்றோர்கள், தங்களது முதல் பேரக்குழந்தைக்காக ஆவலுடன் வீட்டில் காத்துக்கொண்டிருப்பார்கள். இறந்த குழந்தையின் உடலை அவர்களிடம் எப்படி காட்டுவது?” என்று குழந்தையை போர்த்திய அட்டைப்பெட்டியைத் தடவிக்கொண்டே கண்ணீர் மல்கக் கூறுகின்றனர் பிலால் தம்பதியினர்.

ஒரு ஃபோன் பேச மூன்று நாட்கள்!

காஷ்மீர் முழுவதும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு நகர மக்களே தொடர்புகொள்ள முடியாமல் அல்லாடும் நிலையில் காஷ்மீரத்து கிராமப்புறங்களிலோ நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

வெளி மாநிலத்தில் இருக்கும் தங்களது உறவினர்களைத் தொடர்பு கொள்ள, 10 மாவட்டங்களில் 300 தொலைத்தொடர்பு மையங்களை அமைத்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது பெயரளவிற்கான ஏற்பாடே என்பது கீழ்க்கண்ட சம்பவம் மூலம் நிரூபணமாகிறது.

காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 பறிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு (ஆகஸ்டு 9), வஜாயட் நபியும் அவரது மனைவியும் பெங்களூரில் மருத்துவம் பயிலும் தங்களது ஒரே மகனான ஃபைசான் நபியை தொடர்பு கொள்ள, தற்காலிகமாக அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு மையத்திற்கு வந்தனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கு தனது மகளிடம் பேசுவதற்காகவும், அதே போல், நுரையீரல் புற்றுநோய்க்காக மும்பையில் சிகிச்சைப் பெற்று வரும் தனது சகோதரனை தொடர்புக் கொள்வதற்காக இளம்பெண் ஒருவரும் காத்திருந்தனர்.

“எங்கள் மகனை தொடர்பு கொள்வதற்காக, ஒரு நாள் முழுவதும் காத்திருந்தோம். பேசமுடியவில்லை. மறுநாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தோம். கூட்டம் மெல்ல நகர்ந்தது. மையத்திற்கருகே சென்றபோது, திடீரென தொலைபேசி ஊழியர் ‘இன்றைய அலுவல் நேரம் முடிந்துவிட்டது; இனி யாரும் பேச அனுமதியில்லை’ என்றார். நாங்கள் அவரை கெஞ்சினோம். ஆனால் அவரது காதுகளுக்கு எங்களது கோரிக்கை கேட்கவில்லை” என்கிறார் வஜாயட்டின் மனைவி மைமூனா.

தொலைத்தொடர்பு மற்றும் இணையதளம் முடக்குவதற்கு சரியாக ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் மைமூனாவின் மகன் ஃபைசான், தான் ஆகஸ்டு 8-ம் தேதி ஸ்ரீநகர் வருவதாகவும், அதற்கான விமானப் பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டதாகவும் மைமூனாவிடம் கூறியிருக்கிறார்.

இன்றாவது தனது மகனிடம் பேசிவிடலாம் என நம்பி, நபி தம்பதியினர் மூன்றாம் நாளான ஞாயிற்றுக் கிழமை விடியற்காலையிலேயே துணை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அவர்கள் நினைத்ததற்கு நேர்மாறாக நிகழ்ந்தது. அவர்களுக்கு முன்னே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இந்த தம்பதியினர் போலவே, டஜன் கணக்கான பெற்றோர்களும் இளைஞர்களும் தங்களது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேச தவித்துக்கொண்டிருந்தனர். 30 வயது நிரம்பியிருக்கும் ஒரு நபர் ஹாஜில் இருக்கும் தனது பெற்றோரை தொடர்புக் கொள்ள விரும்பினார். நகர்புறத்தில் இருந்து வந்திருக்கும் வயதான ஒருவர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது மகளிடம் பேசுவதற்காகவும், அதே போல், நுரையீரல் புற்றுநோய்க்காக மும்பையில் சிகிச்சைப் பெற்று வரும் தனது சகோதரனை தொடர்புக் கொள்வதற்காக இளம்பெண் ஒருவரும் காத்திருந்தனர்.

படிக்க:
காஷ்மீரில் ஊடகங்கள் முடக்கம் : எடிட்டர்ஸ் கில்டு கண்டனம்
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

“எனது மகனின் வாழ்க்கைக்காக நான் பெரிதும் கவலைக் கொள்கிறேன். எவ்வளவுதான் எனது மனதை திசை திருப்ப நான் முயற்சி செய்தாலும், சில கெட்ட நினைவுகள் எனது மனதை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன” என்கிறார் அரசு பள்ளி ஆசிரியரான மைமூனா. துணை ஆணையர் அலுவலகத்தில் தொலைபேசி சேவையை கையாளும் நபர், முந்தைய நாள் தன்னிடம் கருணை காட்டவில்லை எனக் கூறியவர், “இன்னும் சில நிமிடங்கள் தொலைபேசி சேவையை துண்டிக்காமல் வைத்திருந்தால், அவருக்கு ஒரு தாயின் ஆதிர்வாதம் கிடைத்திருக்கும்” என்கிறார்.

தமிழாக்கம் : ஷர்மி.
ஆதாரம்: the wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க